For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜபக்சேவையும் கடலில் தூக்கி எறியும் காலம் விரைவில் வரும்-கி.வீரமணி

Google Oneindia Tamil News

Veeramani
சென்னை: பின்லேடனைப் போல ராஜபக்சேவையும் கடலில் தூக்கி எறியும் காலம் நிச்சயம் விரைவில் வரும் என்று தி.க. தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

சென்னையில் ஈழத் தமிழர் படுகொலை குறித்த ஐ.நா. அறிக்கை மற்றும் மத்திய அரசின் கடமை என்ற பெயரில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு வீரமணி பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்,

ஈழத்திலே தமிழர்களுடைய இனப்படுகொலையை ராஜபக்சே மிகக் கொடூரமாக அநீதியின் உச்சத்திற்கே சென்று நடத்தியிருக்கிறார். போர் நடைபெற்றிருக்கிறது. போர் கைதிகளை எப்படி நடத்த வேண்டும் என்று அதற்கு ஒரு வழிகாட்டுதல் நெறிமுறைகளே உண்டு. ஐ.நா. அமைப்பு இலங்கையிலே நடைபெற்ற போர் கொடுமைக்குக் காரணமான சிங்கள ராஜபக்சே போர்க் குற்றவாளி என்று அதன் அறிக்கை மூலம் வெளிப்படுத்தியிருக்கிறது.

இலங்கையிலே இப்படி ஒரு படுகொலை நடத்ததற்காக இந்தியாதான் முதலில் இலங்கையை ராஜபக்சேவை கண்டித்திருக்க வேண்டும். ஆனால் இந்தியா இதை செய்யவில்லை. இந்தியாவிற்கு ஏற்பட்ட களங்கத்தை அவமானத்தை துடைத்து எறிந்திருக்க வேண்டும். வரலாற்றிலே இந்திய அரசின் போக்கை என்ன நினைப்பார்கள்?

இதுவரை ஹிட்லர்கூட இந்த அளவுக்கு கொடுமையாக நடந்து கொண்டதில்லை. அதைவிட சிங்கள இனவெறியன் ராஜபக்சே நடந்து கொண்டார். ஐ.நா. மன்றம் இலங்கை அரசின் போர் கொடுமையை ராஜபக்சேவின் போர்க் குற்றத்தை 214 பக்கங்களில் அறிக்கையாக உலக நாடுகள் அறிந்து கொள்ளும் வகையில் வெளியிட்டிருக்கிறது.

இதைப்பற்றித் தெரிந்து கொண்டாவது மத்திய அரசுக்கு ரோஷம் வர வேண்டாமா? இந்திய அரசுக்கு உணர்ச்சி வர வேண்டாமா? தமிழர்களுடைய உணர்வு நீறுபூத்த நெருப்பாக உள்ளது.

இலங்கை அரசு வன்னிப்பகுதியில் அப்பாவி மக்களான ஈழத் தமிழர்களை கனரக ஆயுதங்கள் மூலம் கொன்றிருக்கிறது.

சொந்த நாட்டு மக்கள்மீது சொந்த நாட்டு குடிமக்கள் மீதே அந்த மண்ணுக்குரிய தமிழர்கள் மீது வான்வெளித் தாக்குதல் மூலம் குண்டுமழை பொழிந்து தாக்கி அழித்தது.

பஞ்சாப் மாநிலத்தில் இந்தியர்கள் நூறு பேரை டையர் என்ற ஆங்கிலேயன் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அடைத்து வைத்து சுட்டான் என்பதையே இந்தியா பெரிதாகப் பேசிக் கொண்டிருக்கிறது.

இலங்கையில் போர் அற்ற ஒரு குறிப்பிட்ட பகுதியில் மூன்று லட்சத்து முப்பதாயிரம் மக்கள் வான்வெளித் தாக்குதலுக்கு ஆளானார்களே சிங்கள ராஜபக்சேவின் இந்த அட்டூழியம், இனப்படுகொலை இந்தியாவுக்குத் தெரியாதா?

அது மட்டுமல்ல அங்குள்ள உணவு மய்யங்களை ராஜபக்சே அரசு ராணுவம் அழித்தது.

உலகத்திலே எங்கு போர் நடந்தாலும் ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சார்ந்த செஞ்சிலுவை சங்கத்தினர் தான் போரில் காயம் பட்டவர்களுக்கு, உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்வார்கள்.

உலகமே மதிக்கக் கூடிய செஞ்சிலுவை சங்கத்தையே இலங்கையிலிருந்து வெளியேறும்படி உத்தரவிட்டவர்தான் கொலைகாரன் ராஜபக்சே. போரில் சிக்கிய தமிழர்களை கப்பலில் வைத்து நூற்றுக்கணக்கான தமிழர்களுக்கு மருத்துவ உதவிகளை செய்து வந்தனர் செஞ்சிலுவை சங்கத்தினர்.

