For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈழப் பிரச்சினைக்காக நாங்கள் எடுக்காத நடவடிக்கையா?-கருணாநிதி கேள்வி!

Google Oneindia Tamil News

karunanidhi
சென்னை: 1956-ம் ஆண்டிலேயே சிதம்பரம் தி.மு.கழகப் பொதுக்குழுவிலே அண்ணா முன்னிலையில் இலங்கை தமிழர்களுக்கான தீர்மானத்தை முன்மொழிந்தவனே நான்தான் என்று கூறியுள்ள திமுக தலைவர் கருணாநிதி, இலங்கைத் தமிழர் பிரச்சினையைத் தீர்க்க திமுக எடுக்காத நடவடிக்கை ஏதாவது உண்டா என்றும் கேட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

இலங்கை மீது பொருளாதார தடை கோரி தமிழக சட்டப் பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தி.மு.கழகத்தின் சார்பில் அந்தத் தீர்மானத்தை வரவேற்றும், சட்டப் பேரவையிலே உள்ள எல்லா கட்சிகளும் ஒன்றுபட்டு தீர்மானத்தை ஆதரித்திட வேண்டுமென்றும் தி.மு.கழக சட்டமன்ற கட்சியின் துணைத் தலைவர் தம்பி துரைமுருகன் அவையில் பேசியிருக்கிறார்.

தி.மு.கழகம் பொறுப்பிலே இருந்தபோது இலங்கைத் தமிழர்களுக்காக அனைத்துக் கட்சிக் கூட்டம், சட்டப் பேரவை கட்சித் தலைவர்கள் கூட்டம், தமிழ்நாடு சட்டப் பேரவையில் தீர்மானம், மனிதச் சங்கிலி போராட்டம், பிரதமருக்கு தந்தி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா என்ற அறிவிப்பு, ராஜினாமா கடிதங்களை தானே பெற்றுக் கொண்டது, இறுதி எச்சரிக்கை என்ற அறிவிப்பு என்றெல்லாம் நடத்தியதாகவும், ஆனால் அவைகள் எல்லாம் என்னால் நடத்தப்பட்ட நாடகங்கள் என்றும் முதல்வர் ஜெயலலிதா பேரவையிலே முழங்கியிருக்கிறார்.

இலங்கை தமிழர்களுக்காக நான் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்து தன்னந்தனியாக அண்ணா நினைவிடத்திற்கு காலை 6 மணிக்கெல்லாம் என் வீட்டாரிடம் கூடச் சொல்லாமல் அங்கே சென்று உண்ணாவிரதத்தைத் தொடங்கினேன்.

1956-ம் ஆண்டிலேயே சிதம்பரம் தி.மு.கழகப் பொதுக்குழுவிலே அண்ணா முன்னிலையில் இலங்கை தமிழர்களுக்கான தீர்மானத்தை முன்மொழிந்தவனே நான்தான்.

24.8.1977 அன்று சென்னை மாநகரிலே ஒரேநாள் அறிவிப்பில் 5 லட்சம் பேரைத் திரட்டி இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக பிரம்மாண்டப் பேரணி நடத்தியது தி.மு.க.!

1981-ம் ஆண்டு இலங்கையிலே தமிழர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற செய்தி ஏடுகளில் வந்ததும், 13.8.1981 அன்று இந்தியப் பிரதமருக்கு இந்தப் பிரச்சினையை தீர்க்க மனிதாபிமான அடிப்படையில் உதவிட வேண்டும்' என்று கேட்டு தந்தி அனுப்பியவன் நான். இலங்கை தமிழர் பிரச்சினைக்காக 81-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் நாள் அன்று தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்த அ.தி.மு.க. அரசினால் கைது செய்யப்பட்டவன் நான்.

