For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மே 18 - தமிழீழ தேசிய துக்க நாள் - நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அறிவிப்பு !

By Shankar
Google Oneindia Tamil News

ஈழத் தமிழ் மக்கள் மீதான இலங்கை அரசின் இனப் படுகொலையின் உச்சமாக அமைந்த முள்ளிவாய்க்கால் படுகொலை நிகழ்ந்தேறிய நாட்களை நினைவுகூரும் வகையில் மே 18 ம் தேதி தமிழீழ தேசிய துக்க நாளாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் வெளியிட்ட அறிக்கை:

ஈழத்தமிழ் மக்கள் மீதான இலங்கை அரசின் இனப்படுகொலையின் உச்சமாக முள்ளிவாய்க்கால் படுகொலை நிகழ்ந்தது.

இந்த கொடிய நாட்களை நினைவுகூரும் வகையில் மே 18 ம் தேதி தமிழீழ தேசிய துக்க நாளாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.

இத் தேசிய துக்கநாளை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் மே 12- 18 க்கு இடைப்பட்ட நாட்களை நினைவேந்தல் வாரமாகத் தெரிவு செய்வதோடு அந் நாட்களில் துயர் பகிரவும், உணர்வு பெற்று எழுச்சி கொள்ளவும் ஏற்ற வகையில் நடைமுறைப்படுத்துவது எனவும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினரான திருமதி ஜெயமதி சிவசோதி அவர்களால் தனிநபர் மசோதாவாகப் பேரவையின்முன் வைக்கப்பட்ட இம் முன்மொழிவு அவை உறுப்பினர்களால் விவாதிக்கப்பட்டு சில மாற்றங்களின் பின்பு இலத்திரனியல் முறையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு பேரவை உறுப்பினர்கள் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சட்டங்கள் இயற்றப்படும் நடைமுறையினைப் பின்பற்றி, இலக்கம் 11 - 001 கொண்ட இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமையால் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது சட்டத் தகைமை கொண்ட தீர்மானமாகவும் இது அமைகிறது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது சட்டமூலம் தமிழர் வரலாற்றின் முக்கியமான பதிவொன்றினை மையம் கொண்டிருப்பது பொருத்தம் நிறைந்ததாகவும் உள்ளது. முள்ளிவாய்க்கால் தமிழர் வரலாற்றில் ஒரு முக்கியமான ஒரு கூட்டு நினைவு (Collective memory) ஆகும்.

யூதர்கள்மீது நாஜிகளால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு (Holocaust) எவ்வாறு யூத மக்களிடையே ஒரு வரலாற்றுக் கூட்டு நினைவாக அமைந்ததோ அதே போல தமிழர்களுக்கு, ஈழத் தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகில் வாழும் அனைத்துத் தமிழர்களுக்கும் முள்ளிவாய்க்கால், ஒரு முக்கியமான கூட்டு நினைவாக அமைகிறது. தமிழருக்கு எதிரான இனப் படுகொலையின் ஓர் இரத்த சாட்சியமாக இருக்கிறது.

துயர் தோய்ந்த, அவலம் நிரம்பிய கூட்டுநினைவுகள் ஒரு மக்கள் கூட்டத்தின் ஆழ்மனதில் காலம் காலமாக நிலைத்து நிற்கக் கூடியவை. வரலாற்றை மாற்றும் சக்தி கொண்டவை.

யூத மக்களின் தமக்கான தனி அரசு என்ற கனவு நாசி இனப் படுகொலையின் பின்பு தான் சாத்தியமாகியது. பாலஸ்தீன மக்களுக்கு என எதிர்காலத்தில் உருவாகவிருக்கும் தனிஅரசும் இம் மக்கள் தாம் அனுபவித்து வரும் ஒடுக்குமுறைகளின் கூட்டு நினைவினை அரசியல் இயக்கமாகத் தொடர்ச்சியாகப் பேணி வருவதனால் தான் சாத்தியமாகப் போகிறது. ஈழத் தமிழ் மக்களுக்கும் இந்த உதாரணங்கள் மிகவும் பொருத்தமானவையே.

