For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சாய்பாபா ஆசிரமத்தில் இருந்து தங்கம், பணம் லாரிகளில் கொண்டு போகப்பட்டதா?

By Shankar
Google Oneindia Tamil News

புட்டபர்த்தி: மருத்துமனையில் சாய்பாபா சிகிச்சை பெற்று வந்தபோது, அவரது ஆசிரமத்தில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்கமும், வெள்ளிக்கட்டிகளும், பணமும் லாரிகள் மூலம் கடத்தப்பட்டதாக கூறப்படுவதை சாய்பாபா அறக்கட்டளை உறுப்பினர்கள் மறுத்தனர்.

சத்ய சாய்பாபா கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானார். அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தபோது, அவரது ஆசிரமத்தில் இருந்து லாரிகள் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்கமும், பணமும் கடத்தப்பட்டதாக பேசப்பட்டது.

இதுபற்றி சாய்பாபாவின் 'ஸ்ரீசத்ய சாய் சென்டிரஸ் டிரஸ்ட்' அறக்கட்டளையின் உறுப்பினர்கள் வேணு சீனிவாசன், பகவதி, நாகானந்த், சக்கரவர்த்தி, எஸ்.வி.கிரி, இந்துலால்ஷா மற்றும் சாய்பாபாவின் சகோதரர் மகன் ரத்னாகர் ஆகியோர் புட்டபர்த்தியில் உள்ள சத்ய சாய் உள்விளையாட்டு அரங்கத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:

அறக்கட்டளை சொத்துகள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளன. ஆசிரமத்தில் இருந்து தங்கமும், வெள்ளிக்கட்டிகளும், பணமும் கடத்தப்பட்டதாகவோ, ஆவணங்கள் மாயமானதாகவோ கூறப்படுவதில் உண்மை இல்லை. சிலர் வேண்டுமென்றே அறக்கட்டளை மீது திட்டமிட்டு அவதூறு பரப்பி வருகிறார்கள். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பாபாவுக்கு வங்கிக் கணக்கு கூட இல்லை

சொத்துகள் எதுவும் சாய்பாபா பெயரில் இல்லை. அறக்கட்டளை பெயரில்தான் உள்ளது. எனவே, பாபாவுக்கு உயில் எழுத வேண்டிய அவசியம் இல்லை. பாபா பெயரில் ஒரு வங்கிக்கணக்கு கூட இல்லை. அறக்கட்டளை சொத்துகளை விற்கவோ அல்லது வேறு யார் பெயருக்கும் மாற்றவோ யாருக்கும் அதிகாரம் இல்லை.

அறக்கட்டளை சேவைகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதிகளை கொண்டு நிர்வகிக்கப்படுகிறது. அறக்கட்டளை கணக்கு வழக்குகளெல்லாம் மிகச்சரியாக வருமானவரித்துறை நிபந்தனைகளுக்கு உட்பட்டுதான் உள்ளன. டெல்லியில் உள்ள ஒரு பிரபல ஆடிட்டிங் நிறுவனம் அறக்கட்டளை கணக்கு வழக்குகளை சரிபார்க்கிறது.

ரூ 130 கோடி நன்கொடை:

கடந்த 4 ஆண்டுகளில் சத்யசாய் மெடிக்கல் டிரஸ்டுக்கு ரூ.130 கோடிவரை நன்கொடை பெறப்பட்டது. நன்கொடை தரும்படி அரசிடம் நாங்கள் கேட்டதில்லை. அறக்கட்டளை சொத்துகளை எல்லோரும் மிகைப்படுத்தி கூறுகிறார்கள். அந்த சொத்துகளை கொண்டு வியாபாரம் எதுவும் செய்வதில்லை. எனவே, அதன் சொத்துகளை மார்க்கெட் மதிப்பீடு செய்வது சரியில்லை. சொத்து எவ்வளவு என்று எங்களால் iகிக்க முடியவில்லை.

சவப்பெட்டி ஆர்டர் செய்தது யார்?

ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு, பாபாவுக்கு எந்த மாதிரி மருத்துவம் அளிக்கப்பட்டது என்பது குறித்து அறக்கட்டளைக்கு எதுவும் தெரியாது. ஏனென்றால் அப்போது பாபா நலமுடன் இருந்தார். அவருக்கு தேவையான மருத்துவரை அவரே அழைத்துக் கொள்வார். அவர்களின் ஆலோசனைப்படி அவரே மருந்துகளை உபயோகித்து வந்தார். சிகிச்சை குறித்து அவர் யாரிடமும் தெரிவித்ததில்லை.

