• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அசன் அலிக்கு பாஸ்போர்ட்: புதுவை கவர்னர் நீக்கம்?-செயலாளரை நீக்கினார் மாயாவதி

By Chakra
|

Iqbal Singh
டெல்லி: பல லட்சம் கோடி ஹவாலா மோசடியில் கைதாகி சிறையில் உள்ள அசன் அலி கானுக்கு பாஸ்போர்ட் பெற்றுத் தந்த விவகாரத்தில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் இக்பால் சிங் பதவி நீக்கப்படுவார் என்று தெரிகிறது.

இதே விவகாரத்தில் தொடர்புடைய உத்தரப் பிரதேச மாநில முதன்மைச் செயலாளர் விஜய்சங்கர் பாண்டேவை பதவி நீக்கம் செய்து அம் மாநில முதல்வர் மாயாவதி உத்தரவிட்டுள்ளார்.

சுவிஸ் உள்பட பல வெளிநாட்டு வங்கிகளில் இவர் பல லட்சம் கோடியளவுக்கு பணத்தை ரகசியமாக முதலீடு செய்துள்ளார் அசன் அலி. இது குறித்து மத்திய கணக்கு தணிக்கைத் துறை, அமலாக்கப் பிரிவு, சிபிஐ, வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அலி மற்றும் அவரது பார்ட்னரான காசிநாத் தபுரியாவும் ஆகியோர் ரூ. 75,000 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது. இவருக்கும் தாதா தாவூத் இப்ராகிமுக்கும் தொடர்பு உள்ளதாகவும் புகார்கள் எழுந்தன.

இந் நிலையில் அசன் அலி மற்றும் தபுரியா இருவரையும் கடந்த மாதம் அமலாக்கப் பிரிவினர் கைது செய்தனர்.

இதற்கிடையே பிகார் மாநில ராஜ்யசபா எம்பியாக இருந்தபோது அசன் அலிக்கு போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்றுத் தந்ததாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் இக்பால் சிங் மீது அமலாக்கப் பிரிவு புகார் கூறியுள்ளது. பிகாரைச் சேர்ந்த அமலேந்து பாண்டே என்பவர் மூலமாக அலிக்கு இக்பால் சிங் உதவியதாகக் கூறியுள்ள அமலாக்கப் பிரிவினர் இது தொடர்பாக இக்பால் சிங்கிடம் விசாரணை நடத்த ஜனாதிபதி பிரதீபா பாட்டீலிடம் அனுமதி கோரியுள்ளனர்.

மேலும் இக்பால் சிங்குக்கு சம்மனும் அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் இருந்து கவர்னருக்கு சம்மன் எதுவும் வரவில்லை என்று கவர்னரின் சிறப்பு அதிகாரி ஜே.பி.சிங் மறுத்துள்ளார்.

இந்த நிலையில் இக்பால் சிங் திடீரென டெல்லி கிளம்பிச் சென்று மத்திய உள்துறை அமைச்சர் மந்திரி ப.சிதம்பரத்தை சந்தித்து இதுபற்றி விளக்கம் அளித்தார். மேலும் எழுத்துப்பூர்வமாகவும் அவர் தனது விளக்கத்தை கொடுத்தார். அதில், அமலேந்து பாண்டே தனது சகோதரர் உடல்நிலை சரி இல்லாமல் வெளிநாட்டில் இருக்கிறார். எனவே அவரை பார்க்க செல்ல சிலருக்கு பாஸ்போர்ட் வேண்டும் என்று கேட்டார்.அதில் அசன் அலி மற்றும் காசிநாத் தபூரியா மனைவி ஆகியோருக்கு பாஸ்போர்ட்டு கிடைக்க உதவும்படி கூறி இருந்தார்.

அதை ஏற்று நான் அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஐ.கே. குஜ்ராலுக்கு சிபாரிசு கடிதம் எழுதினேன். ஆனால் அசன் அலி யார் என்றே எனக்குத் தெரியாது. மனிதாபிமான அடிப்படையில் தான் நான் இந்த உதவியை செய்தேன் என்று இக்பால் சிங் கூறியுள்ளார்.

இக்பால் சிங் தன்னிலை விளக்கம் அளித்தாலும் அசன் அலிக்கு உதவியதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அவரை பதவி நீக்கம் செய்துவிட்டு வேறு ஒருவரை புதுச்சேரி மாநில கவர்னராக நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் முன் இக்பால் சிங்கே தானாக முன்வந்து பதவியை ராஜினாமா செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அசன் அலி, காசிநாத் தபூரியா மனைவி ஆகியோருக்கு பாஸ்போர்ட் கிடைக்க உத்தரப்பிரதேச முதன்மைச் செயலாளர் விஜயசங்கர் பாண்டேவும் உதவியதாக அமலாக்கப் பிரிவு கூறியுள்ளது. அவருக்கும் சம்மன் அனுப்பி விசாரணைக்கு வருமாறு உத்தரவிட்டுள்ளது.

விஜய்சங்கர் பாண்டே முதல்வர் மாயாவதிக்கு மிக நெருக்கமான அதிகாரியாவார்.

இந் நிலையில் அமலாக்கப் பிரிவினரின் அதிரடியால் அவரை பதவி நீக்கம் செய்து முதல்வர் மாயாவதி உத்தரவிட்டுள்ளார்.

ஆளுநரை திரும்ப அழைக்க அதிமுக கோரிக்கை:

இந் நிலையில் புதுச்சேரி அதிமுக மாநிலச் செயலாளர் நிருபர்களிடம் கூறுகையில், 2009ம் ஆண்டில் பதவியேற்றதிலிருந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிவரும் புதுவை துணைநிலை ஆளுநர் இக்பால் சிங்கை ஜனாதிபதி திரும்ப அழைக்க வேண்டும்.

அரசியலமைப்பில் துணைநிலை ஆளுநர் பதவி புனிதமான ஒன்று. அதற்கு பாதிப்பை ஏற்படுத்துவதை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆளுநர் பதவிக்கான புனிதத்தைக் காப்பாற்ற அடுத்த 2 நாட்களில் இக்பால் சிங்கை ஜனாதிபதி திரும்பப் பெற வேண்டும்ர்.

ஹசன் அலி பாஸ்போர்ட் விவகாரத்தில் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்படும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஐஏஎல் அதிகாரி அவரது பணியில் இருந்து மாற்றப்பட்டிருக்கும்போது, அந்த விவகாரத்துடன் தொடர்புடைய ஆளுநரை மட்டும் எப்படி பதவியில் நீடிக்க அனுமதிக்க முடியும்? என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
The Enforcement Directorate will question Puducherry Lt Governor Iqbal Singh and Uttar Pradesh principal secretary Vijay Shankar Pandey in connection with the passport procured by stud farm owner Hasan Ali Khan and some investments done by him abroad. Sources said summons have been already issued to Iqbal while the same to Pandey will be issued next week following questioning of a Bihar politician Amalendu Pandey by the Directorate in Mumbai.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more