தமிழீழத் தாயகத்தில் தமிழருக்கான முதல் அரசாக தமிழீழத் தனியரசு அமைக்கப்படுவதற்கான தேவையினை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையும் அதனைத்தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் நிகழ்வுகளும் நமக்கு மேலும் தெளிவாக உணர்த்தி வருகின்றன.

இனப் படுகொலைக்கு உள்ளாகியுள்ள ஒரு தேசம், தமது பாதுகாப்பான வாழ்வுக்கு தனி அரசினை அமைப்பதன் ஊடாக நியாயமும் நீதியும் தேடுவதென்பது அனைத்துலக சட்டங்களினிடையே ஏற்றுக் கொள்ளப்பட்டஒன்று.

தேசங்கள் தமக்கான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தனிஅரசினை அமைப்பதற்கும் அனைத்துலக சட்டங்கள் வழிவகை செய்கின்றன. ஆனால் இச் சட்டங்கள் எல்லாம் உலகின் பலம் வாய்ந்த அரசுகள் விரும்பும் போது மட்டும் தான் செயல் வடிவம் பெறுகின்றன. நீதியின்பாற்பட்டு அன்றி தமது சுயநலன் சார்ந்தே இந்த அரசுகள் தமது முடிவுகளை மேற்கொள்கின்றன. இத்தகையதொரு உலக ஒழுங்கில் தான் நாம் நமது இலட்சியப்பயணத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இது இன்று நாம் எதிர் நோக்கும் முக்கியமான ஒரு சவால் ஆகும்.

இந்த சவாலை எதிர் கொள்வதாயின், அனைத்துலகச் சமூகத்தினை நம்மை நோக்கித் திரும்பச் செய்ய நாம் ஒன்றுடனொன்று தொடர்புபட்ட, பல்வேறு அரசியல் இராஜதந்திர நகர்வுகளைத் தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டியுள்ளது.

தமிழீழத்தின் நலனையும் உலகின் பலம் மிக்க அரசுகளின் நலன்களையும் எவ்வாறு இணைய வைக்க முடியும் என்பது குறித்து கூடுதல் கவனம் கொடுக்க வேண்டியள்ளது.

உலகில் நியாயம் மறுக்கப்பட்ட மக்களாக நம்மை உலக சமூகத்தின் மனச்சாட்சியின் முன்னிறுத்தி அனைத்துலக சட்டங்களுக்கும் நடைமுறைகளுக்கும் உட்பட்டு நீதி கோரும் மக்களாக நம்மை வீச்சாக வெளிப்படுத்த வேண்டியுள்ளது. நாம் தனித்து நிற்காது உலகில் நியாயத்துக்காக, நீதிக்காகக் குரல் எழுப்புக்கூடிய அனைத்துச் சக்திகளுடனும் நமது கரங்களை நாம் இறுகக் கோர்க்க வேண்டியுள்ளது.

இதனால், தமிழர் அனைவரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டியுள்ளது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் கூட்டு நினைவு இதற்கான சக்தியை நம் எல்லோருக்கும் வழங்கும் என நம்புவோம்.

முள்ளிவாய்க்காலை நினைவுகூரும் தமிழீழ தேசிய துக்க நாளையொட்டிய நினைவேந்தல் வாரத்தில் நினைவு வணக்க நிகழ்வுகள், வழிபாடுகள், தீச்சுடர் ஏந்திய ஒருங்கு கூடல்கள், கருத்தரங்குகள், இரத்த தானங்கள் உட்பட்ட பல்வேறு வகையான நிகழ்வுகளை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பல்வேறு நாடுகளிலும் ஏற்பாடு செய்து வருகிறது.

இதே வேளை முள்ளிவாய்க்கால் நினைவாக தமிழ் மக்களாலும் தமிழ் அமைப்புக்களாலும் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகளுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது ஆதரவினை வழங்குகிறது.

-இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

English summary
The Transnational Government of Tamil Eelam (TGTE) will observe May 18 as the 'National Mourning Day of Tamil Eelam', and the week between May 12 and May 18 as the 'Memorial Week', to commemorate the 'massacre' of Tamil civilians by Sri Lankan forces fighting the LTTE.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X