கடலில் கப்பலில் இருந்த நோயாளிகளோடு செஞ்சிலுவை சங்கத்தினர் மீதும் குண்டுமழை பொழிந்து அழித்தது. பூண்டோடு அழிக்கப்பட்டனர் தமிழர்கள். வன்னி பகுதியிலே மருத்துவமனை இருக்கின்ற பகுதிகளை சிங்கள ராணுவம் குறி வைத்து தாக்கி அழித்தது.

உலகப் போர் நடைபெற்றபொழுதுகூட ஜப்பான் ராணுவம் எந்த மருத்துவமனையையும் போரின் போது அழிக்கவில்லை. ஹிட்லர்கூட போர் தொடுத்த எந்த நாட்டில் உள்ள மருத்துவ மனையையும் அழித்ததில்லை.

சிங்கள ராணுவத்தினர் சிங்கள அரசு ராஜபக்சே அரசு எப்படி கொடூரமாக நடந்து கொண்டது என்பதற்கு உதாரணம் தமிழர்கள் வாழும் பகுதிகளில் உணவு இல்லாமல், மருந்து இல்லாமல், குடிநீர் இல்லாமல் அனைத்து வழித் தடங்களையும் அழித்தது. பொது மக்கள் எதுவும் கிடைக்காமல் கதி அற்று, தானே சாகும் அளவுக்கு ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியது.

தமிழர்கள் செய்த குற்றமென்ன? அவன் தமிழனாகப் பிறந்ததுதான் குற்றமா?

இதை திராவிடர் கழகம் சொல்லவில்லை. திராவிட இயக்கத் தமிழர் பேரவை சொல்லவில்லை. திராவிடர் இயக்கங்கள் சொல்லவில்லை. இலங்கை போர் குற்றம் புரிந்துள்ளது. போர் குற்றவாளி இலங்கை அதிபர் ராஜபக்சேதான் என்பதை ஐ.நா. மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கை சொல்லி யிருக்கிறது.

இலங்கையில் ஒவ்வொரு பகுதியிலும் இவ்வளவு மக்கள் தொகை என்று இருக்கிறது. ஆனால் அந்த மக்கள் தொகையில் தமிழர்களை காணவில்லை. அவர்கள் என்ன ஆனார்கள் என்பதே தெரியவில்லை.

அந்த அளவுக்கு தமிழ் மக்கள் மீது இனப்படு கொலையை செய்திருக்கிறது சிங்கள ராணுவம். தமிழர்களைப் புதைப்பதற்குக்கூட அங்கு மண் இல்லை.

இந்த செய்திகளை சொல்லும் பொழுது எங்களுக்கு இரத்தக் கண்ணீர் வடிகிறது. தமிழர்களுக்கு கட்சிதான் முக்கியமா? மனிதாபிமானம் முக்கியமில்லையா?

இன்னமும் சிங்கள ராணுவம் தமிழர்களை அழிக்கும் பணியை நிறுத்தவில்லையே! ஆனால் மத்திய அரசு என்ன சொல்லுகிறது? இலங்கையில் நடைபெறும் பயங்கரவாதத்தை தான் அங்குள்ள இலங்கை அரசு எதிர்க்கிறது என்று இலங்கைக்கு வக்காலத்து வாங்குகிறது இந்திய அரசு.

இலங்கையில் அரசியல் தீர்வுதான் ஏற்பட வேண்டும் என்று மத்திய அரசு சொல்லுகிறது. அது மட்டுமல்ல விடுதலைப் புலிகள் என்று சொல்லி சந்தேகப்படுவோரை அழைத்து அப்பாவித் தமிழர்களை படுகொலை செய்திருக்கிறது இலங்கை அரசு.

பஞ்சாப் ஜாலியன் வாலாபாக் படுகொலையை மட்டும் பெரிதாகப் பேசும் இந்தியா ஈழத்தில் நடைபெற்ற இனப் படுகொலையை என்றைக்காவது சொல்லியிருக்கிறதா? அங்கு கொடுமைகள் தான் நடைபெற்றிருக்கின்றன என்று சொல்லியிருக்கிறதா?

ஐ.நா.அறிக்கையே வெளியிட்ட பிறகு இந்தியாவின் நிலை வெறும் தூசிக்குச் சமம்.

அது மட்டுமல்ல சிங்களவர்கள் நடத்தும் தமிழினப் படுகொலையை எதிர்க்கின்ற ஊடக வியலாளர்கள் மிரட்டப்பட்டிருக்கின்றார்கள். கொல்லப்பட்டிருக்கின்றார்கள். அதே போல தமிழினப் படுகொலையை எதிர்ப்பவர்களையும் சமூக ஆர்வலர்களையும் பல்வேறு வழிகளில் துன்புறுத்தியிருக்கிறார்கள். அடக்கியிருக்கின்றார்கள்.

ஏன்? இலங்கை ராணுவத் தளபதியாக இருந்த பொன்சேகா ராஜபக்சே அரசிடம் பட்டபாடு தெரியாதா? மத்திய அரசுக்கு இந்திய அரசுக்கு இதுவெல்லாம் தெரியவில்லையா?

