For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிமுக ஆட்சியின் பல்வேறு நலத் திட்டங்களுக்கு மக்கள் அமோக ஆதரவு!

Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: அதிமுக ஆட்சி கொண்டு வந்துள்ள பல்வேறு திட்டங்களுக்கு மக்கள் ஏகோபித்த ஆதரவைத் தெரிவித்துள்ளனர். குறிப்பாக கேபிள் டிவியை அரசுடமையாக்கும் திட்டத்திற்கு மிகப் பெரிய ஆதரவு கிடைத்துள்ளது. அதேபோல மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்திற்கும் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது.

சென்னை லயோலா கல்லூரியன் மக்கள் ஆய்வகம் அமைப்பு தேர்தல் சமயத்தில் கருத்துக் கணிப்பு எடுத்து வெளியிடுவது வழக்கம். கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு இந்தத் துறை நடத்திய கருத்துக் கணிப்பில் அதிமுக ஆட்சிக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட குறிப்பிட்ட கட்சியிடமிருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பவே, மிகவும் தாமதமாக தனது முடிவை லயோலா கல்லூரி வெளியிட நேர்ந்தது.

இந்த நிலையில் கடந்த ஒரு மாத கால அதிமுக ஆட்சி குறித்த மக்கள் கருத்தை அறிந்து அதை வெளியிட்டுள்ளது மக்கள் ஆய்வகம்.

மே 21-ந் தேதி முதல் 29-ந் தேதி வரையும், ஜுன் 11-ந் தேதி முதல் 15-ந் தேதி வரையும் என 2 கட்டங்களாக 3,132 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது.

கருத்துக் கணிப்பு முடிவினை லயோலா கல்லூரி பேராசிரியர் பாதிரியார் ஹென்றி ஜெரோம் வெளியிட, முதல் பிரதியை பேராசிரியர் பாதிரியார் எஸ்.ராஜநாயகம் பெற்றுக்கொண்டார்.

ஆய்வு முடிவுகளில் அதிமுக அரசின் திட்டங்களுக்கு மக்கள் ஆதரவு அபரிதமிமாக இருப்பது தெரிய வந்துள்ளது.

எதிர்பார்க்கப்பட்ட அதிமுக வெற்றி

சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. அணி வெற்றிபெறும் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் என்று 74.8 சதவீதம் பேர் தெரிவித்தனர். அதேநேரத்தில் தேர்தல் முடிவுகள் முற்றிலும் எதிர்பாராத வகையில் இருந்ததாக 25 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

அ.தி.மு.க. அணியின் மாபெரும் வெற்றிக்கு ஆட்சி மாற்றம் வேண்டி 44 சதவீதம் பேர், தி.மு.க. தலைமையிலான குடும்ப ஆட்சி காரணம் என்று 32 சதவீதம்பேர், விலைவாசி உயர்வு காரணம் என்று 28.7 சதவீதம் பேர், மின்வெட்டு என்று 25.8 சதவீதம்பேர், அரசு துறைகளில் லஞ்சம்-ஊழல் காரணம் என்று 22.9 சதவீதம் கூறினார்கள்.

தேமுதிக வெற்றிக்கு அதிமுகவே காரணம்

தே.மு.தி.க.வின் வெற்றிக்கு அக்கட்சி அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்ததுதான் காரணம் என்று 52 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். ஆட்சி மாற்றம் வேண்டி என்று 23 சதவீதம் பேரும், விஜயகாந்த் மீது நம்பிக்கை என்று 22 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்தனர்.

காங். படு தோல்விக்கு இலங்கைப் பிரச்சினையே காரணம்

காங்கிரஸ் கட்சியின் படுதோல்விக்கு அக்கட்சி இலங்கை தமிழர் பிரச்சினையில் இரட்டை வேடம் போட்டதே காரணம் என்று 61.5 சதவீதம் பேர் ஆணித்தரமாக தெரிவித்துள்ளனர்.

கேபிள் டிவியை அரசுடமையாக்க அமோக ஆதரவு

கேபிள் டி.வி.யை அரசுடமையாக்கும் திட்டத்திற்கு மக்களிடையே அமோக ஆதரவு காணப்படுகிறது. இத்திட்டத்திற்கு 91.3 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கச்சத்தீவு தீர்மானத்திற்கு ஆதரவு

கச்சத்தீவை மீட்கக்கோரி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை 63 சதவீதம் பேரும், இலங்கை பிரச்சினையில் ஐ.நா. அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசு மீது நடவடிக்கை மத்திய அரசை வலியுறுத்தி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை 81.5 சதவீதம் பேரும் வரவேற்றுள்ளனர்.

இலங்கை தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு தனி ஈழம் அமைப்பதுதான் என்பது 65 சதவீதம் பேரின் விருப்பமாக உள்ளது.

தாலிக்குத் தங்கம் திட்டத்திற்கு பெரும் ஆதரவு

பெண்களுக்கு திருமண உதவித்தொகை அதிகரிப்பு, தாலிக்கு தங்கம் தரும் திட்டத்திற்கு பெண்கள் மத்தியில் ஏகோபித்த ஆதரவு உள்ளது. இந்தத் திட்டத்தை வரவேற்று 80 சதவீதம் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் படித்த பெண்கள், படிக்காத பெண்கள் என்று பாகுபாடு பார்க்காமல் எல்லாருக்கும் ஒரேமாதிரி உதவித்தொகை வழங்க வேண்டும் என்று 41 சதவீதம்பேர் விரும்புகிறார்கள்.

