For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரசு கூறியபடியே ஜூன் 15ல் பள்ளிகள் திறப்பு-தனியார் பள்ளிகள்

Google Oneindia Tamil News

தர்மபுரி: அரசு அறிவித்துள்ளபடி ஜூன் 15ம் தேதியன்றே தனியார் பள்ளிகளும் திறக்கப்படும் என்று தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் இளங்கோவன் கூறுகையில்,

கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில் சமச்சீர் கல்வி முறையை பரிசீலனைக்கு பிறகு அமல்படுத்துவோம் என்று தமிழக அரசு கூறியுள்ளது. கல்வியின் தரத்தை பாதுகாக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு வரவேற்கத்தக்கது.

இந்த ஆண்டு வருகிற ஜுன் 15-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளபடி எங்கள் கூட்டமைப்பை சேர்ந்த பள்ளிகள் அரசு உத்தரவை பின்பற்றி ஜுன் 15-ந் தேதி முதல் செயல்படத் தொடங்கும் என்றார்.

சமச்சீர் கல்விக்கு தனியார் பள்ளிகள் எதிர்ப்பு

இதற்கிடையே, அனைத்திந்திய தனியார் பள்ளிகள் சங்கம் சமச்சீர் கல்விக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் தலைவர் டென்னிசன், பொதுச் செயலாளர் மனோகர் ஜெயக்குமார் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

முந்தைய அரசு சமச்சீர் கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதில் பாடத்திட்டம் தரமானதாக இல்லை. கடந்த ஆண்டு ஒன்றாம் வகுப்புக்கும், 6-ம் வகுப்புக்கும் சமச்சீர் கல்வி கொண்டுவரப்பட்டது. மெட்ரிக் திட்டத்தில் படித்த மாணவர்கள் 6-ம் வகுப்பு பாடத்தை மூன்றே மாதத்தில் படித்து முடித்து விட்டார்கள். இன்றைய உலகளாவிய கல்விச்சூழலில் தரம் என்பது மிகவும் முக்கியமானது.

நாங்கள் சமச்சீர் கல்வி திட்டத்திற்கு எதிரானவர்கள் அல்ல. பாடத்திட்டம் தரமானதாக இருக்க வேண்டும் என்று சொல்கிறோம். சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திற்கு இணையாக இன்னும் சொல்லப்போனால் அதைவிட மேலான பாடத்திட்டமாக சமச்சீர் கல்வி அமைய வேண்டும். அதுபோன்று தரமானதாக இருந்தால் சமச்சீர் கல்வியை வரவேற்கிறோம்.

சமச்சீர் கல்வி தரமாக இல்லாததால்தான் முதல்வர் ஜெயலலிதா அதை நிறுத்தி உள்ளார். அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

இப்போது எல்.கே.ஜி. வகுப்பிலேயே குழந்தைகள் ஏ, பி. சி. டி. படித்து விடுகிறார்கள். இதை ஒன்றாம் வகுப்பில் கொண்டு வைத்தால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அதனால்தான் மீண்டும் மீண்டும் சொல்கிறோம், சமச்சீர் கல்வி பாடத்திட்டம் தரமானதாக இருக்க வேண்டும்.

பள்ளிக்கல்வி கட்டணத்தைப் பொருத்தவரையில், ஒவ்வொரு பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிகளை அடிப்படையாகக் கொண்டு புதிய கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளது. திருத்தி அமைக்கப்படும் புதிய கல்விக்கட்டணத்தை ஏற்க தயாராக இருக்கிறோம்.

ஒருசில பள்ளிகள் வேண்டுமானால் மாணவர்களிடம் அதிக கல்விக்கட்டணம் வசூலிக்கலாம். அதை அடிப்படையாக வைத்து ஒட்டுமொத்தமாக எல்லா தனியார் பள்ளிகளையும் குறைசொல்லக்கூடாது.

எப்படி தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு அரசு கல்விக்கட்டணம் நிர்ணயம் செய்கிறதோ, அதை அளவுகோலாக வைத்து தனியார் பள்ளிகளுக்கும் கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும். தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் இரவு பகல் பாராமல் மாணவ-மாணவிகளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கிறார்கள். அவர்களின் கற்பிக்கும் பணியை பள்ளி நிர்வாகிகள் உன்னிப்பாக ஆய்வு செய்கிறார்கள்.

இதன் காரணமாகத்தான் தனியார் பள்ளிகளில் மாணவ-மாணவிகள் அதிக மதிப்பெண் எடுக்கிறார்கள். தேர்ச்சி விகிதமும் அதிகமாக உள்ளது. இதை அரசு பள்ளிகளிலும் பின்பற்றினால் கல்வியின் தரமும், மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவதும் தானாக கூடிவிடும். அரசு பள்ளிகளிலும் திறமையான ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என்று அவர்கள் தெரிவித்தனர்.

English summary
Private schools have decided to reopen on June 15 as per govt's decision. They also oppose uniform education system.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X