For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திக்விஜய் சிங் மனநலம் பாதிக்கப்பட்டவர்: அன்னா ஹசாரே

By Chakra
Google Oneindia Tamil News

Digvijay Singh and Anna Hazare
டெல்லி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தாக்குதல் தொடுத்துள்ளார் சமூக ஆர்வலரும் ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா குழுவின் முக்கிய உறுப்பினருமான அன்னா ஹசாரே.

இதையடுத்து அன்னா ஹசாரே தான் மனநலம் பாதிக்கப்பட்ட அனுபவமும் அதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்ட அனுபவமும் உள்ளவர் என்று திக்விஜய் சிங்கும் பதிலடி தந்துள்ளார்.

முன்னதாக அன்னா ஹசாரேவின் பின்னணியில் ஆர்எஸ்எஸ் இருப்பதாக திக்விஜய் சி்ங் குற்றம் சாட்டியிருந்தார். மேலும் ஹசாரேவின் உண்ணாவிரதப் பந்தலில் இடம் பெற்றிருந்த பாரத மாதாவின் படம் ஆர்எஸ்எஸ் வழக்கமாக பயன்படுத்தும் படம் தான் என்றும் கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்த ஹசாரே, புனேவில் யெரவாடா பகுதியில் ஒரு மன நல மருத்துவமனை உள்ளது. அதில் திக்விஜய் சிங்கை சேர்க்கலாம் என்றார்.

இதற்கு பதில் தந்துள்ள திக்விஜய் சிங், ஹசாரே மீது நான் மதிப்பு கொண்டவன். இப்போதும் எனக்கு அவர் மீது மரியாதை உண்டு. எனக்கு மென்டல் ட்ரீட்மென்ட் தேவைப்பட்டால் எந்த மருத்துவமனைக்குப் போவது என்பது குறித்து நான் முடிவு செய்து கொள்வேன். ஏற்கனவே இதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்ட ஒருவரிடம் (ஹசாரே) எனக்கு அறிவுரை தேவையில்லை என்றார்.

நன்கொடை அளித்தோர் விவரம்-ராம்தேவ் வெளியிட வேண்டும்:

முன்னதாக திக்விஜய் சிங் நிருபர்களிடம் பேசுகையில், பாபா ராம்தேவ் சிங்கின் அறக்கட்டளைக்கு உள்நாடு, மற்றும் வெளிநாட்டை சேர்ந்த ஏராளமான பேர் நன்கொடை கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் கொடுத்த பணம், இந்திய அரசுக்கு அறிவிக்கப்படாமல், மறைமுகமான ஹவாலா வழியில் அறக்கட்டளைக்கு வந்திருக்கிறது. இதனால் இந்திய அரசுக்கு செலுத்த வேண்டிய வருமான வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருக்கிறது.

ராம்தேவின் அறக்கட்டளை பற்றி மத்திய அரசின் நிதி, அமலாக்கப் பிரிவினர் சில கேள்விகளை எழுப்பியுள்ளனர். எனவே ராம்தேவ் தனது அறக்கட்டளைக்கு பணம் கொடுத்தவர்களின் பட்டியலை உடனே வெளியிட வேண்டும்.

பாபா ராம்தேவ் தனது போராட்டத்தை இந்தியாவின் எந்த மாநிலத்திலும் நடத்தலாம். ஆனால் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களை விட்டு விட்டால் நல்லது.

காந்தி சமாதியில் பாஜக தலைவர் சுஷ்மா சுவராஜ் நடனமாடியது, அவரது தகுதிக்கு ஏற்புடையது அல்ல என்றார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் ராம்தேவ்:

இந் நிலையில் 7 நாள் உண்ணாவிரதம் இருந்த ராம்தேவ் நேற்று வலுக்கட்டாயமாக டெஹ்ராடூனில் உள்ள ஹிமாலயன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அங்கும் உண்ணாவிரதத்தைத் தொடரும் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவருக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டு வருகிறது. ஆனாலும் உணவு உட்கொள்ள மருத்து வருகிறார். இதையடுத்து அவரது உண்ணாவிரதத்தை கைவிடச் செய்ய வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் உதவியை மத்திய அரசு நாடியுள்ளது.

இது தொடர்பாக மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி ரவிசங்கருடன் பேசினார். ஆனால், இனிமேல் ராம்தேவுடன் மத்திய அரசு நேரடியாக பேச்சு நடத்தாது என்று தெரிகிறது.

ராம்தேவுக்கு பக்குவம் போதாது-ஹசாரே:

இந் நிலையில் அன்னா ஹசாரே அளித்துள்ள ஒரு பேட்டியில், ஊழலுக்கு எதிராக ராம்தேவ் நடத்தும் போராட்டத்தை நான் ஆதரிக்கிறேன். ஆனால் அவரை போல நான் ஆர்.எஸ்.எஸ், விசுவ இந்து பரிஷத் அமைப்புகளை சார்ந்து இருக்க மாட்டேன். ஆயுத பயிற்சி கொடுப்போம் என்று ராம்தேவ் கூறுவதை எங்களால் ஏற்க இயலாது.

பாபா ராம்தேவ் எதையும் யோசிக்காமல் பேசி விடுகிறார். ஒரு போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தும் அளவுக்கு அவருக்கு பக்குவம் போதாது. ராம்தேவுக்கு யோகாவில் மட்டுமே நிபுணத்துவம் உள்ளது. அதை விடுத்து அவருக்கு வேறு எதிலும் அனுபவம் இல்லை. சமூக சேவையில் ஈடுபட வேண்டும் என்றால், பல விஷயங்களில் முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.

அந்த படிப்பினையை ராம்தேவ் இன்னும் படிக்கவில்லை. அதனால்தான் அவரது போராட்டம் திசை மாறி விட்டது. ராம்தேவ் உண்ணாவிரத போராட்டத்தில் சில குறைபாடுகள் ஏற்பட்டன. அது அரசுக்கு சாதகமாகிவிட்டது என்றார்.

English summary
Anti-graft crusader Anna Hazare has hit back at Congress, general secretary Digivijay Singh for allegations that he is being backed by the RSS. "In Pune's Yerawada there is a mental hospital, he should be taken there," Hazare told reporters
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X