For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மு.க.ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து வீடியோ ஆதாரங்களுடன் சைதை துரைசாமி வழக்கு

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை கொளத்தூர் தொகுதியில் மோசடி செய்து மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளதால் அதை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி வீடியோ ஆதாரங்களுடன் அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த சைதை துரைசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனு:

தமிழக சட்டசபைக்கு கடந்த ஏப்ரல் மாதம் 13-ந் தேதி நடந்த தேர்தலின் போது கொளத்தூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் நான் போட்டியிட்டேன். என்னை எதிர்த்து தி.மு.க. சார்பில், முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டார். தேர்தல் பிரசாரத்தின் போதும், ஓட்டு எண்ணிக்கையின் போதும் தி.மு.க. வினர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டனர்.

காவல்துறை அதிகாரிகளும், மாநகராட்சி ஊழியர்களும் அவர்களுக்கு துணை போய் சாதகமாக நடந்து கொண்டனர். அதிகார பலம், பண பலம், ஆள் பலம் ஆகியவற்றை கொண்டே கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளார். இதற்கு எத்தனையோ உதாரணங்களை சொல்ல முடியும்.

தேர்தல் கமிஷனிடம் சமீபத்தில் மு.க.ஸ்டாலின் தேர்தல் செலவு கணக்கை சமர்ப்பித்துள்ளார். அதில் செலவை தவறாகக் குறிப்பிட்டுள்ளார். மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதிக்கு தேர்தல் பிரசாரம் செய்ய வந்த போதெல்லாம் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தனர். சுமார் ரூ.1 கோடி அளவுக்கு பட்டாசுகள் வெடிக்கப்பட்டுள்ளது.

இந்த செலவு கணக்கை மு.க.ஸ்டாலின் காட்டவில்லை. மேலும் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய வந்த போதெல்லாம் அவருக்கு பின்னால் 20 முதல் 30 கார்களில் தி.மு.க. வினர் அணி வகுத்து வந்தனர். இது தேர்தல் நடத்தை விதி முறைகளுக்கு எதிரானதாகும்.

மு.க. ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் முகாமிட்டு பிரசாரம் செய்தார். இப்படி பிரசாரம் செய்ய தேர்தல் கமிஷனில் முறைப்படி அனுமதி பெற வேண்டும். ஆனால் துர்கா ஸ்டாலின் அத்தகைய அனுமதி எதையும் பெறவில்லை.

சென்னை மாநகராட்சி மேயர் அவருக்கு துணையாக செயல்பட்டார். கொளத்தூர் தொகுதி வாக்காளர்களுக்கு ஏராளமாக பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. ரூ.500 முதல் ரூ.10 ஆயிரம் வரை வாக்காளர்களுக்கு கொடுத்தனர். தி.மு.க. பிரமுகர்களுக்கு இதற்காக பணம் சப்ளை செய்யப்பட்டது.

கொளத்தூர் தொகுதிக்குள் ஊடுருவிய ஒரு வாகனத்தில் இருந்து ஒரு கோடியே 18 லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த பணம் கூட தி.மு.க.வினரால் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய கொண்டு வரப்பட்ட பணம் தான்.

மே மாதம் 13-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடந்த போது தி.மு.க. பிரமுகர்கள் பெரிய அளவில் வன்முறைகளில் ஈடுபட்டனர். ஒரு மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரத்தில் எவ்வளவு வாக்குகள் பதிவாகி உள்ளது என்ற விவரம் காட்டப்படவில்லை. அதில் ஏதோ தில்லுமுல்லு நடந்துள்ளது.

இதை தேர்தல் அதிகாரி கவனத்துக்குகொண்டு சென்ற நான் ஓட்டு எண்ணிக்கையை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்தேன். ஆனால் எனது கோரிக்கையை தேர்தல் அதிகாரி ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் உதவியுடன் மு.க.ஸ்டாலினை வெற்றி பெற வைக்க பல்வேறு வகைகளிலும் முயற்சி நடந்தது. 16-வது சுற்று ஓட்டு எண்ணிக்கை நடந்து கொண்டிருந்தபோது என்னையும், அ.தி.மு.க. நிர்வாகிகளையும் போலீஸ் துணையுடன் திட்டமிட்டு வெளியேற்றினார்கள்.

சென்னை மாநகராட்சி அதிகாரிகளும், கொளத்தூர் தொகுதி தேர்தல் அதிகாரியும் மு.க.ஸ்டாலினை வெற்றி பெற வைக்கும் நோக்கத்தில் செயல்பட்டனர். ஓட்டுப்பதிவின் போதும் தேர்தல் அதிகாரி பாரபட்சத்துடன் நடந்து கொண்டார். எங்களை அவர் பூத் சிலிப் கொடுக்க அனுமதிக்கவில்லை. ஆனால் தி.மு.க. வினர் உதயசூரியன் சின்னம் பொறித்த பூத் சிலிப் கொடுக்க மனுமதித்தனர்.

தி.மு.க.வினர் நடத்திய முறைகேடுகள் பற்றி நான் கொடுத்த புகார்களை தேர்தல் அதிகாரி கண்டு கொள்ளவில்லை. எனவே கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றதை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ள துரைசாமி, இதுதொடர்பான வீடியோ ஆதாரங்களையும் தனது மனுவுடன் இணைத்துள்ளார்.

English summary
Saidai Duraisami who had contested in Chennai Kolathur against M.K.Stalin in the assembly polls havs challenged Stalin's victory in the polls. He filed a petition regarding this today in the HC.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X