பாபா சிகிச்சை பெற்ற அறைக்குள் அவரது குடும்பத்தினர் அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுவது தவறு. அவரது சகோதரர் மகன் ரத்னாகர், 27 நாட்களும் கூடவே இருந்தார். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து ஒருதடவை பாபாவை பார்த்தனர்.

சாய்பாபா இறப்பதற்கு முன்பே, அறக்கட்டளை சார்பில் யாரும் அவருக்கான சவப்பெட்டிக்கு 'ஆர்டர்' கொடுக்கவில்லை. பாபா மரணம் அடைந்த பிறகு, ஒரு பக்தர் 'பிரீசர் பாக்ஸ்' எனப்படும் சவப்பெட்டியை நன்கொடையாகக் கொடுத்தார்.

சத்யஜித் காரணம் அல்ல

செயற்கை சுவாச கருவியை அகற்றியதால்தான் பாபா மரணமடைந்தார் என்பது உண்மை அல்ல.

சத்யஜித் என்பவர், பாபாவுக்கு கஞ்சியில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து, அவரது ஆரோக்கியத்தை சீரழித்ததாக கூறப்படுவதிலும் உண்மை இல்லை. சத்யஜித், கர்நாடக மாநிலம் மங்களூரில் 1974-ம் ஆண்டு பிப்ரவரி 16-ந் தேதி பிறந்தார். அவருடைய பெற்றோர் உமேஷ்-மோகினி ஆகியோர் பாபா மீது பக்தி கொண்டவர்கள்.

சத்யஜித்தின் இயற்பெயர் யதீஷ். அவர் மும்பையில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். 1991-ம் ஆண்டு, புட்டபர்த்திக்கு வந்து, சாய்பாபா அறக்கட்டளை கல்லூரியில் பி.எஸ்சி., எம்.எஸ்சி., எம்.பி.ஏ. படிப்புகளை முடித்தார். எம்.பி.ஏ. பட்டமளிப்பு விழாவில் சாய்பாபா கையால் தங்கப்பதக்கம் பெற்றார்.

அப்போது, பாபா பற்றி 10 நிமிடங்கள் உரையாற்றினார். அதில் கவரப்பட்ட பாபா, அவரை அழைத்து, தனது ஆன்மிக பயணத்தில் இணையுமாறு கேட்டுக்கொண்டார். அதை யதீசும் ஏற்றுக்கொண்டு, பாபாவின் தனி உதவியாளர் ஆனார். அதன்பிறகு, அவரது பெயர் சத்யஜித் ஆக மாறியது.

காசோலை அதிகாரம்

முக்கிய பிரச்சினைகளில் சத்யஜித்தின் ஆலோசனையை பாபா கேட்பது வழக்கம். பாபாவுக்கு உடல்நிலை சரியில்லாவிட்டால், அவரை சத்யஜித்தான் கவனித்துக் கொள்வார். அவர் நன்றாக கவனிக்கவில்லை என்றால், அப்பணியில் இருந்து பாபாவே அவரை நீக்கி இருப்பார்.

பாபாவை தவிர, வேறு யாருக்கும் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரம் அளிக்கப்படவில்லை. கடந்த பிப்ரவரி மாத செலவுகளுக்கு கூட பாபா கைப்பட காசோலை வழங்கப்பட்டது. இனிமேல், காசோலையில் கையெழுத்திடும் அதிகாரம், அறக்கட்டளை உறுப்பினர்கள் இரண்டு பேருக்கு அளிக்கப்படும்.

புதிய தலைவர் யார்?

அறக்கட்டளை மற்றும் நிர்வாக கவுன்சில் கூட்டம் அடுத்த வாரம் நடக்கிறது. அதில், அறக்கட்டளையின் புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார். தனது வாரிசு என்று யாரையும் பாபா தனது மனதில் வைத்திருக்கவில்லை. அறக்கட்டளை உறுப்பினர்களில் ஒருவர்தான் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார். வெளியாட்களை தேர்ந்தெடுக்க மாட்டோம். சத்யஜித், அறக்கட்டளையின் ஊழியர் மட்டுமே. அவரை அறக்கட்டளை உறுப்பினராக ஆக்கும் திட்டமும் இல்லை. பாபாவும் அப்படி சொல்லவில்லை.

மறுபிறவி எப்போது?

பாபா, அடுத்த பிறவியில் கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் 'பிரேம சாய்' ஆக பிறப்பேன் என்று ஏற்கனவே கூறி இருந்தார். ஆனால், எந்த தேதியில் மறுபிறவி நிகழும் என்று அவர் கூறவில்லை," என்றனர்.

English summary
The Saibaba trust ruled out allegations of gold, valuable artifacts and money being smuggled out were “baseless and false”.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X