For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் கருணாநிதி ஆடிய நாடகம்தான் எத்தனை-ஜெ. தாக்கு

Google Oneindia Tamil News

சென்னை: போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டது என்ற உண்மைக்கு மாறான தகவலைக் கூறி இலங்கைத் தமிழர்களை இலங்கை ராணுவத்திடம் காட்டிக் கொடுத்துவிட்டார் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. இலங்கைப் பிரச்சினையில் அவர் எத்தனையோ நாடகங்களை அரங்கேற்றினார். தமிழினப் பாதுகாவலர் என்று தன்னைத் தானே சொல்லிக் கொண்டு தமிழினப் படுகொலைக்கு துணை போயிருப்பதை பார்க்கும் போது "உறவு போல் இருந்து குளவி போல் கொட்டுவது' என்னும் பழமொழி தான் நினைவிற்கு வருகிறது என்று முதல்வர் ஜெயலலிதா கடுமையாக சாடியுள்ளார்.

சட்டசபையில் நேற்று இலங்கை மீது பொருளாதரத் தடை விதிக்கக் கோரி தீர்மானம் கொண்டு வந்தார் முதல்வர் ஜெயலலிதா. பின்னர் அதன் மீது விவாதம் நடந்தது. அதைத் தொடர்நது முதல்வர் ஜெயலலிதா பதிலுரை நிகழ்த்தினார்.அப்போது இந்தத் தீர்மானம் கொண்டு வந்தது ஏன் என்பது குறித்து அவர் விளக்கினார்.

முதல்வர் நிகழ்த்திய பதிலுரை:

இலங்கைக்கு பிரிட்டிஷ் அரசிடமிருந்து விடுதலை கிடைத்தாலும் அங்கு வாழும் தமிழர்கள், தங்கள் சொந்த நாட்டிலேயே இரண்டாம் தர குடிமக்களாக கருதப்பட்டனர். இதனையடுத்து, சுயாட்சி அந்தஸ்து, தனி ஈழம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 1980-களில் இருந்து தொடர்ந்து போராட்டங்கள் நடந்ததை அனைவரும் அறிவீர்கள்.

தமிழகத்தில் அதிமுக உள்பட எல்லா அரசியல் கட்சிகளும் மக்களும் இலங்கைத் தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், சம உரிமை வழங்கப்பட வேண்டும் என விரும்பினர். தார்மிக ஆதரவும் அளித்தனர்.

இந்தச் சூழ்நிலையில், தமிழீழம் என்ற போர்வையில் தீவிரவாதம் தலைதூக்க ஆரம்பித்து தமிழ்ச் சகோதரர்களே படுகொலை செய்யப்பட்டனர். இதன் உச்சகட்டமாக இந்திய நாட்டின் பாதுகாப்பிற்கும், இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் ஊறு விளைவிக்கும் வகையில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, விடுதலைப் புலிகள் அமைப்பினரால் 1991 ஆம் ஆண்டு தமிழ் மண்ணில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து, விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது இருந்த அனுதாபம், கடுமையான எதிர்ப்பாக மாறிவிட்டது.

1992-ஆம் ஆண்டு நான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தபோது என் வற்புறுத்தலின் பேரில் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மத்திய அரசு தடை செய்து, அந்தத் தடை உத்தரவு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இது மட்டுமல்லாமல், ராஜீவ் கொலையில் முதல் குற்றவாளி பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து இந்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சார்ந்த எவரையும் இந்தியாவிற்குள் நுழைய அனுமதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி 2002-ல் இந்தச் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2005-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை அரசின் அதிபராக மஹிந்த ராஜபக்சே பொறுப்பேற்றார். 2006-ஆம் ஆண்டு மே மாதம் தமிழகத்திலும் துரதிர்ஷ்டவசமாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தி.மு.க. அரசிற்கு மு. கருணாநிதி தலைமை வகித்தார்.

மத்தியிலும் தி.மு.க. அங்கம் வகிக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி 2004-முதல் நடைபெற்று வருகிறது. இந்தச் சூழ்நிலையில், இலங்கையில் அமைதியை ஏற்படுத்தும் போர்வையில் தமிழர்கள் மீதான அடக்குமுறைகளை இலங்கை அரசு கட்டவிழ்த்துவிட ஆரம்பித்தது.

2008-ஆம் ஆண்டு துவக்கத்தில் இலங்கை ராணுவத்தினர் 100 பேருக்கு அரியானா மாநிலத்தில் இந்திய ராணுவம் ரகசியமான முறையில் போர்ப் பயிற்சி அளித்ததாகவும் இலங்கை ராணுவத்தினருக்கு அதிநவீன ரேடார் கருவிகள் உள்பட பல ஆயுதங்களை இந்திய அரசு வழங்கியதாகவும் இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் சிலர் இலங்கை சென்று வந்ததாகவும் அப்போது ஊடகங்களில் செய்திகள் வந்தன. அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதிக்கு இவை அனைத்தும் நன்கு தெரிந்திருக்கும்.

இந்தியாவிடமிருந்து தனக்குத் தேவையான ராணுவ உதவிகளைப் பெற்றுக் கொண்ட இலங்கை ராணுவம், 2008-ஆம் ஆண்டு இறுதியிலும், 2009-ஆம் ஆண்டு துவக்கத்திலும், இலங்கைத் தமிழர்களை கடுமையாக தாக்க ஆரம்பித்தது. இலங்கையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த இலங்கை அரசை மத்திய அரசு நிர்ப்பந்திக்க வேண்டும் என மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க. வலியுறுத்த வேண்டும் என்றும் இதற்கு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு செவி சாய்க்கவில்லையெனில் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவினை தி.மு.க. விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் நான் பல முறை வற்புறுத்தினேன். ஆனால், கருணாநிதி அதைச் செய்யவில்லை.

