For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'மே-17 இயக்கத்தின் மெழுகுவர்த்தி அணிவகுப்பு': நாளை மாலை மெரீனாவில் அஞ்சலி செலுத்துவோம்!

By Chakra
Google Oneindia Tamil News

Candle
சென்னை: சித்திரவதைக்கு உள்ளானவர்களுக்கு ஆதரவாக ஜூன் 26ம் தேதி சென்னை கடற்கரையில் மெழுகுவர்த்திகள் ஏந்தி நினைவு அஞ்சலி செலுத்துமாறு அனைவருக்கும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், பாமக, நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான உள்ளிட்டோர் அழைப்பு விடுத்துள்ளனர்.

இது குறித்து வைகோ விடுத்துள்ள அறிக்கையில், மனிதகுல வரலாற்றில் மிகவும் கொடூரமாக நடத்தப்பட்ட மனிதப் பேரழிவுதான் சிங்கள அரசு இலங்கைத் தீவில் நடத்திய தமிழ் இனப் படுகொலை ஆகும்.

கடந்த ஐம்பது ஆண்டுக்கால துன்பங்கள் சூழ்ந்த தமிழ் ஈழ மக்களின் வாழ்வில், இலட்சக்கணக்கான தமிழர்கள், குறிப்பாக, 2009ம் ஆண்டில் மட்டும், 30,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளிட்ட 1,40,000 தமிழர்கள், ஈவு இரக்கம் இன்றிப் படுகொலைக்கு உள்ளானதை நினைக்கும் போதே நெஞ்சில் வேதனைத் தீ எரிகிறது. 80,000க்கும் மேற்பட்ட தமிழ்ப் பெண்கள் விதவைகள் ஆக்கப்பட்டு உள்ளனர்.

அது மட்டும் அன்றி, தாய்த் தமிழகத்து மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தொடர்ந்து நடத்தி வந்த தாக்குதல்களில், 543 மீனவர்கள் கொல்லப்பட்டனர்; 2000 க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றனர்; 700 மீனவர்களைக் காணவில்லை.

சிங்கள அரசின் இனப்படுகொலையால் பலியான தமிழர்கள், உயிர்நீத்த தாய்த் தமிழகத்து மீனவர்களுக்கு நினைவேந்தல் செய்திடும் வகையில், சித்திரவதைக்கு உள்ளானவர்களுக்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் மன்றம் கடைப்பிடிக்கும் அனைத்து உலக நாளாகிய ஜூன் 26 ம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணி அளவில், சென்னை கடற்கரையில், கண்ணகி சிலை அருகில், மெழுகுவர்த்திகள் ஏந்தி, நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கு பெற மே 17 இயக்கம் என்ற அழைப்பு விடுத்து உள்ளது.

மெழுகுவர்த்தி எரிந்து ஒளி தருதல் போல, தங்களைத் தாங்களே எரித்துக் கொண்டு, தமிழ் ஈழ விடுதலை உணர்ச்சித் தீயை தமிழர் மனங்களில் வளர்த்த முத்துக்குமார் உள்ளிட்ட தியாகிகளை நெஞ்சில் நிறுத்தி, மெழுகுவர்த்தி ஏந்திடும் நிகழ்ச்சியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா அவர்களும், கழகக் கண்மணிகளும் கலந்து கொள்ள இருக்கின்றார்கள்.

சாதி, மத, கட்சி எல்லைகளைக் கடந்து நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், தமிழ் இன உணர்வாளர்கள் இதில் பங்கு ஏற்க வேண்டுகிறேன் என்று கூறியுள்ளனார்.

பழ.நெடுமாறன் கோரிக்கை:

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில்,

சிங்கள இனவெறி அரசின் திட்டமிட்ட இனப்படுகொலைக்கு ஆளாகி உயிர்நீத்த ஈழத் தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் நினைவேந்தல் செலுத்தும் வகையில் சென்னைக் கடற்கரையில் ஜூன் 26ம் தேதி மாலை 5 மணிக்கு மெழுகுதிரி ஏந்தி நிற்கும் நிகழ்ச்சியை மே 17 இயக்கம் முன்னின்று நடத்துகிறது.

