For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சாய்பாபாவின் வாரிசு யார்?-இப்போதைக்கு அறிவிக்கப்பட வாய்ப்பில்லை

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: சத்ய சாய்பாபாவின் மறைவைத் தொடர்ந்து புட்டபர்த்தியில் பெரும் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அவரது அடுத்த வாரிசு யார், ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளையின் எதிர்காலம் என்ன என்பது பெரும் கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் சாய்பாபாவின் வாரிசு யார் என்பது இப்போதைக்கு அறிவிக்கப்படாது என்றே தெரிகிறது. சில காலத்திற்கு அறக்கட்டளை நிர்வாகிகளே நிர்வாகத்தை தொடர்ந்து நடத்துவார்கள் என்றும் தெரிகிறது.

கிட்டத்தட்ட ரூ. 40 ஆயிரம் கோடி முதல் ரூ. 1 லட்சம் கோடி அளவுக்கு சொத்துக்களைக் கொண்டுள்ளது சாய்பாபா அறக்கட்டளை. இதை நிர்வகிப்பது தொடர்பாக அறக்கட்டளை உறுப்பினர்களுக்கும், பாபாவின் குடும்பத்தினருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. பாபா உடல் நலம் குன்றி படுத்த படுக்கையான நாள் முதலே இது வெடிக்கத் தொடங்கி விட்டது.

இதன் காரணமாகவே பாபாவின் உடல் நிலை குறித்த விவரங்களைக் கூட அவரது பக்தர்களால் அறிய முடியாமல் போய் விட்டது. பெரும் மர்மமான சூழலிலேயே சாய்பாபாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதன் காரணமாக ஆந்திர மாநில அரசு களத்தில் இறங்கி, பாபாவின் நிலை குறித்தும், அறக்கட்டளை நிர்வாகம் குறித்தும் உண்மை தகவல்களை அறிய அதிகாரிகள் குழுவை நியமிக்க நேரிட்டது.

அறக்கட்டளையின் தலைவராக இதுவரை சாய்பாபாதான் இருந்து வந்தார். அவர் மட்டுமே காசோலைகளில் கையெழுத்திடக் கூடிய அதிகாரம் பெற்றவராக இருந்தார். இதன் காரணமாக அறக்கட்டளையின் அடுத்த கட்டம் பெரும் தேக்க நிலையை சந்தித்துள்ளது.

பிற சாமியார்கள், மதத் தலைவர்கள் போல அல்லாமல், சாய்பாபா தனது குடும்பத்தினருடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணிக் காத்து வந்தார். எனவேதான் அவர்கள் தற்போது அறக்கட்டளையின் நிர்வாகத்தில் பங்கு கேட்கின்றனர். பாபாவின் உறவினரான ஆர்.ஜே.ரத்னாகர் அவர்களில் ஒருவர். இவர் கேபிள் டிவி ஆபரேட்டராகவும், காஸ் ஏஜென்சி உரிமையாளராகவும் உள்ளார். இவர் அறக்கட்டளையில் ஒரு உறுப்பினராகவும் உள்ளார். தனக்கு நிர்வாகத்தில் மிக முக்கியப் பொறுப்பு தர வேண்டும் என்று கோருகிறார் ரத்னாகர். இவர் சாய்பாபாவின் தம்பி மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு முன்பு இவரது தந்தை ஜனகராமையா அறக்கட்டளையில் உறுப்பினராக இருந்தார். அவரது மறைவைத் தொடர்ந்து ரத்னாகர் உறுப்பினரானார்.

அதேசமயம், அறக்கட்டளை செயலாளர் சக்கரவர்த்தி மற்றும் சில உறுப்பினர்கள், பல்வேறு பிரமுகர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோரைக் கொண்ட குழுவை அமைத்து அதன் மூலம் அறக்கட்டளையை நிர்வகிக்க வலியுறுத்தி வருகின்றனர்.

சக்கரவர்த்தியின் யோசனைக்கு அறக்கட்டளை உறுப்பினர்களான முன்னாள் தலைமை நீதிபதி பி.என். பகவதி, முன்னாள் ஊழல் கண்காணிப்பு ஆணையர் எஸ்.வி.கிரி உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். சக்கரவர்த்தி ஒரு ஐஏஎஸ் அதிகாரி ஆவார். பாபாவுடன் இணைந்து பணியாற்றுவதற்காக தனது பதவியை துறந்தவர் ஆவார்.

