பழ.நெடுமாறன் மீதும் கருணாநிதி அவதூறு வழக்கு
சென்னை: தமிழர் தேசிய இயக்கத் தலைவரும் உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவருமான பழ.நெடுமாறன் மீது முதல்வர் கருணாநிதி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
சென்னை செசன்ஸ் நீதிமன்றத்தில் முதல்வர் சார்பில் சென்னை நகர குற்றவியல் வழக்கறிஞர் ஷாஜகான் தாக்கல் செய்த மனுவில்,
பழ.நெடுமாறன் நிருபர்களுக்கு பேட்டியளித்த செய்தி கடந்த 17ம் தேதி காலை நாளிதழ் ஒன்றில் வெளியாகி உள்ளது. அந்தச் செய்தியில், தேர்தல் ஆணையத்தை முதல்வர் தொடர்ந்து வசைபாடுவது ஜனநாயகத்துக்கு எதிரானது. தேர்தல் ஆணைய நடவடிக்கையை எல்லோரும் பாராட்டுகிறார்கள். தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்படுவதால், தில்லுமுல்லு எதுவும் செய்ய முடியாத கோபத்தில் முதல்வர் வசை பாடுகிறார் என்று கூறியுள்ளார்.
பழ.நெடுமாறனின் இந்த குற்றச்சாட்டுக்கள் அடிப்படை ஆதாரம் இல்லாதது. வேண்டுமென்றே திட்டமிட்டு முதல்வர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் மத்தியில் மக்களுக்கு உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக அவரது பேச்சு அமைந்துள்ளது.
தேர்தல் முடிவு வெளி வருவதற்கு முன்பு மக்கள் மத்தியில் முதல்வரை பற்றி ஒரு தவறான எண்ணத்தை உண்டாக்கும் வகையில் பழ.நெடுமாறன் உள்நோக்கத்துடன் பேசி உள்ளார்.
தமிழக அரசு நிர்வாகத்தின் முதன்மையானவர் முதல்வர் என்பதை மறந்த நிலையில் நெடுமாறன் பேசி உள்ளார். இது அரசுக்கும், முதல்வருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே பழ.நெடுமாறனை அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது கருணாநிதி நேற்று 2 அவதூறு வழக்குகள் தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