ஐ.நா. மன்றம் கடைப்பிடிக்கும் அனைத்துலக நாள் அன்று இந்த நிகழ்ச்சி நடைபெறவிருப்பது சிறப்புக்குரியது. இந்த நிகழ்ச்சியில் தமிழர்கள் அனைவரும் எத்தகைய வேறுபாடும் இல்லாமல் பங்கெடுத்து நமது உணர்வை வெளிப்படுத்தத் திரண்டு வருமாறு வேண்டிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

பாமகவும் அழைப்பு:

பாமக இணை பொதுசெயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மக்கள் ஒன்றுபடாமல் எந்தபோராட்டமும் வென்றதில்லை மிகவிரைவாக முன்னேறிகொண்டிருக்கும் இந்த அறிவியல் உலகத்தில் ஒரு இனம் தன் சொந்தமண்ணை இழந்து . தாய் மகனை இழந்து மகன் தாயை இழந்து , பெண்கள் கற்பை இழந்து முள்வேலி முகாம்களுக்குள் அடைபட்டு மானம் ஒன்றே பிரதானம் என்று வாழ்ந்த இனம் இன்று ஒரு வேளை சோற்றுக்கு சிங்களவனிடம் கையேந்தி நிற்கிறது.

அறவழி போரட்டத்தில் 35 ஆண்டுகள் போராடியும் கிடைக்காத உரிமைகள் ஆயுத போராட்டத்தின் மூலமாக பெறலாம் என்று இன விடுதலைக்கு போராடிய உன்னத தலைவனை 20க்கும் மேற்பட்ட நாடுகளின் துணையோடு வெற்றி பெற்று விட்டோம் என்று கூவி கொண்டிருக்கும் இனபடுகொலையாளன் ,போர்குற்றவாளி ராசபக்ச. அத்துடன் இல்லாமல் இன்று வரை தாய் தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 400 மீனவர்கள் சிறீலங்காக் கடற்படையால் கொல்லப்பட்டது ராசபக்ச மற்றும் சிறீலங்கா சிங்கள இனவாத தலைமையினால் மட்டுமே.

மேலும் நாம் இதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தால் உலக வரலாற்றில் தமிழனுக்கு இனி இழிநிலை தான் என்று வரலாறு நம்மை பழிக்க கூடாது.

அடுத்தவர் வீட்டில் துக்க நிகழ்வென்றால் நாம் அதை அந்த துக்கத்தை பகிர்வது கிடையாதா?, ஒரு இனத்தையே அழித்திருக்கிறார்கள் கொல்லபட்டவர்களின் உறவுகளுக்கு துயர் துடைக்க வேண்டாமா?, அவர்களுக்கு நீதீ கிடைக்க வேண்டாமா? இதற்கு குரல் கொடுக்க தமிழனாக இருக்க வேண்டும் என்றில்லை மனிதநேயம் கொண்டவராக இருந்தால் போதும்.

வெறும் 4 லட்சம் மக்கள் தொகையை கொணட ஒரு இனம் நாடு அடையும் போது 10 கோடி தமிழர்கள் சேர்ந்து தமிழீழத்தைஅடைய முடியாதா என்ன?

இப்போது நடக்கும் போராட்டங்களில் உலகதமிழர்களில் 10 சதவீதம் கூட வீதியில் இறங்கி போராட வரவில்லை.
தமிழனுக்கும் தமிழுக்கும் பிரச்சனை என்று வரும்போது ஒன்றிணைந்தால் நம்மை யாராவது வீழ்த்த முடியுமா? நமக்குள் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நாம் எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் இதற்காக நாம் நிச்சயமாக ஒன்று கூடி போராடித்தான் ஆகவேண்டும்.

வாருங்கள் சொந்தங்களே நம் இனவிடுதலைக்காக , தமிழனுக்கென்று உலக வரைபடத்தில் ஒரு நாடு உருவாக , பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நியாயம் கிடைக்க வாருங்கள் ஜூன் 26 மாலை 4 மணிக்கு ஐ.நா. சர்வதேச சித்திரவதைகளுக்கான எதிரான தினத்தில் மெரினா கடற்கரையில் மே 17 இயக்கம் நடத்தும் இந்த நிகழ்வில் குடும்பத்துடன் கலந்து கொண்டு உலகத்தை திரும்ப செய்வோம் என்று கூறியுள்ளார்.

சீமான் கோரிக்கை:

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான விடுத்துள்ள அறிக்கையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26ம் நாளை உலகெங்கிலும் சித்ரவதையால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச ஆதரவு தினமாக ஐ.நா கடைபிடித்து வருகிறது. அரசுக்கு எதிராகப் போராடியவர்கள், தீவிரவாதிகள் என்று பொய்ப்பழி சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டோர், இனத்தின் விடுதலைக்காக போராடியவர்கள் ஆகியோர் தாம் பெருமளவிற்கு சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். அப்படிப்பட்ட பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரியூம் சித்ரவதை மானுடத்திற்கு ஒவ்வாத நடவடிக்கை என்பதை உலகிற்கு உணர்த்தவூம் இந்நாள் ஐ.நாவால் கடைபிடிக்கப்படுகிறது.