ஐ.நா.மன்றம் என்ன சொன்னது? இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் தமிழினப் படுகொலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று உலகமே பதறியது. அப்பொழுது நாங்கள் அலட்சியமாக இருந்து விட்டோம். இப்பொழுது தான் எங்களுடைய ஆய்வில் உட்படுத்திப் பார்த்த பொழுது உண்மைகள் எல்லாம் விளங்கியது. இப்பொழுது தான் இதை உறுதிப்படுத்தி புரிந்து கொண்டோம் என்று சொல்லியிருக்கிறது.

இந்தியாவினுடைய பங்களிப்பு இதில் இருக்கிறதா? இல்லையா? இதை விட வெட்கக்கேடு வேறு என்ன இருக்க முடியும்? புரட்சிக் கவிஞர் மிக அழகாகச் சொல்லுவார். காட்டில் ஒரு முயல்குட்டி துள்ளக்கூடும் கருஞ்சிறுத்தை கண்விழித்தால் தெரியும் சேதி என்று.

தமிழர்களுக்காக தமிழ் இனத்தைக் காக்க நாம் முன்வரவேண்டியது நமது கடமையல்லவா? அவர்களுக்காக நாம் தியாகம் செய்ய வேண்டாமா? நமக்குப் பட்டங்கள், பதவிகள், அரசியல் தான் முக்கியமா? தமிழர்கள் முடிவெடுக்கத் தயாராகிவிட்டார்கள். கொதித்தெழ தயாராகிவிட்டது தமிழினம்.

சிங்களவர்கள் முடிவு கட்டிவிட்டார்கள். இலங்கை என்பது சிங்கள நாடாக இருக்க வேண்டும். தமிழர்கள் புல்பூண்டு கூட இருக்கக் கூடாது என்று முடிவெடுத்துவிட்டார்கள்.

திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சகோதரர் சுப.வீரபாண்டியன் ஒரு கருத்தை மிக தெளிவாகச் சொன்னார். சில அறிவு ஜீவிகள் படித்த அறிவு ஜீவிகள் தங்களது ஆசைகளை குதிரைகளாக்கிப் கற்பனைக் குதிரைகளில் பறக் கிறார்கள்.

அவர்களுக்காக ஒன்றைச் சொல்லுகிறோம். ஈழத் தமிழர் விடிவுக்குத் தமிழ் ஈழம் தான் ஒன்றுதான் தீர்வு என்று எந்த மேடைகளிலாவது எங்களுடன் பேசத் தயாரா? அரசியல் பேசாமல்? அரசியலைப் பற்றி எந்தக் கருத்தையும் பேச மாட்டோம். ஈழம் மட்டுமே தீர்வு என்று பேசத் தயாரா?

அவர்கள் பேசமாட்டார்கள் ஏனென்றால் கருமத்திற்கு உரியவன் கடைசி வரையிலே இருப்பான்.

ஓப்பனைக்கும், உண்மைக்கும் வித்தியாசம் உண்டு. ஒப்பனை கலைந்தே தீரும். உண்மை என்றும் கலையாது உள்ளது உள்ளபடியே இருக்கும். இரண்டையும் ஒன்றாக்க முடியாது. ஒப்பாரிக்கு அழுவார்கள். அதுவும் தென்பகுதியில் மிகத் தெளிவாகப் பார்க்கலாம்.

யார் இழப்புக்கு ஆளானார்களோ அவர்களை விட வெளியிலிருந்து வந்திருக்கிறவர்கள் தான் இழப்புக்கு ஆளானவர்களை விட அதிகம் அழுவார்கள். அதுவும் இழப்புக்கு ஆளானவர்களைவிட அதிக ஆவேசமாக கட்டிப்பிடித்து அழுவார்கள். அது ஒன்றும் இல்லை. அவர்களுடைய குடும்பத்தில் நடந்த பிரச்சினையை நினைத்து அழுவார்கள். புருஷன், தனக்கு நகை வாங்கித் தரவில்லையே இதை வாங்கித் தரவில்லையே என்று நினைத்துக் கொண்டு அழுவார்கள். அது மாதிரி தமிழின உணர்வு அற்றவர்களே ஈழத்தமிழர் பிரச்சினையில் ஒப்பாரி வைக்க வராதீர்கள்.

3000 அமெரிக்கர்களைக் கொன்ற பின்லேடனைக் கூட கடலில் தூக்கிப் போட்டார்களா? இல்லையா? ஆனால் ராஜபக்சேவை கடலில் தூக்கி எறியும் காலம் வரும். சூழ்நிலை வரும் என்றார் வீரமணி.

English summary
Sri Lanka's Rajapakse too will be thrown to the sharks soon like Bin Laden. Veeramani attended a meeting on UN report on Lankan war crimes in Chennai. He said, US forces killed Bin Laden and thrown into the sea for killing 3000 Americans. But Rajapakse has killed nearly one lakh innocent Tamils in Eelam. So he too will be thrown into the sea soon, he blasted.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X