For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலவச ரேஷன் அரிசி விநியோகத் திட்டம்-ஜூன் 1ல் ஜெ. தொடங்கி வைக்கிறார்

Google Oneindia Tamil News

சென்னை: ரேஷன் கடைகள் மூலம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு மாதம் 20 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா ஜூன் 1ம் தேதி சென்னையில் தொடங்கி வைக்கிறார்.

ஜெயலலிதா முதல்வரான பின்னர் கலந்து கொள்ளும் முதல் அரசு நிகழ்ச்சி இதுதான்.

முதல்வராக ஜெயலலிதா மீண்டும் பதவியேற்ற பின்னர் முதல் உத்தரவாக, ரேஷன் கடைகளில் 20 கிலோ இலவச அரிசி வழங்கும் திட்டம், தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட 7 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற உத்தரவிட்டு கையெழுத்திட்டார்.

தற்போது இந்தத் திட்டங்களை நிறைவேற்றும் பணியில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர். இந்த நிலையில் ரேஷன் அரிசித் திட்டத்தை ஜெயலலிதா ஜூன் 1ம் தேதி சென்னையில் தொடங்கி வைக்கிறார்.

ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ஸ்ரீராம் நகர் ரேஷன் கடையில் அன்று காலை 10 மணிக்கு இலவச அரிசியை வழங்கி திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்.

அதன் பின்னர் மாவட்டங்களில் அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டு இத்திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்கள்.

யார் யாருக்குக் கிடைக்கும்?

பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் தற்போது ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் என்ற விலையில் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மாதம் ஒன்றுக்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் 12 கிலோ முதல் 20 கிலோ வரையில் அரிசி வழங்கப்பட்டு வருகிறது. அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ் குடும்ப அட்டை ஒன்றுக்கு 35 கிலோ வீதம் அரிசி வழங்கப்படுகிறது.

ஏழை, எளிய நடுத்தர குடும்பங்கள் பயனடையும் வகையில் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் அரிசியை இலவசமாக வழங்க வேண்டும் என்று புதிய அரசு ஆணையிட்டுள்ளது.

அதனடிப்படையில், பொதுவிநியோகத் திட்டத்தில் அரிசி பெற தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த அரிசி இலவசமாக வழங்கப்படும்.

குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மாதம் ஒன்றுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் அளவுகளில் அரிசி வழங்கப்படும்.

அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் 35 கிலோ அரிசியும் இலவசமாக வழங்கப்படும். இந்த உத்தரவு வரும் ஜுன் மாதம் 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ் 18 லட்சத்து 62 ஆயிரம் பேருக்கு 35 கிலோ அரிசி இலவசமாக கிடைக்கும்.

தமிழகத்தில் மொத்தம் 1 கோடியே 95 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன. தமிழக அரசின் புதிய உத்தரவு மூலம் 1 கோடியே 83 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் 20 கிலோ இலவச அரிசி பெறுவார்கள்.

English summary
CM Jayalalitha will inagurate free ration rice scheme on June 1. She will launch the scheme in Alwarpet ration shop in Chennai. This is the first govt function attended by Jayalalitha after became CM.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X