“சித்ரவதையென்பது மனித உரிமைக்கும் மனித நேயத்திற்கும் எதிரான பயங்கரத்தின் திட்டமிட்ட வடிவமாகும் சக மனிதனை மனிதாபிமானமற்ற வகையில் கொடூரமான துன்பத்திற்கு ஆளாக்குவதாகும்“ என்று சித்ரவதைக்கு எதிரான ஐ.நா. பிரகடனம் கூறுகிறது. 1984 ஆண்டு டிசம்பர் 10ம் தேதி ஐ.நா. அவையால் வெளியிடப்பட்ட சித்ரவதைக்கு எதிரான பிரகடனத்தில் இலங்கை இந்தியா உள்ளிட்ட 147 நாடுகள் கையெழுத்துட்டுள்ளன. இலங்கை 1994ம் ஆண்டு இந்தப் பிரகடனத்தில் கையெழுத்திட்டு ஏற்றுக்கொண்டது.

ஆனால் இந்த நாடுதான் சித்ரவதையை ஈழத் தமிழர்களுக்க எதிரான ஒடுக்குமுறையின் முதன்மை ஆயூதமாக இன்று வரை பயன்படுத்தி வருகிறது. உடல், மனரீதியாக பாதிப்பது பட்டினி போடுவது, சட்டத்திற்குப் புறம்பாக தடுத்து வைத்தல், வெள்ளை வேன்களைக் கொண்டு கடத்தல், காணடித்தல் குடும்பத்தினரை பிரித்தல், மனித உரிமைகளைப் பறிக்கும் சட்டங்களைக் கொண்டு கைது செய்வது விசாரணை என்ற பெயரில் சித்திரவதைச் செய்வது என அந்நாட்டின் பூர்வீக இனத்தையே வதைத்து சிதைத்து சின்னாபின்னமாக்கி வருகிறது ராஜபக்ச இனவெறி அரசு.

போரின் போதும், போர் முடிந்த பின்னரும் வன்னி முகாம்களில் இத்தகைய வதைகளை இலங்கை அரசு வெளிப்படையாகவே மேற்கொண்டு வருகிறது.

இரண்டரை ஆண்டுக்காலப் போரில் சர்வதேச நெறிமுறைகளுக்கு எதிரான ஆயூதங்களை பயன்படுத்தி ஒன்றரை லட்சம் ஈழத் தமிழர்களை கொன்றுக் குவித்தது அந்த இனப்படுகொலை முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் தமிழர்கள் இலங்கை இனவெறி அரசாலும் ராணுவத்தாலும் தொடந்து வதைபட்டு வருகின்றனர்.

தொடர் சித்திரவதை, கற்பழிப்புகள், கடத்திக் காணடித்தல் அவர்கள் வாழ்ந்த இடங்களில் குடியமர்த்தாமல் சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கி மன உளைச்சலை அதிகரித்தல் என்று பலவழிகளிலும் ஈழத் தமிழினம் இன்று சிங்கள இனவெறியின் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

சிங்கள அரசின் மனிதாபிமானமற்றப் போக்கிற்கு இந்திய மத்திய அரசு மறைமுகமாக துணை நிற்கிறது. ஈழத் தமிழர்களை மட்டுமின்றி தமிழ்நாட்டின் மீனவர்களையும் சிங்கள் கடற்படை கால் நூற்றாண்டுக் காலமாக நடுக்கடலில் படுகொலை செய்தும் கண்ணியக் குறைவாக நடத்தியும் வதைத்து வருகிறது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தோல்விக்காக ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை சிங்கள கடற்படை கை கால்களை வெட்டி கொன்றதை விட வேற என்னா அத்தாட்சி வேண்டும்?.

எனவே இலங்கை அரசின் தமிழின வதை போக்கை தோலுறுத்துக் காட்டும் முகமாக ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னை மெரீனா கடற்கரையில் கண்ணகி சிலை பின்புறம் அணி திரள்வோம், தமிழின வதைக்கு நியாயம் கேட்டு தமிழர்களாகிய நாம் அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி நிற்போம்.

சிங்கள அரசின் இருண்ட இனவெறிச் சித்திரவதைக் கூடங்களை உலகம் இந்த ஒளியின் வழி காணட்டும். இந்த ஒளி ஈழத் தமிழருக்கு விடுதலையையும் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு பாரம்பரிய மீன பிடி உரிமையையும் பெற்றுத் தரும் பாதையை காட்டட்டும் என்று கூறியுள்ளார்.

English summary
May 17 Movement, an organisation formed to voice support for Sri Lankan Tamils, will conduct candle light rally at Chennai Marina beach on June 26. Leaders like Vaiko, Nedumaran have extended their support for this rally
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X