For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

21 குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன் சாய்பாபா உடல் நல்லடக்கம்!

Google Oneindia Tamil News

Sai Baba Trust Secretaries
புட்டபர்த்தி: மறைந்த சாய்பாபாவின் உடல் முழு அரசு மரியாதையுடன் இன்று காலை புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்தி நிலையத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. நாட்டின் அரசியல் தலைவர்களுடன், இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம், பௌத்தம் என பல மதத் தலைவர்களும் நேரில் வந்து பாபாவுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பல கோடி மக்களின் வணக்கத்துக்கும் மரியாதைக்கும் உரிய ஆன்மீகத் தலைவர் சமூக சேவகராகத் திகழ்ந்த சத்ய சாய்பாபா கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை இயற்கை எய்தினார்.

அவரது உடல் கடந்த மூன்று தினங்களாக பொதுமக்கள் அஞ்சலிக்காக பிரசாந்தி நிலையத்தில் குல்வந்த் ஹாலில் வைக்கப்பட்டிருந்தது.

மக்கள் கடலே புட்டபர்த்திக்கு திரண்டு வந்ததைப் போல அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த லட்சக்கணக்கானோர் வந்தவண்ணம் இருந்தனர். நேற்று காலை முதல் நள்ளிரவு வரை சுமார் 4 லட்சம் பக்தர்கள் சாய்பாபாவுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

சாய்பாபாவின் உடலுக்கு நேற்று பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இன்று காலை சாய்பாபாவின் உடல் பிரசாந்தி நிலையத்தில் உள்ள குல்வந்த் ஹாலில் அவர் எப்போதும் மக்களுக்கு போதனை செய்யும் இடத்தில் அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதன்படி அங்கு 4 அடி அகலம், 7 அடி நீள அளவில் 9 அடி ஆழத்தில் குழி தோண்டப்பட்டது. அந்த குழிக்குள் பஸ்பம் என்ற விபூதி, சுகந்த திரவியங்கள் போடப்பட்டன. சர்வமத குருக்கள் சர்வமத உடல் அடக்க பிரார்த்தனை நடத்தினர்.

பின்னர் சாய்பாபாவுக்கு வேத பண்டிதர்கள் தோஷ நிவாரண பூஜை நடத்தினார்கள். அதன்பிறகு அவரது உடல் நவரத்தினங்கள் வைக்கப்பட்ட பெட்டியில் வைக்கப்பட்டது. அவரது உடல் மீது கங்கை, நர்மதா, சரஸ்வதி போன்ற புனித நதிகளின் தீர்த்தங்கள் தெளிக்கப்பட்டன. தெற்கு திசையில் சாய்பாபா தலையை வைத்தபடி உடல் குழிக்குள் இறக்கப்பட்டது.

21 குண்டுகள் முழங்க, தேசியக் கொடி மரியாதை

பின்னர் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் சாய்பாபா உடல் காலை 9.30 மணிக்கு அடக்கம் செய்யப்பட்டது. புனித மண் கொண்டு அந்தக் குழி மூடப்பட்டது. அப்போது புட்டபர்த்தி நகரம் முழுவதிலும் திரண்டிருந்த 6 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாய்பாபாவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். பல பக்தர்கள் கதறி அழுதனர்.

அத்வானி-கிரண்குமார் ரெட்டி அஞ்சலி:

இந்த உடல் அடக்க நிகழ்ச்சியில் பா.ஜனதா தலைவர் அத்வானி, ஆந்திர கவர்னர் நரசிம்மன், முதல்வர் கிரண்குமார் ரெட்டி, தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட தலைவர்களும் சாய்பாபாவின் உறவினர்களும் சொந்த கிராமத்தைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.

அடக்கம் நடந்த ஹாலில் இன்று 1500 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சி முழுவதும் புட்டபர்த்தி நகரில் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த பெரிய டிஜிட்டல் டி.வி.யில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் அடக்க நிகழ்ச்சியை கண்கலங்கியபடி பார்த்து அவருக்காக பிரார்த்தனை செய்தனர்.

நேற்றை விட கூட்டம் அதிகமாக இருந்தது. கூட்டத்தை கட்டுப்படுத்த கூடுதல் அதிரடிப்படைகள் குவிக்கப்பட்டன. உடல் அடக்கம் நடந்த பிரசாந்தி நிலையத்திற்கு அருகே பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. ஆசிரமத்தை சுற்றி 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை சாய்பாபா அறக்கட்டளை நிர்வாகிகளே செய்து கொடுத்தனர்.

