• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

திமுகவை வீழ்த்தி எப்படி இப்படி வென்றது அதிமுக?

|

Jayalalitha
சென்னை: திமுகவின் அசகாய சூர வியூகங்கள், கூட்டணி அமைத்த விதம், வலுவான வாக்கு வங்கிகளை வைத்திருந்த பாமக உள்ளிட்டவற்றின் துணை ஆகியவற்றையும் தாண்டி அதிமுக அபாரமாக வெற்றி பெற்றிருப்பது பலரையும் வியப்படைய வைத்துள்ளது.

திமுகவின் தோல்விக்குப் பல காரணங்கள் இருப்பது போல அதிமுகவின் வெற்றிக்கும் நிறைய காரணங்களைச் சொல்ல முடியும்.

விஜயகாந்த் வருகை:

விஜயகாந்த்தின் தேமுதிகவை தனது கூட்டணிக்குள் ஜெயலலிதா இழுத்ததே அவருக்குக் கிடைத்த முதல் வெற்றியாகும்.

கட்சி ஆரம்பித்தது முதலே அதிமுகவின் வாக்கு வங்கியைத்தான் தொடர்ந்து அரித்துக் கரைத்துக் கொண்டிருந்தார் விஜயகாந்த். இதை ஆரம்பத்தில் ஜெயலலிதா சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் சோ உள்ளிட்டவர்கள் தொடர்ந்து இதை எடுத்துக் கூறி, விஜயகாந்ததுடன் கூட்டணி சேருவதே அதிமுகவுக்கு நல்லது என்று எடுத்துக் கூறினர்.

இதையடுத்தே அதிமுக கூட்டணிக்குள் விஜயகாந்த்தை இழுத்தார் ஜெயலலிதா. இன்று அதை அறுவடை செய்துள்ளார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்:

முதல்வர் கருணாநிதி குடும்பத்தினருக்கு, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் இருந்த பங்குகளை மிகப் பெரிய அளவில் அம்பலப்படுத்தி, அதை தொடர்ந்து மக்கள் மனதில் பதிய வைக்கும் முயற்சியில் ஜெயலலிதாவுக்கு பெரும் வெற்றி கிடைத்துள்ளது என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

குறிப்பாக நகர்ப்புற வாக்காளர்கள், படித்தவர்கள், முற்பட்ட வகுப்பினர் மத்தியில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலால் திமுக மீது மிகப் பெரிய அதிருப்தியும், ஆவேசமும், கோபமும் கிளம்பியது. இந்த வாக்குகள் எல்லாம் அப்படியே அதிமுகவுக்கு ஆதரவாக திரும்பி விட்டன.

கருணாநிதி குடும்ப ஆதிக்கம்:

கருணாநிதி குடும்பத்தினர் ஆட்சியிலும், சினிமாத் துறையிலும் செய்து வந்த ஆதிக்கத்தை மிகப் பெரிய அளவில் விளக்கி, அதை பிரசார விஷயமாக ஜெயலலிதா மாற்றியது அவருக்கு உதவியுள்ளது.

பிரசார வியூகம்:

கடைசி நேரத்தில் வடிவேலுவை வைத்து திமுக வித்தை காட்ட முயன்றபோதும் அந்த திசை திருப்பும் வலையில் சிக்கிக் கொள்ளாமல், திமுக அரசின் தவறுகளையும், திமுக அரசால் மக்கள் பாதிக்கப்பட்ட விதத்தையும் தொடர்ந்து அழுத்தம் திருத்தமாக பிரசாரத்தின்போது ஜெயலலிதா கூறி வந்தது அதிமுகவின் வெற்றிக்கு பெரும் உதவியாக இருந்தது.

விலைவாசி உயர்வு, மின்வெட்டு, மணல் கொள்ளை, திமுகவினரின் கட்டப் பஞ்சாயத்து ரவுடியிசம், போலீஸார் துணையோடு திமுகவினர் நடத்தி வரும் சமூக விரோத செயல்கள், திரைத் துறையினரை மிரட்டி அழிப்பது என்பது போன்றவற்றை அவர் தொடர்ந்து பிரசாரத்தின்போது எடுத்து வைத்தது மக்களிடையே போய்ச் சேர்ந்துள்ளது.

சீமான் -விஜய்:

ஈழத் தமிழர் பிரச்சினையில் பெரும் அதிருப்தியுடன் இருந்து வந்த தமிழ் உணர்வாளர்களின் வாக்குகளைக் கவரும் வகையில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானை அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக ஜெயலலிதா திருப்பியதும் அவருக்கு உதவியாக அமைந்தது.

குறிப்பாக சீமான் செய்த பிரசாரத்தால் காங்கிரஸ் கட்சி அடியோடு காலியாகிப் போயுள்ளது. இதைத்தான் ஜெயலலிதாவும் எதிர்பார்த்தார்.

அதேபோல திமுகவினரிடம் சிக்கி கடுமையாக பாதிக்கப்பட்ட நடிகர் விஜய்யை இழுத்ததன் மூலம் அவரது ரசிகர்களின் வாக்குகளை அதிமுக பெற்று பலம் அடைந்துள்ளது.

தேர்தல் அறிக்கை:

இதை விட இன்னொரு முக்கியக் காரணம் உள்ளது. அது அதிமுகவின் தேர்தல் அறிக்கை. திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கை பெரும் பரபரப்பாக, ஆச்சரியமாக பேசப்பட்டாலும் கூட மிக்சி, கிரைண்டருடன், பேனும் இலவசம் என்று அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கை ஏழை மக்களை திமுகவிடமிருந்து இழுத்துக் கொண்டு வந்துவிட்டது.

குறிப்பாக பெண்கள் மத்தியில், அதிமுகவின் தேர்தல் அறிக்கைதான் பெரிதாக பேசப்பட்டது.

பணம்

மேலும் இன்னொரு முக்கிய விஷயமாக இந்த முறை திமுகவுக்கு கடும் போட்டியைத் தரும் வகையில் அதிமுக தரப்பிலும் பெருமளவில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுவும் அதிமுகவுக்கு ஆதரவாக வாக்காளர்கள் திரும்ப ஒரு முக்கியக் காரணம்.

மக்களின் அமைதிப் புரட்சி!

அதேசமயம், திமுக அரசின் மீதான ஒட்டுமொத்த அதிருப்தியையும் மிக மிக அமைதியாக, வெளிக்காட்டி அமைதிப் புரட்சியை தமிழக மக்கள் நிகழ்த்தியுள்ளனர் என்றே கூற வேண்டும். காரணம், தேர்தல் முடிவு வெளியாகும் வரை அதிமுக ஆதரவாக பெரிய அளவில் எந்த அறிகுறியையும் காண முடியாமல் போனதால், திடீரென வந்துள்ள இந்த மிகப் பெரிய வெற்றி அப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது.

English summary
TN people have voted for ADMK in a silent way. There are many reasons to this massive victory.Jayalalitha's untired campaign against the DMK and CM Karunanidhi has evoked good response from the people. And also price rise issue, power cut, sand smuggling and others are the strong reasons for the DMK's defeat. Above all Vijayakanth and his DMDK are the vital turning point for ADMK's big victory.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X