For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திமுக அடைந்துள்ள தோல்வி தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது-அத்வானி

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் திமுக அடைந்துள்ள மாபெரும் தோல்வி, தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அத்வானி பேசுகையில், ஊழல் இன்னும் சாதாரண மக்களை கடுமையாக பாதித்துள்ளது என்பதை தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. வலுவாக அதை நிரூபித்துள்ளன.

ஒருவேளை திமுக ஆட்சிக்கு மீண்டும் வந்திருந்தால் ஊழல் ஒரு பிரச்சினை இல்லை என்று மாறியிருக்கும். ஆனால் திமுக தோல்வி அடைந்திருப்பதன் மூலம் மக்கள் ஊழலை ஒரு முக்கியப் பிரச்சினையாக கருதுகின்றனர் என்பதை வெளிக்காட்டியுள்ளனர். எனவே திமுகவின் தோல்வியும், அதிமுகவின் வெற்றியும் தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.

நான் அதிமுக வெற்றி பெற்றதும் முதல்வர் ஜெயலலிதாவைத் தொடர்பு கொண்டு பேசியபோது இது உங்களுக்கு மட்டும் கிடைத்த வெற்றியல்ல. மாறாக, ஊழலுக்கு எதிரான எண்ணம் கொண்ட அனைத்து சாதாரண மக்களுக்கும் கிடைத்த வெற்றியாகும் என்று கூறினேன்.

மத்திய அரசு மீது கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு கூட்டணிக் கட்சிகளின் மீது பிரதமர் மன்மோகன்சிங் பழி சுமத்தியிருந்தார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முக்கிய கூட்டணிக் கட்சியான தி.மு.க., தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டதால் இந்தத் தேர்தல் தேசிய முக்கியத்துவம் பெற்றது.

2-ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் (ஆ.ராசா) பிரதமரின் ஒப்புதலுடனேயே ஸ்பெக்ட்ரம் ஏலம் நடத்தப்பட்டது என்று கூறியுள்ளார். ஆனால், இந்த விஷயத்தில் தி.மு.க. மட்டும் பலிகடா ஆக்கும் வி தமாக, கூட்டணி அரசியலின் நிர்ப்பந்தங்கள் என ஊழலை குறிப்பிட்டுள்ளார் பிரதமர். தி.மு.க.வின் மீது குற்றம் இல்லை என்று கூறவில்லை. இந்த விவகாரத்தில் பிரதமர் மன்மோகன்சிங், தி.மு.க.வின் மீது மட்டுமே பழிபோடுகிறார் என்றுதான் கூறுகிறேன்.

மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மீதான புகார் குறித்து எங்கள் கட்சி ஏற்கெனவே கருத்து கூறியுள்ளது. எனினும், இந்த முறைகேடுகளை தைரியமாக வெளிக்கொணர்ந்த பத்திரிகைகளைப் பாராட்டுகிறேன்.

நமது நாட்டில் ஊழல்கள் மலிந்துவிட்டதற்குக் காரணம் போதுமான சட்டங்கள் இல்லாத காரணத்தால் அல்ல; ஆனால், ஊழலில் ஈடுபடும் சொந்தக் கட்சியினரைத் தண்டிக்கும் அரசியல் உறுதி இல்லாததால்தான் ஊழல் மலிந்துவிட்டது.

எனது அரசியல் வாழ்க்கையில் 1975-ம் ஆண்டின் ஜுன் 11 மற்றும் 12-ந் தேதிகளை மறக்க முடியாது. ஜுன் 11-ந் தேதி சில மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி மண்ணைக் கவ்வியது. ஜுன் 12-ந் தேதி, பிரதமராக இந்திரா காந்தி தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்றும், அவர் மேலும் 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தகுதி இழப்பு செய்தும் அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதுபோல் இந்த ஆண்டின் ஜுன் மாத நிகழ்வும் (ராம்தேவ் கைது) நாட்டின் அரசியல் மாற்றங்களுக்கு திருப்பு முனையாக இருக்கும் என்று நம்புகிறேன்.

ஊழல் விவகாரங்கள்தான் தற்போது நாட்டை உலுக்கி வருகின்றன. கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஊழல் விவகாரங்கள்தான் மிகப்பெரிய விவாதமாக இருந்தன. ஊழல் விவகாரங்களை நாடாளுமன்ற கூட்டு நடவடிக்கை குழுவின் விசாரணைக்கு கொண்டு வர வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை முதலில் ஏற்க மறுத்த மத்திய அரசு, பின்னர் பணிந்தது.