மாறாக, அனைத்துக் கட்சிக் கூட்டம், சட்டப்பேரவைக் கட்சித் தலைவர்கள் கூட்டம், தமிழ்நாடு சட்டப் பேரவையில் தீர்மானம், மனிதச் சங்கிலி போராட்டம் பிரதமருக்கு தந்தி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா என்ற அறிவிப்பு, ராஜினாமா கடிதங்களை தானே பெற்றுக் கொண்டது, இறுதி எச்சரிக்கை என்ற அறிவிப்பு என பல்வேறு வகையான நாடகங்கள்தான் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் நடத்தப்பட்டன.

இவற்றின் உச்சகட்டமாக, காலை சிற்றுண்டியை வீட்டில் முடித்துவிட்டு தலைமைச் செயலகம் செல்லும் வழியில் திடீரென்று, "போர் நிறுத்தம் ஏற்படும்வரை உண்ணாவிரதம்' என்று அறிவித்து கடற்கரையில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ள ஆரம்பித்தார் கருணாநிதி. மதிய உணவு வேளை வந்தவுடன் நண்பகல் 12 மணி அளவில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை இலங்கை அரசு முடித்துக் கொண்டுவிட்டது என்ற செய்தியை ஊடகங்களுக்கு அறிவித்துவிட்டு தன்னுடைய உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு விட்டார். இதன் மூலம் உண்ணாவிரதம் என்னும் அறப் போராட்டத்தை கேலிக் கூத்தாக்கிவிட்டார் முன்னாள் முதலமைச்சர்.

பாதுகாப்பாக பதுங்கு குழிகளில் பதுங்கியிருந்த லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்கள், போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டது என்ற முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பேச்சைக் கேட்டு வெளியே வந்தனர். இவ்வாறு வெளிவந்த அப்பாவி இலங்கைத் தமிழர்கள் மீது இலங்கை ராணுவத்தினர் குண்டுகளை வீசி அவர்களை ஈவு இரக்கமின்றி படுகொலை செய்தனர்.

இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் இலங்கை ராணுவ முகாம்களில் கம்பி வேலிகளுக்கு பின்னால் அடைத்து வைக்கப்பட்டதாகவும் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்ப் பெண்கள் இலங்கை ராணுவப் படையினரின் கண் முன்னேயே பொது இடங்களில் இயற்கை உபாதைகளை கழிக்கக் கூடிய நிலைமைக்கும், குளிக்கக் கூடிய நிலைமைக்கும் ஆளாக்கப்பட்டதாகவும் தமிழர்கள் குடியிருந்த பகுதிகளில் எல்லாம் சிங்களர்கள் குடியேறி இருப்பதாகவும் செய்திகள் வந்தன.

ஆனால், கனிமொழி உள்பட ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் இலங்கை சென்று இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் சிரித்துப் பேசி விருந்துண்டு பரிசுப் பொருள்களை பெற்று சென்னை திரும்பிய நாடாளுமன்றக் குழுவோ, இலங்கைத் தமிழர்கள் எல்லோரும் நலமாக இருக்கிறார்கள் என்று ஒரு உண்மைக்கு மாறான தகவலை வெளியிட்டது. உண்மை நிலை என்னவென்றால், போரினால் இடம் பெயர்ந்த தமிழர்கள் மறுவாழ்வு பெறாமல் இன்னமும் அவதிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டது என்ற உண்மைக்கு மாறான தகவலைக் கூறி இலங்கைத் தமிழர்களை இலங்கை ராணுவத்திடம் காட்டிக் கொடுத்துவிட்டார் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. தமிழினப் பாதுகாவலர் என்று தன்னைத் தானே சொல்லிக் கொண்டு தமிழினப் படுகொலைக்கு துணை போயிருப்பதை பார்க்கும் போது "உறவு போல் இருந்து குளவி போல் கொட்டுவது' என்னும் பழமொழி தான் நினைவிற்கு வருகிறது.

அப்பாவி இலங்கைத் தமிழர்கள் உயிர் இழப்பதற்கு முந்தைய அரசு காரணமாக அமைந்துவிட்டதே என்ற ஆற்றாமையால்தான் இவற்றை நான் இங்கே குறிப்பிடுகிறேன்.

முந்தைய அரசின் சுயநலப் போக்கு மற்றும் கையாலாகாத்தனம் காரணமாக பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இலங்கை ராணுவத்தின் குண்டு மழைக்கு பலியாகி இருக்கிறார்கள், குண்டு மழைக்கு விலக்களிக்கப்பட்ட பகுதி மற்றும் மருத்துவமனைகள் மீதெல்லாம் இலங்கை ராணுவம் குண்டுமழை பொழிந்து இருக்கிறது, மனிதாபிமான அடிப்படையில் நிவாரணப் பொருள்கள் மக்களை சென்றடைவதை இலங்கை அரசு தடுத்து நிறுத்தி இருக்கிறது, உணவு மற்றும் குடிநீர் பற்றாக்குறை காரணமாக ஏராளமான தமிழர்கள் மரணமடைந்துள்ளனர், மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்துள்ளன.

இந்தக் காரணங்களுக்காகத்தான் இந்தத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது என்றார் ஜெயலலிதா.

English summary
CM Jayalalitha has condemned DMK Chief and Former CM Karunanidhi for his dramas over Lankan Tamil issue. While she was talking in the assembly, she listed out Karunanidhi's earlier actions in Lankan issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X