தற்போது இந்தப் பிரச்சினையில் அரசியலும் கலந்து விட்டதால் பெரும் குழப்ப நிலை காணப்படுகிறது.

கடந்த 1972ம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி அனந்தப்பூரில் உள்ள அறநிலைய உதவி ஆணையர் அலுவலகத்தில்தான் அறக்கட்டளை பதிவு செய்யப்பட்டது. இந்த அலுவலகமும் தற்போது பாபா அறக்கட்டளை விவகாரம் குறித்து பெருத்த மெளனம் சாதித்து வருகிறது. யார் அறக்கட்டளையை அடுத்து நிர்வகிக்க வேண்டும் என்பது குறித்து இந்த அலுவலகம்தான் கூற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அறக்கட்டளை பதிவு ஆவணத்தில் அறக்கட்டளையின் அறங்காவலர் குழுவில் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் நிறுவன அறங்காவலர் -அதாவது சாய்பாபா- அனுமதி பெற்றே செய்ய வேண்டும். நிறுவன அறங்காவலருக்கே மாற்றம் உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் உள்ளன என்று குறி்ப்பிடப்பட்டுள்ளது. ஆனால் நிறுவன அறங்காவலர் இல்லாத பட்சத்தில் அறக்கட்டளையில் எப்படி மாற்றம் செய்வது என்பது குறித்து குறிப்பு ஏதும் இல்லை.

தற்போதைய நிலையில், அறக்கட்டளை விவகாரத்தில் தலையிடும் திட்டம் இல்லை என்று ஆந்திர மாநில அரசு தெரிவித்துள்ளது. இதை ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டியே தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலவரப்படி சாய்பாபாவின் அடுத்த வாரிசு யார் என்பது குறித்து அறிவிக்கப்படாது என்றே தெரிகிறது. சில காலம் வரை அறக்கட்டளையே நிர்வாகத்தை கவனித்து வரும் என்றும் பிரச்சினைகள் சரி செய்யப்பட்ட பிறகுதான் அடுத்த வாரிசு, அறக்கட்டளையின் தலைவர் யார் என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என்று தெரிகிறது.

சாய் அறக்கட்டளை சொத்துக்கள் விவரம்:

ஸ்ரீ சத்ய சாய் மைய அறக்கட்டளையை ஏழைகளுக்கு இலவச கல்வி, இலவச மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை அளிப்பதற்காக கடந்த 1972-ம் ஆண்டு அந்த அறக்கட்டளையை சாய்பாபா உருவாக்கினார். அதன் தலைவராக சாய்பாப நீடித்து வந்தார். உலகம் முழுவதும் இருக்கும் சாய்பாபாவின் சுமார் 3 கோடி பக்தர்களிடம் இருந்து அந்த அறக்கட்டளைக்கு நன்கொடைகள் வந்து குவிகின்றன.

அதன் மூலமாக 165 நாடுகளில் சாய்பாபா அறக்கட்டளை சார்பாக வளர்ச்சி பணிகள் நடைபெறுகின்றன. புட்டபர்த்தி, ஹைதராபாத், பெங்களூர், சென்னை, கொடைக்கானல் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளிலும் அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துகள் உள்ளன.

இது தவிர, அறக்கட்டளையின் பல்வேறு அமைப்புகளிலும் ரொக்கமாகவும் ஏராளமான தொகை கையிருப்பாகவும் இருக்கிறது. உலகம் முழுவதும் பரவி உள்ள இந்த சொத்துகள் அனைத்தும் வரி விலக்கு பெற்றவை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Sathya Sai Baba's death has left a huge question mark on the future of the Sri Sathya Sai Central Trust, which is said to control assets whose worth could range anywhere from Rs 40,000 crore to over Rs 1 lakh crore. Sai Baba was the chairman of the central trust and the only person with cheque signing authority. Unlike other godmen, Sai Baba had maintained close links with his kin and they are now seeking a role. Baba's nephew R J Ratnakar, a cable operator and gas agency owner, is a member of the trust and is seeking a bigger role. Trust functionaries like secretary K Chakravarthy would rather have the organization run by professionals. The Andhra Pradesh government at present is not seeking to meddle in the affairs of the Sai Central Trust. Sources close to the central trust said that there will be no successor to Sai Baba soon and the trust will continue to take forward work entrusted by the Baba.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X