25.7.1983 அன்று வெலிக்கடை சிறைச் சாலைக்குள் நுழைந்து தங்கதுரை, குட்டிமணி, ஜெகன் போன்ற 35 தமிழர்களை படுகொலை செய்தபோது சென்னை மாநகரில் 7 மணி நேர அவகாசத்தில் 8 லட்சம் பேரைக் கூட்டி மாபெரும் பேரணி நடத்தியது நாம்.

மத்திய மாநில அரசுகள் இலங்கை தமிழர் பிரச்சினையில் அக்கறை காட்டிட வேண்டும் என்பதற்காக 10.8.1983 அன்று நானும், பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகனும் எங்களுடைய சட்டப் பேரவை உறுப்பினர் பதவிகளையே ராஜினாமா செய்தோம்.

16.5.1985 அன்று காஞ்சிபுரத்தில் இலங்கை தமிழர்களுக்காக நடைபெற்ற மறியல் போராட்டத்தில் கலந்துகொண்டு கைது செய்யப்பட்டேன். அதே ஆண்டு ஆகஸ்ட் 23-ந் தேதியன்று சந்திரஹாசன், பாலசிங்கம், சத்தியேந்திரா ஆகியோரை நாடு கடத்த உத்தரவிட்டதை அடுத்து சென்னையில் ஊர்வலம் நடத்தி, அந்த உத்தரவு ரத்து செய்யப்படாவிட்டால் போராட்டம் தொடருமென்று அறிவித்து, அதன் தொடர்ச்சியாக நாடு கடத்தும் உத்தரவைத் திரும்பப்பெறச் செய்தவர்களும் நாமே தான்!

இலங்கைத் தமிழர்களின் நலன்களைப் பாதுகாக்க வேண்டி 1986-ம் ஆண்டு மே திங்களில் மதுரையில் டெசோஅமைப்பின் சார்பில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டினை நடத்தியது நான் தான். 1989-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கைப் பிரச்சினைக்கு எப்படியாவது ஒரு தீர்வு காண வேண்டுமென்று விரும்பி, அன்றைய பிரதமர் வி.பி.சிங்கிடம் கலந்து கொண்டு அவர் தெரிவித்த யோசனையின் பேரில், பல்வேறு போராளிக் குழுவினரையும் தனித்தனியாகச் சந்தித்து உரையாடிவிட்டு, 19.12.1989 அன்று டெல்லியில் பிரதமரைச் சந்தித்து விவரங்களைக் கூறினேன்.

1990-ம் ஆண்டு ஜுன் மாதம் நான் டெல்லியில் முகாமிட்டு, பிரதமரிடம் வலியுறுத்தியதன் தொடர்பாக, 19-ம் தேதி மாலையில் பிரதமர் வி.பி.சிங் தனது இல்லத்தில் ஓர் அவசர ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டினார்.

23.4.2008 அன்று தி.மு.கழகம் ஆட்சியிலே இருந்த போதுதான் - தமிழகச் சட்டப் பேரவையில் - இலங்கையில் அமைதியை ஏற்படுத்துவதற்காக, முறையானதொரு அரசியல் தீர்வு எட்டப்படுவதற்காக பயனுள்ள பேச்சுவார்த்தைகளுக்கு ஏற்பாடு செய்ய மத்திய அரசு முன் வரவேண்டுமென்று இப்பேரவை வலியுறுத்துகிறது'' என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியதோடு நின்று விடவில்லை. 6.10.2008 அன்று இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கை தொலைபேசியிலே தொடர்பு கொண்டு டெல்லியிலே உள்ள இலங்கைத் தூதரை மத்திய அரசு உடனடியாக நேரில் அழைத்து, நிராயுத பாணியாக உள்ள இலங்கைத் தமிழர்களைக் கொல்வது குறித்து, இந்தியாவின் மன உளைச்சலை தெரிவிக்க வேண்டுமென்றும், இலங்கை அரசின் ராணுவ நடவடிக்கையும், இனப்படுகொலையும் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டதை ஜெயலலிதா மறந்து விட்டு அல்லது வேண்டுமென்றே மறைத்து விட்டு தற்போது குற்றஞ்சாட்டுவது சரிதானா என்பதை தமிழ்நாட்டு மக்கள்தான் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்!