தற்போது ஊழல் விவகாரங்களில் நடவடிக்கைகள் அனைத்தும் நிர்வாக உத்தரவின் கீழ் எடுக்கப்படவில்லை. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில்தான் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு நீதித்துறைக்கு நன்றி தெரிவிக்கிறேன். பிரதமர், நிதித்துறை அமைச்சர் போன்றவர்கள் எல்லாம் ஊழல் விவகாரங்களில் சிக்கியவர்களை ஆதரிக்கத்தான் செய்தனர்.

ஊழலுக்கு எதிராக சத்தியாகிரகம் நடத்தும் ராம்தேவ் விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாடு அப்பட்டமான பாசிச நடவடிக்கையாகும். ஜனநாயக படுகொலை என்று கண்டிக்கிறேன். இப்படி ஒரு நடவடிக்கையை அரசு எடுக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. யோகாவுக்காக வந்திருந்த பெண்களும், குழந்தைகளும் போலீசாரால் தாக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் நடந்த உண்ணாவிரத பந்தலில் நடந்த தாக்குதல், ஜாலியன்வாலாபாக் படுகொலை சம்பவத்தை நினைவுபடுத்துகிறது. எனவே பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோர் ராம்தேவிடமும், தேச மக்களிடமும் இந்த தாக்குதலுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும்.

கடந்த 6 மாதகால நிகழ்வுகளை முகாந்திரமாக எடுத்துக்கொண்டு, நாடாளுமன்றத்தில் அவசர கூட்டத்தை கூட்ட ஜனாதிபதி முன்வர வேண்டும். அந்த கூட்டத்தில் காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல், மும்பையில் ஆதர்ஷ் ஊழல் ஆகிய ஊழல் விவகாரங்கள்; வெளிநாட்டில் உள்ள கறுப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வரும் நடவடிக்கைகள்; ஊழலை எதிர்த்து போராட்டம் நடத்தும் ராம்தேவ் போன்றவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவை பற்றி விவாதிக்க வேண்டும்.

இதுபோன்ற காலகட்டத்தில் ஜனாதிபதி மவுனமான பார்வையாளராக இருக்கக்கூடாது. அவர் இப்போது கூடுதல் அக்கறையோடு செயல்பட வேண்டும் என்று நாடே எதிர்பார்க்கிறது. தகுந்த அறிவுரைகளை மத்திய அரசுக்கு அவர் வழங்க வேண்டும்.

லோக்பால் சட்டத்தால் மட்டும் ஊழலை ஒழித்துவிடலாம் என்று நினைக்கவில்லை. சரியான சட்டங்கள் இல்லை என்பதால் ஊழல் நடக்கிறது என்று யாரும் நினைக்கக்கூடாது. ஊழல்வாதிகளை தண்டனைக்கு உட்படுத்த வேண்டும் என்ற அரசியல் உறுதி இல்லை என்பதால்தான் ஊழல் மலிந்துவிட்டது. லோக்பால் சட்டமசோதா விவகாரத்தில் அன்னா ஹசாரேயை ஆதரிக்கிறோம்.

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களிலும் ஊழல் இருப்பது பற்றி கேட்டால், கர்நாடகா மாநிலத்தில் நடக்கும் சம்பவங்கள் எதுவும் எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. இதுபற்றி முதல்வர் எதியூரப்பாவிடம் பேசி இருக்கிறேன். அங்குள்ள சூழ்நிலைகளை மாற்றுவதற்கு தலைமையிடத்தில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. பா.ஜ.க. ஆளும் மற்ற இடங்களில் சிறப்பான ஆட்சி நடந்து வருகிறது.

ராம்தேவ் பின்னணியில் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். இருக்கின்றன என்ற குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. 1975-ம் ஆண்டு ஜெயப்பிரகாஷ் நாராயணன் நடத்திய போராட்டத்திலும் இதைத்தான் கூறினார்கள். அப்போது அவசர நிலை பிரகடனத்துக்கு எதிராக போராட்டம் நடத்தப்படாமல் போயிருந்தால் அது திரும்பப் பெறப்பட்டிருக்காது. ராம்தேவை மிகவும் கடுமையாக காங்கிரஸ் விமர்சித்து இருப்பது தவறு என்றார் அவர்.

English summary
Senior BJP leader L K Advani has said the electoral debacle of DMK in Tamil Nadu had national-level significance as it proved that the issue of corruption "still mattered to the common man." "I had told AIADMK chief J Jayalalithaa that had it not been for her victory, the message would have been that corruption was not a matter (of concern) for the common man," the veteran BJP leader told reporters in Chennai yesterday. "I regard his election of having national significance in the wake of scams against the (Central) government which was trying to put the blame on the ally (DMK)," he said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X