முதியோர் உதவித் தொகைக்கு ஆதரவு

முதியோர் உதவித்தொகை அதிகரிப்பு மற்றும் வங்கி மூலமாக பண பட்டுவாடா செய்யும் திட்டத்திற்கு 85.8 சதவீதம் ஆதரவு தெரிவித்துள்ளார்கள். இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி திட்டத்தை 54.4 சதவீதம் பேர் வரவேற்றுள்ளனர்.

அதேசமயம், பராமரிப்பு பிரச்சினையை சமாளிக்க வழிசெய்யாவிட்டால் இந்த திட்டம் தோல்வியில் முடியும் என்ற கருத்து வலுவாக முன்வைக்கப்படுகிறது.

இலவச அரிசித் திட்டத்திற்கு ஆதரவு

ஜெயலலிதா அரசின் இலவச அரிசி திட்டத்திற்கு 67.5 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்தனர். இந்த திட்டத்தை கைவிட்டு வேறு ஆக்கப்பூர்வமான திட்டங்களுக்கு அந்த பணத்தை பயன்படுத்த வேண்டும் என்ற விமர்சனத்தை 23.5 சதவீதம் பேர் முன்வைத்தனர்.

இந்த திட்டம் மக்களை சோம்பேறிகளாக ஆக்கும் திட்டம் என்று 18.8 சதவீதம் பேரும், ஆண்கள் இன்னும் பொறுப்பற்றவர்களாகவும், குடிகாரர்களாகவும் மாற வழிவகுக்கும் என்று 11 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்தனர்.

லேப்டாப் திட்டத்திற்கு பெரும் ஆதரவு

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் கம்ப்யூட்டர் வழங்கும் திட்டத்திற்கு 84.7 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

புதிய தலைமைச் செயலகம் கைவிடப்பட்டது சரியே

தலைமைச் செயலகத்திற்கான புதிய கட்டிடத்தை கைவிட அரசு எடுத்துள்ள முடிவுக்கு 66 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்தனர். புதிய கட்டிடத்தில் தமிழ் பண்பாடு, அழகியல் அம்சங்கள் இல்லை என்று 17 சதவீதம் பேரும், நெரிசலான இடத்தில் அமைந்துள்ளது என்று 11 சதவீதம் பேரும், கட்டிட வேலை முடியவில்லை என்று 8.5 சதவீதம் பேரும் கூறினார்கள்.

புதிய தலைமைச்செயலக கட்டிடத்தை அரசு கைவிடுவதற்கு 32 சதவீதம்பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். முற்றிலும் கைவிடுவதால் அரசுக்கு பேரிழப்பு என்று 20 சதவீதம் பேர் தெரிவித்தனர்.

சமச்சீர் கல்விக்கு ஆதரவு

சமச்சீர் கல்வி திட்டத்தை ரத்துசெய்யும் வகையில் தமிழக அரசு கொண்டுவந்துள்ள சட்டத் திருத்தத்துக்கு பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி உடனடியாக சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் 74.7 சதவீதம்பேர் கூறியுள்ளனர்.

பள்ளி கட்டண நிர்ணயத்திற்கும் அதிருப்தி

தனியார் பள்ளி கல்விகட்டண பிரச்சினையைப் பொருத்தவரையில், தி.மு.க. அரசும், அ.தி.மு.க அரசும் உறுதியான நிலைப்பாடு எடுக்கவில்லை என்று 12 சதவீதம் பேர் கூறி உள்ளனர்.

டாஸ்மாக் நேரத்தை அதிகரிக்க எதிர்ப்பு

டாஸ்மாக் கடைகளில் விற்பனை நேரத்தை அதிகரிக்கும் முடிவுக்கு 73 சதவீதம் பேர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.

நலத்திட்டங்களை காரணம் காட்டி மது விற்பனை செய்யும் தவறை செய்யாமல் வருமானத்தை பெருக்க மாற்று வழிகளை அரசு ஆராய வேண்டும் என்று 12 சதவீதம் கூறினார்கள்.

இலவச டிவி திட்டம் தொடரட்டு்மே

இலவச கலர் டி.வி. திட்டத்தை ரத்துசெய்து மீதமுள்ள ஒன்றே கால் லட்சம் டி.வி.க்களை அனாதை இல்லங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்க முடிவு செய்திருப்பதை 34 சதவீதம் பேர் வரவேற்றுள்ளனர்.

ஆனால், பெரும்பாலான குடும்பங்களுக்கு கடந்த ஆட்சியில் டி.வி. வழங்கப்பட்டுவிட்ட நிலையில் மீதமுற்ற குடும்பங்களை ஏமாற்றாமல் அவர்களுக்கும் வழங்குவதுதான் நியாயமானது என்று 47 சதவீதம் பேர் கருத்து தெரிவித்தனர்.

அரசின் பெரும்பாலான திட்டங்களுக்கு மக்கள் ஆதரவு இருப்பதும், அரசின் சில முடிவுகளுக்கு மக்களிடையே இருவிதமான கருத்துக்கள் இருப்பதும் இந்த கருத்துக் கணிப்பின் மூலம் தெரிய வந்துள்ளது.

English summary
ADMK govt has got good response from the people of TN for its various schemes, according to the survey conducted by Loyola college. People have given thumping support to free laptops for students, nationalisation of Cable TV network and free rice scheme.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X