புட்டபர்த்தி நகர மக்களும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள். அரசு அதிகாரிகளும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை உடனுக்குடன் செய்து கொடுத்தனர். புட்டபர்த்தி ஆசிரமத்தில் இருந்து 5 கி.மீ. தூரம் வரை பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. எங்கு பார்த்தாலும் மனித தலைகளே காட்சி தந்தது. பெருகும் கண்ணீர், கூப்பிய கைகள், சோகமயமான முகங்களுடன் லட்சக்கணக்கான மக்கள் பிரசாந்தி நிலையத்துக்கு சென்றவண்ணம் உள்ளனர், உடல் அடக்கம் செய்யப்பட்ட பிறகும்!

இன்று பிற்பகல் முதல் சாய்பாபா சமாதிக்கு பொதுமக்களும் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 9 மணிக்கு சாய்பாபா உடல் அடக்க நிகழ்ச்சிகள் தொடங்கி பத்தரை மணியளவில் முடிவடைந்தது.

பிரசாந்தி நிலைய வளாகத்திலேயே 7 அடி ஆழம் மற்றும் 12 அடி நீள சமாதியில் சாய்பாபாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் சமாதியைத் தோண்டும் பணி நடந்து வந்தது.

பிறகு உப்பு, வெள்ளி, தங்கம் உள்ளிட்டவை அடங்கிய நவரத்தினப் பேழையில் உடல் வைத்து அது அடக்கம் செய்யப்பட்டது. உடலை குழிக்குள் இறக்கியதும், குருசேத்திராவிலிருந்து கொண்டு வரப்பட்ட மண்ணால் மூடப்பட்டது. படுக்கை வசமாக உடல் அடக்கம் செய்யப்பட்டது.

நினைவிடம்-தங்கச் சிலை:

உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் சாய்பாபாவின் தங்கச் சிலையும், நினைவிடமும் பிரமாண்டமாக அமைக்கப்படவுள்ளது.

உடல் அடக்கம் செய்யப்பட்டபோது திரையிட்டு அந்த நிகழ்ச்சியை மூடியிருந்தனர். உடல் அடக்கம் முடிந்த பிறகுதான் திரை விலக்கப்பட்டது. அதன் பிறகு மங்களாரத்தி நடைபெற்று இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகள் முடிவடைந்தன.

ஒற்றுமையாய் இருந்து மக்கள் சேவை:

இதற்கிடையே, நேற்று இரவு பிரசாந்தி நிலையத்தில் கூடிய சாய்பாபா அறக்கட்டளை நிர்வாகிகள் கூட்டத்தில், அனைத்து நிர்வாகிகளும் ஒற்றுமையாய் இருந்து சாய் பாபா திட்டமிட்ட அனைத்து மக்கள் பணிகளையும் சிறப்பாக நிறைவேற்ற வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

இறுதிச் சடங்கைச் செய்த தம்பி மகன்:

சாய்பாபாவின் இறுதிச் சடங்குகளை அவரது தம்பி மகன் ரத்னாகர் செய்தார். முற்றிலும் இந்து முறைப்படி இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. புரோகிதர்கள் வேத மந்திரங்களை முழங்க உடல் அடக்கம் நடைபெற்றது.

சாய்பாபா பற்றிய மேலும் செய்திகள்

சாய்பாபாவுக்கு பக்தர்கள் அஞ்சலி-படங்கள்

English summary
While Prashanthi Nilayam looked like an ocean of humanity in which devotees flowed from all directions on Tuesday, hectic preparations were on for the 'maha samadhi' of Sathya Sai Baba on Wednesday at the Sai Kulwant Hall in Prashanthi Nilayam premises.When the clock strikes 9 in the morning, the final rituals will start and conclude by 10.30am.Sai Kulwant Hall is the place where Baba sat, delivered discourses and blessed people. According to the ashramites, many years ago, while interacting with the students, he had shown the place and expressed his wish that he should be buried in the Sai Kulwant Hall. Baba would be laid to rest in the pit (7ft deep and 12ft length), which was dug up 10ft behind from where his body was placed in the glass casket in the hall since Sunday evening. "The body would be lowered in the pit and filled with 'Kuruskshetra' matti (soil), salt, silver, gold and navaratnas," sources said. The body would be kept in the sleeping position in the samadhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X