For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பொய்யான வாக்குறுதிகளை நம்ப வேண்டாம்-திமுக கூட்டணியை ஆதரியுங்கள்: பிரதமர் கோரிக்கை

Google Oneindia Tamil News

கோயம்பத்தூர்: பொய்யான வாக்குறுதிகளைக் கூறி வரும் எதிர்க்கட்சிகளை நம்ப வேண்டாம். திமுக, காங்கிரஸ் கூட்டணியை ஆதரியுங்கள் என்று பிரதமர் மன்மோகன் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.

சோனியா காந்தியைத் தொடர்ந்து நேற்று பிரதமர் மன்மோகன் சிங் தமிழகத்திற்கு வந்து திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்தார். கோவையில் நடந்த நடந்த கூட்டத்தில் அவர் பங்கேற்றுப் பேசினார். தங்கபாலுவும் உடன் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் மன்மோகன் சிங் பேசியதாவது:

நாட்டின் முன்னேற்றத்திற்கு தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது. மகாத்மா காந்தியினால் ஈர்க்கப்பட்ட மறைந்த ராஜாஜி, நேருவோடு இணைந்து செயல்பட்டதை நாம் மறக்க முடியாது. இதேபோல இந்திரா காந்தியோடு நெருங்கிய தொடர்பு கொண்ட காமராஜர் மற்றும் ராஜீவ்காந்தியின் தீவிர ஆதரவாளரான மூப்பனார் ஆகியோரின் செயல்பாடுகளை நாம் மறக்க முடியாது.

தற்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணியோடு இணைந்து செயல்படும் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழக அரசு கொடுத்த ஒத்துழைப்பினால் டெல்லியில் எனது தலைமையிலான அரசாங்கம் நிறைய பலன்களை பெற்றது. தமிழக தலைவர்களின் முயற்சியினால் நாடு வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருப்பதில் காங்கிரஸ் கட்சி பெருமைகொள்கிறது. எனவே காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியின் கரத்தையும், காங்கிரஸ் மற்றும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் கரத்தையும் நீங்கள் வலுப்படுத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு வாக்கு கேட்டு உங்கள் முன்பு நான் நிற்கிறேன். கடந்த 5 ஆண்டுகளில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் ஆகியவை இணைந்து பணியாற்றி தமிழக மக்களை முன்னேற்ற பாதையில் கொண்டு சென்றுள்ளன. இதற்கு காரணமான தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியை நான் பாராட்டுகிறேன். கருணாநிதியின் சீரிய தலைமையில் தமிழ்நாடு பல்வேறு துறைகளில் முன்னேறி தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு மாதிரி மாநிலமாக விளங்குகிறது.

நமது அரசாங்கம் பெண்களின் அந்தஸ்தை உயர்த்த உறுதி பூண்டு இருக்கிறது. நாம் இப்போது பஞ்சாயத்து ராஜில் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளித்து இருக்கிறோம். அதைப்போலவே நாடாளுமன்றத்திலும் அந்த இடஒதுக்கீட்டை அளிப்பதில் உறுதிபூண்டு இருக்கிறோம். பொருளாதார நிபுணர்கள் அடங்கிய ஒரு குழு ஆய்ந்து, இந்தியாவில் இருக்கின்ற மாநிலங்களில் முதல்நிலையில் இருக்கிற மாநிலம் தமிழ்நாடு என்று அறிவித்து இருப்பதை நான் படித்தேன்.

நீங்கள் உங்களுடைய வாக்குகளை ஆராய்ந்துதான் சீர்தூக்கித்தான் அளிப்பீர்கள் என்பதை நான் அறிவேன். அதில் எனக்கு சந்தேகமே கிடையாது. ஏன் என்றால் தமிழ்நாட்டு மக்களின் அறிவில் எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. நிச்சயமாக நான் சொல்கிறேன், எதிர்க்கட்சிகளின் பொய்யான வாக்குறுதிகளால் நீங்கள் தடம்மாற மாட்டீர்கள் என்பதை உறுதியாக நான் நம்புகிறேன். எனவே நான் உங்களை மீண்டும் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். காங்கிரஸ், தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்து நாம் ஒன்றுபட்டு உழைத்து தமிழ்நாட்டினுடைய வருங்காலத்தை ஒளிமயமாக்குவோம் என்று உங்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செய்து இருக்கிற சாதனைகள் எல்லோருக்கும் தெரியும். உங்களுடைய வாக்குகளை சாதனையின் அடிப்படையில், நீங்கள் அளிக்க வேண்டும் என்று நான் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.

