For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆரல்வாய்மொழியில் 60 பவுன் நகை கொள்ளை: 6 மணி நேரத்திற்குள் திருடன் கைது

By Siva
Google Oneindia Tamil News

ஆரல்வாய்மொழி: ஆரலவாய்மொழியில் நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து 60 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது தொடர்பாக திருட்டு கும்பலைச் சேர்ந்த ஒருவரை சம்பவம் நடந்த 6 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.

ஆரல்வாய்மொழி மிஷன் காம்பவுண்டு பகுதியைச் சேர்ந்தவர் ராயல் ஜேசு ரத்தினராவ். கேரள மாநிலம் மூணாறில் உள்ள டீ எஸ்டேட்டில் மேனேஜராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.

இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பாக ஆரல்வாய்மொழி -நெடுமங்காடு சாலையில் கிருபை நகர் அருகாமையில் வீடு கட்டி அங்கு குடியேறி உள்ளார். இவரது மனைவி ரமணி. இவர்களுக்கு ரெஜிலா பிளசி கோல்டு என்ற மகளும், ராஜேஷ் ஜெப அன்பையா என்ற மகனும் உள்ளனர்.

மகள் திருமணமாகி திட்டுவிளையில் உள்ளார். இவரது மகன் ராஜேஷ் சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இதனால் ராயல்ஜேசு ரத்னராஜ் தனது மனைவியுடன் வசித்து வந்தார். ராஜேஷ் கோடை விடுமுறையையொட்டி மனைவி செலினா, குழந்தைகளுடன் ஊருக்கு வந்திருந்தார். பின்னர் அவர் மட்டும் சென்னைக்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில் தங்களது மருமகளை மகன் வீட்டில் விடுவதற்காக கடந்த 2-ம் தேதி ரத்தினராவ் சென்னைக்கு சென்றார்.

வீட்டை சுற்றி உள்ள மரங்களுக்கு தினமும் தண்ணீர் விடுமாறு பக்கத்து வீட்டு சின்னத்துரை மனைவி ஜெயந்தியிடம் சாவியை கொடுத்துவிட்டு சென்றார். அதன்படி ஜெயந்தி தினமும் மரங்களுக்கு தண்ணீர் ஊற்றி வி்ட்டு வருவாராம்.

நேற்றும் வழக்கம்போல் காலையில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற சென்றவர் வீட்டின் உள்பக்கம் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தது கண்டு சந்தேகம் ஏற்பட்டு பின் பக்கம் சென்று பார்த்துள்ளார். அங்கு பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

உடனடியாக இது குறித்து ராயல்ஜேசுரத்தினராவுக்கு தகவல் தெரிவித்தார். அவர் திட்டுவிளையில் வசிக்கும் தனது மகளிடம் வீட்டிற்கு சென்று பார்க்குமாறு கூறினார். அதன்படி அவர் வந்து பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 60 பவுன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதை தொடர்ந்து ரத்தினராவ் மருமகன் வின்ஸ்லெஸ் நேசகுமார் ஆரல்வாய்மொழி போலீசில் புகார் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் ராஜராஜன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண், கூடுதல் டி.எஸ்.பி. அசோக் குமார், டி.எஸ்.பி. செல்வராஜ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கைரேகை நிபுணர்கள் சோதனை நடத்தியதோடு மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் செண்பகரா மன்புதூர் ரோடு வழியாக ஓடி அங்குள்ள சுடுகாட்டுக்கு சென்று பிராந்தி பாட்டிலை கவ்வி நின்றது.

இவற்றை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். கடந்த சில நாட்களாக இந்த வீட்டை அதே பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர் சுற்றி சுற்றி வந்ததாக அப்பகுதி மக்கள் கூறினர். இந்த நிலையில் நாகர்கோவிலில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் போதை வாலிபர் ஒருவர் அதிகமாக தங்க நகைகளை அணிந்து கொண்டு மது அருந்துவதாகவும், அவரை பார்ப்பதற்கு சந்தேகமாக இருப்பதாகவும் கோட்டார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அந்த கடைக்கு விரைந்து சென்ற போலீசார் அந்த வாலிபரை மடக்கிப்பிடித்து விசாரித்ததில் அவர் நாகர்கோவில் வாத்தியார்விளையைச் சேர்ந்த கோபி (27) என்பது தெரிய வந்தது.

அவர் தற்போது ஆரல்வாய்மொழி செண்பகராமன் புதூரில் வசித்து வருகிறார். அவரிடம் நகைகள் எப்படி வந்தது, யாருடையது என போலீசார் கேட்டபோது முன்னுக்குப் பின் முரணாக பேசினார்.

பின்னர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தியபோது அவர் ஆரல்வாய்மொழியில் ராயல்ஜேசு ரத்தினராவ் வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரது வீட்டுக்கு சென்ற போலீசார் அங்கு அதிரடி சோதனை மேற்கொண்டனர். அங்கு பானை உள்ளிட்ட பாத்திரங்களில் ஏராளமான தங்க நகைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் நகைகள் குறித்து விசாரித்தபோது கோபி பிரபல கொள்ளையன் என்பதும், நாகர்கோவில் உள்பட குமரி மாவட்டத்தில் நடந்த பல்வேறு திருட்டு சம்பவங்களில் கோபிக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. அவரது வீட்டில் இருந்து சுமார் 100 பவுன் நகைகள் மீட்கப்பட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் இந்த கொள்ளை சம்பவத்திற்கு உதவியதாக கோபியின் மனைவி மீதும் போலீசார் சந்தேகித்ததால் அவரிடமும் விசாரித்து வருகின்றனர்.

கொள்ளை சம்பவம் நடந்த 6 மணி நேரத்திற்குள் கொள்ளையனை போலீசார் கைது செய்து, நகைகளை மீட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
60 sovereign jewels were stolen from a house in Aralvaimozhi. Police have arrested the thief and recovered the jewels within 6 hours.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X