For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மரியம் பிச்சைக்கு சட்டசபையில் இரங்கல்-ஒத்திவைப்பு

Google Oneindia Tamil News

சென்னை: சாலை விபத்தில் உயிரிழந்த தமிழக அமைச்சர் மரியம் பிச்சைக்கு இன்று சட்டசபையில் இரங்கலும், புகழாரமும் சூட்டப்பட்டது. அதன் பின்னர் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.

சட்டசபை இன்று கூடியதும் சபாநாயகர் ஜெயக்குமார் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பாலுச்சாமி (நிலக்கோட்டை), வேடியப்பன் (போளூர்), ராஜீவ் (அரக்கோணம்), பார்த்தசாரதி (கள்ளக்குறிச்சி), நல்லசாமி (கரூர்), சவுந்தர் ராஜன் (பவானி) சின்னக்குழந்தை (ஆரணி), ஆகியோரின் இரங்கல் குறிப்புகளை வாசித்தார்.

இதையடுத்து மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் உறுப்பினர்கள் அனைவரும் சிறிது நேரம் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினார்கள்.

அதன் பின்னர் மறைந்த அமைச்சர் மரியம்பிச்சை குறித்த இரங்கல் தீர்மானத்தை சபாநாயகர் ஜெயக்குமார் கொண்டு வந்தார். அப்போது அவர் கூறுகையில்,

திருச்சி மேற்கு தொகுதியில் 14-வது சட்டமன்றத்தின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட மரியம்பிச்சை சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பதவி ஏற்றார். அவர் கடந்த 23.5.2011 அன்று எதிர்பாராதவிதமாக சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரது மரண செய்தியை அறிந்த இந்த சபை அதிர்ச்சியும், ஆற்றொண்ணா துயரமும் அடைகிறது.

ஒரு சாதாரண தொண்டனாக இருந்து சிறப்பான பொதுநல பணியில் அவர் படிப்படியாக உயர்ந்தார். கட்சிக்கும், கட்சி தலைமைக்கும் விசுவாசமாக இருந்து பல்வேறு பணிகளை திறம்பட ஆற்றிட பொது வாழ்வில் எல்லோரும் பாராட்டும் வகையில் சீரிய தொண்டாற்றினார்.

திருச்சி மாநகராட்சியில் 3 முறை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு துடிப்புடனும், ஆற்றலுடனும் பணியாற்றினார். அனைவருடனும் நட்புடன் பழகினார். அவருடைய இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவரது குடும்பத்திற்கு இந்த சபை ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

மறைந்த அமைச்சர் மரியம்பிச்சைக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், அனுதாப தீர்மானம் நிறைவேற்றும் வகையிலும் அனைவரும் 2 நிமிடம் எழுந்து நிற்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

அதன் பின்னர் முதல்வர் ஜெயலலிதா உள்பட அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.

அதன் பின்னர் அமைச்சர் மரியம்பிச்சைக்கு மரியாதை செலுத்தும் வகையில் இன்றைய கூட்டத்தை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

நாளை காலை 10 மணிக்கு சட்டசபை மீண்டும் கூடுகிறது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் அப்போது தொடங்குகிறது.

English summary
TN assembly paid homage to Late Minister Mariam Pichai. Speaker Jayakumar read the condolence note and after that CM Jayalalitha and other members observed 2 minutes anjali.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X