இங்கு நம்முடைய முக்கியமான சிறப்பு திட்டங்களால், தமிழ்நாடு மிக முன்னேற்றம் அடைந்துள்ளது. அதே போன்று நம்முடைய திட்டங்களால், 2008-ல் உலக பொருளாதார நெருக்கடி வந்தபோது கூட, 8 சதவீத வளர்ச்சி மற்றும் உற்பத்தியை தொட்டு இருக்கிறோம் என்பதை நான் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

பாரத் நிர்மாண் திட்டத்தின் மூலம் கிராமபுற வளர்ச்சியினை அதனுடைய உள்கட்டமைப்பினை, கிராமபுற சாலைகளை, கிராமபுறத்திற்கு இருக்கின்ற மின்வசதிகளை, அங்கிருக்கிற நீர்பாசன வசதிசளை எல்லாம் நாம் செய்துகொடுக்கிறோம். மகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்பு அளிப்பு திட்டத்தின்கீழ் ஒவ்வொரு ஏழைக்குடும்பத்திற்கும் 100 நாட்கள் கண்டிப்பாக வேலை என்று சொல்கிற உறுதிமொழியை செயல்படுத்தி வருகிறோம். அதே போன்று ஒவ்வொரு குழந்தைகள் அவர்கள் யாராக இருந்தாலும், எந்த இனத்தை சார்ந்தவராக இருந்தாலும் அவர்களுக்கு எல்லாம் கல்வி உரிமையை அளித்து, அவர்களுக்கு அறிவு வளர்ச்சியை நாம் உறுதி செய்கிறோம்.

அதே போல் தேசிய உடல்நல மையத்தின் மூலம் இந்த நாட்டில் இருக்கிற மக்கள் ஒவ்வொருவருடைய உடல்நலத்தை பேணுகிறோம். அதே போல் நம் விவசாய உற்பத்தியை பெருக்குவதோடு, அவர்களுக்கு கட்டுபடியான விலையை கொடுப்பதற்கும், நாம் வேண்டிய ஏற்பாடுகளை செய்துள்ளோம். உணவு பாதுகாப்பு சட்டத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் எல்லோருக்கும் உணவு என்பதனை உறுதி அளிக்கிறோம்.

அதுமட்டுமல்லாமல் நம்முடைய அரசாங்கம், வெளிப்படையாக, ஒளிவுமறைவு இல்லாமல் நடைபெறுகிறது. அப்படி நடைபெற வேண்டும் என்பதற்காகவே தகவல் அறியும் உரிமை சட்டத்தை, நாம் நிறைவேற்றி உள்ளோம்.

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதில் சட்டரீதியாக சில தடைகள் ஏற்பட்டு உள்ளன. அந்த தடைகளையெல்லாம் நீக்கி, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் இந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் உறுதியாக இருக்கிறோம்.

காங்கிரசும், அதனுடைய கூட்டணி கட்சிகளும், சாதாரண பொதுமக்களின் தேவைகள் என்ன என்பதனையும், எல்லா இனத்து மக்களின் உணர்வுகளையும் தெரிந்து வைத்து இருக்கிற கட்சிகளாகும்.

காங்கிரஸ் தலைமையில் இருக்கிற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம், சமுதாய ரீதியில், பொருளாதார ரீதியில் பின்தங்கி இருக்கிற மக்களையும், தாழ்த்தப்பட்ட மக்களையும், மலைவாழ் மக்களையும், பின் தங்கியவர்களையும், சிறுபான்மையினரையும், பெண்களையும், குழந்தைகளையும் கவனித்து அவர்களுக்கு ஆவன செய்கிறது. சிறுபான்மையினர் சமுதாயத்திற்கு அவர்களுடைய உணர்வுகளுக்கு மரியாதை கொடுத்து, 90 மாவட்டங்களை எடுத்து, அவர்களுக்காக பல புதிய திட்டங்களை கொண்டு வந்து இருக்கிறோம்.

இப்போது தமிழகத்து மக்களை போல் சமூக நீதியை புரிந்தவர்கள் வேறு எவரும் இருக்க முடியாது. எனவே இந்த நேரத்தில் நான் உங்களுக்கு சொல்ல விரும்புவது, காங்கிரசுக்கும், அதனுடைய கூட்டணி கட்சிகளுக்கும், நிச்சயமாக அவர்கள், எல்லோருக்காகவும், உண்மையாகவும், நேர்மையாகவும் உழைப்பதற்கு, நீங்கள் வாய்ப்பளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார் அவர்.

English summary
PM Manmohan Singh yesterday charged that opposition front have announced false promises and asked the people not to go with them, but vote for DMK-Congress alliance in coming polls. The Prime Minister was attending a campaign meeting in Coimbatore. He said, many far-sighted schemes implemented by the government headed by Chief Minister Karunanidhi had turned Tamil Nadu into a model State in many ways, especially in rural development and agrarian transformation. If this trend is to continue, people must vote the DMK-Congress alliance. They must bear in mind the schemes that were born out of good relations between the DMK government in the State and the Congress-led government at the Centre, he urged.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X