For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கையுடனான வணிக உறவை நிறுத்த வேண்டும் – சீமான் கோரிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: இலங்கையுடனான வர்த்தகத்தை தமிழ்நாட்டு வணிகர்கள் நிறுத்திக் கொள்ள முன்வர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கேட்டுக்கொண்டுள்ளார்.

தூத்துக்குடி - கொழும்பு இடையே தொடங்கப்பட்டுள்ள பயணிகள் கப்பல் போக்குவரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக அரசுக்கு பாராட்டு

தமிழர்கள் செத்தால் என்ன, இருந்தால் என்ன என்ற தமிழர் எதிர்ப்பு மனப்பாங்குடன் செயல்பட்டு வரும் இந்திய அரசு, சிங்கள இனவாத அரசுடன் நட்பு கொண்டாடி வருகிறது. அதன் ஒரு வெளிப் பாடாகவே, தூத்துக்குடிக்கும், கொழும்புவிற்கும் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தை மத்திய அரசு அங்கீகரித்து, அதனை தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் அமைச்சர் ஜி.கே.வாசனைக் கொண்டு தொடங்கியும் வைத்துள்ளது. இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடக்க விழாவை தமிழக அரசு புறக்கணித்துள்ளதை நாம் தமிழர் கட்சி பாராட்டி வரவேற்கிறது.

சிங்கள இனவாத ராஜபக்சே

இலங்கை தமிழர்களை கொத்துக் கொத்தாக கொன்று குவித்து விட்டு, இன்றைக்கும் அவர்களின் வாழ்வை சின்னபின்னமாக்கி சிதறடித்து விட்டு, அரசியல் தீர்வு எதையும் வெளியில் இருந்து யாரும் வற்புறுத்த முடியாது என்று திமிராக பேசி வருகிறது சிங்கள இனவாத ராஜபக்சே அரசு.

சமீபத்தில் இலங்கை சென்ற இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் தலைமையிலான குழு, தமிழர்களுக்கு குறைந்தபட்சம் அதிகாரப் பகிர்வு அளிக்கக் கூடிய தீர்வை உருவாக்குமாறு விடுத்த பெயரளவுக் கோரிக்கையை கூட ராஜபக்சே ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டதாக கொழும்புவில் இருந்து வெளிவரும் சிங்கள, ஆங்கில நாளிதழ்கள் தெரிவிக்கின்றன.

தமிழக அரசுக்கு அவமானம்

தமிழனத்திற்கோ, தமிழ்நாட்டு மக்களுக்கோ எந்த வகையிலும் தொடர்பில்லாத ஐரோப்பா கூட இலங்கைக்கு இதுநாள் வரை அளித்து வந்த வணிக வரிச்சலுகைகளை நிறுத்திவிட்டது. ஆனால் தமிழர்களை தன்நாட்டினராகக் கொண்ட இந்தியாவோ, தமிழினத்தை கொன்று குவித்த இனவெறி அரசுடன் கூடிக் குலாவி வருகிறது.

ஈழத் தமிழர் நலனிலும், தமிழக மீனவர்கள் வாழ்வுரிமையை பாதுகாக்கும் நோக்குடன் தமிழக அரசு, இலங்கை அரசுக்கு எதிராக பொருளாதார தடையை கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவையிலேயே ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இத்தீர்மானத்தை மதிக்காமல், கொழும்புவுடன் பயணிகள் போக்குவரத்தை தொடங்கியுள்ளது மத்திய அரசு.

வணிகத்தை நிறுத்தவேண்டும்

இதன் மூலம் தமிழக அரசு தமிழ்நாட்டு சட்டப் பேரவையில் நிறைவேற்றிய பொருளாதார தடை தீர்மானத்தை மத்திய அரசு அவமதித்துள்ளது. பொருளாதாரத் தடையை தமிழர்களாகிய நாம் தமிழக அரசுடன் இணைந்து ஒருமித்த உள்ளத்துடன் முன்னெடுப்போம்.

இலங்கையின் பொருட்களை புறக்கணிப்போம். இலங்கையோடு செய்யும் வணிகத்தை தமிழக வணிகர்கள் நிறுத்த வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சி கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு சீமான் அதில் கூறியுள்ளார்.

English summary
Nam Tamizhar party leader Seeman requested to TamilNadu traders on his press relase. Traders should stop their all correspondence and trading in Sri Lanka said seeman
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X