இலங்கையிலே ராஜபக்சேயின் சிங்களப் படையினர் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்தபோது, அதனைக் கண்டித்து தமிழகத்தில் கண்டன ஊர்வலங்களும், பொதுக் கூட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடந்த போது, இலங்கை தமிழர்களைக் கொல்ல வேண்டு மென்று இலங்கை ராணுவம் எண்ணவில்லை; போர் என்றால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம்தான்'' என்று அறிக்கை விட்ட ஜெயலலிதா; தற்போது ஈழத் தமிழர்களின் மீது மிகுந்த அக்கறை கொண்டவரைப் போல தீர்மானத்தை முன்மொழிந்து விட்டால், இங்கேயுள்ள ஒருசிலர் ஆகா''வென அதனைப் பாராட்ட முன்வரலாம்; ஆனால் உண்மையான தமிழ் நெஞ்சத்திற்குரியவர்களுக்கு நாடகம் நடத்துவது யார் என்பது புரியாமலா போய் விடும்?

2006-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மாத்திரம் 7.12.2006 அன்றும், 23.4.2008 அன்றும், 12.11.2008 அன்றும், 23.1.2009 அன்றும் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக பேரவையில் தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறோம். குறிப்பாக 23.4.2008 அன்று பேரவையில் இலங்கைத் தமிழர்களுக்காக தி.மு.கழகம் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியது.

அதைத் தொடர்ந்து எம்.கே.நாராயணன் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்திய அரசு இலங்கை தூதுவர்களை அழைத்து அன்று பிற்பகலிலேயே பேசி விட்டதாகவும், பிரதமர் இந்தத் தகவலை எனக்கு தெரிவிக்கும்படி கூறினார் என்றும் சொன்னார்.

14.10.2008 அன்று இலங்கை தமிழர் பிரச்சினைக்காக தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டினேன். 15.10.2008 அன்று பிரதமருக்கு இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து கடிதம் எழுதினேன். 13.11.2008 அன்று உணவுப் பொருட்கள், துணிவகைகள் மற்றும் மருந்து பொருட்களை இலங்கை தமிழர்களுக்காக கப்பல் மூலம் அனுப்பிவைத்தோம்.

2009-ம் ஆண்டு இலங்கைத் தமிழர்களுக்காக சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது - இலங்கையிலே தமிழ் ஈழம் மலரும் என்றால், அதற்காக ஆட்சியை இழக்கக் கூட நாங்கள் தயார் என்று அறிவித்தவன் நான்.

ஆனால் ஜெயலலிதா தற்போது ஆட்சியிலே அமர்ந்ததும் இலங்கை தமிழர்களுக்கு தீர்மானம் நிறைவேற்றியதும், அதனை வரவேற்று, பாராட்டி பலரும் பேசுவதிலும், அறிக்கை விடுவதிலும் நமக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.

ஆனால் அவர்கள் அப்படி ஜெயலலிதாவைப் பாராட்டுகின்ற நேரத்தில், தேவையில்லாமல் நம்மீது விழுந்து பிறாண்டி திருப்தி அடைய நினைக்கிறார்களே, அது சரி தானா? உண்மையில் நடந்தது என்ன என்பதை உலகத்திற்கு நினைவுப்படுத்தத்தான் இந்த விவரங்களையெல்லாம் இங்கே தொகுத்துக் கூறியிருக்கிறேன். மனசாட்சி உள்ள ஒரு சிலராவது இந்த உண்மைகளைப் புரிந்து கொள்வார்களானால்; அதுவே எனக்கு ஓர் ஆறுதல்தான் என்று அவர் கூறியுள்ளார்.

English summary
DMK chief Karunanidhi has slammed ADMK and CM Jayalalitha for their stand in Lankan Tamil issue. He has also listed out the earlier DMK govt's actions in the issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X