For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பத்மநாபசாமி கோயில்-புட்டபர்த்தி ஆசிரம சொத்துகள்: மக்கள் நலப் பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும்-வீரமணி

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: இந்தியாவில் உள்ள கோயில் சொத்துகள், புட்டபர்த்தி சாய்பாபா போன்றவர்களின் சொத்துகளை மக்கள் வளர்ச்சிப் பணிகளுக்குப் பயன்படுத்த வேண்டும், மக்கள் அளித்த பணம் மக்களுக்கே திருப்பித் தரப்படுவதில் தவறில்லை என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நம் நாட்டில் இந்தியாவில் உள்ள முதலாளித்துவத்தை மூன்று வகையாகப் பிரிக்க வேண்டும் என்பார் தந்தை பெரியார்.

ஒன்று, கோயில்களில் உள்ள கடவுள் அவதாரங்களின் அள்ளக் குறையாத, முதல் போடா மூலதனப் பெருக்கம் கோடி கோடியாக கொட்டிக் கொண்டு இருப்பதும், அங்கே அதைக் “கோயில் பெருச்சாளிகள் கொள்ளையடிப்பதும் ஒரு வகையான விசித்திர முதலாளிகள், கடவுள்கள்.

இரண்டு, பிறவியினால் எவ்வித உழைப்பும் இன்றி, உயர்ஜாதி, ஆண்டவனின் முகத்தில் பிறந்த ஜாதி என்று முத்திரைக் குத்திக் கொண்டு, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக தர்ப்பையும், பஞ்சாங்கத்தையுமே மூலப் பொருளாகக் கொண்டு, பெரும்பாலான அடிமைப்படுத்தப்பட்ட மக்களையே சுரண்டிக் கொழுக்கும் பிறவி முதலாளிகள்.

மூன்று, மூலதனம் போட்டு தனது மூளை உழைப்பு, சுரண்டல் புத்தியைக் கூர்மையாக்கி தொழிலாளர்களின் உழைப்பை மூலதனமாகக் கருதாமல், அதற்கு ஏதோ ஒருவகைக் கூலி மட்டும் கொடுத்து, அதை விலை உயர்வு மூலம் ஒரு கையில் கொடுத்ததை, மறுகையில் பிடுங்கிக் கொள்ளையடிக்கும் முதலாளிகள் மனித முதலாளிகள்

இவர்களை ஒழிப்பது, மற்ற மேலே சுட்டப்பட்ட இருவகை முதலாளிகைளயும் ஒழிப்பதை விட எளிது ஆகும்! ஒரு அவசரச் சட்டம் போட்டுக்கூட, பணக்கார முதலாளிகளிடம் இருக்கும் பணம், சொத்துகளை அரசுகளால் எடுத்துக்கொள்ள முடியுமே அவை உண்மையான சமதர்ம அரசுகளாக இருந்தால்.

ஆனால், கோயில், மதம், உயர் ஜாதி இவைகளிடம் நெருங்குவதற்கு எக்கட்சி அரசானாலும் துணிவதில்லை. சிதம்பரம் கோயிலில் சுமார் 200 ஆண்டுகளுக்கு மேல் தீட்சதர் கூட்டத்தால் சுரண்டப்பட்ட மக்கள் தந்த, தருகின்ற வருமானம், மன்னர்கள் விட்டுச் சென்ற சொத்துகளைக் காப்பாற்ற பல அரசுகள் முயன்றும் கலைஞர் தலைமையில் நடைபெற்ற தி.மு.க. அரசால்தான் இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறையின் ஆதிக்கத்தின்கீழ் அதன் வருமானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தீட்சதத் திருமேனிகள் கூட்டம் வழக்குப் போட்டது; அது தள்ளுபடி செய்யப்பட்டு, அதன் மீது மேல்முறையீட்டினை (அப்பீல்) உச்சநீதிமன்றத்தில் செய்துள்ளனர்! வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ளது. (புதிய அரசு அதில் விட்டுக் கொடுத்தால் அது மக்கள் கிளர்ச்சியாக வெடிப்பது உறுதி!)

ஆந்திராவில் புட்டபர்த்தி சாய்பாபாவின் மடத்தின் சொத்துகளை நிர்வகிப்பது முதல், பல பிரச்சனைகளில் சண்டைகள் பல மாதங்களாக சில ஆண்டுகளாகவே நடந்து வந்துள்ளன.

சாய்பாபாவின் மரணத்திற்குப்பின் அங்கே இருந்த தங்கம், வைரம், ரூபாய் நோட்டுகள் என்று பல லட்சம், பல கோடிக்கணக்கில் அவை கடத்தப்பட்டு, ஆந்திர அரசே அதுபற்றி புலன் விசாரணைகளை நடத்தும் நிலை உள்ளது!

மடத்திலிருந்து லாரியில் கடத்திச் சென்றுள்ள பணம், தங்கம், வைர நகைகள் பிடிபட்டதாக செய்திகள் வந்தவைகளை மீடியாக்கள் பெரிதும் உயர் ஜாதி ஊடகங்கள் அமுக்கி வாசித்தன.

ஒரு வார இடைவெளிக்குப் பின்னர், அது சம்பந்தப்பட்ட தமிழ்நாட்டு உயர் ஜாதி தொழிலதிபர் ஒருவர், அந்த ரொக்கம் ஏதோ, பாபா சமாதி கட்ட, ஒப்பந்தக்காரருக்கு, யாரோ கொடுத்ததாக ஒரு பேட்டி கொடுத்தார். மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டார்கள்; ஏன் உடனே செய்யவில்லை? பிடிபட்ட நேரத்தில், பிடிபட்டவர்தானே அப்படி வாக்குமூலம் கொடுத்திருக்க வேண்டும்? பிறகு அதிலிருந்து மீள்வதற்கே இப்படி ஒரு “அற்புத யோசனை" அறிவுரை நிபுணர்களால் 'அவாளுக்கு" சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கக் கூடும்!

தோண்டத் தோண்ட வெளிவரும் புதையல்போல, பாபா அறையிலிருந்து தங்கக் குவியல்கள் வந்தவண்ணம் உள்ளதாம்! செய்தி ஏடுகளால் மறைக்க முடியாது சிலவற்றை வெளியிடுகின்றன.

பிரசாந்தி நிலையத்தில் இருந்து ஏராளமான ரொக்கப் பணமும், நகைகளும் கடத்தப்படுவதாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. அண்மையில் நடைபெற்ற சில வாகனப் பரிசோதனைகளின்போது ரூபாய் 10 கோடி மற்றும் 35 லட்சம் பணம் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இது கடத்திச் செல்லப்பட்டவை என்று ஆந்திர போலீசார் கருதுகிறார்கள். கடந்த முறை யஜுர் வேத மந்திர் அறையில் கண்டெடுக்கப்பட்ட பல கோடி மதிப்புள்ள பணம் மற்றும் நகைகள் மதிப்பிடப்பட்டு, அவை வங்கியில் டிபாசிட் செய்யப்பட்டதாம்!

மீண்டும் அதே யஜுர்வேத மந்திரில் அனந்தப்பூர் மாவட்ட இணை ஆட்சியர் அனிதா ராமச்சந்திரன் தலைமையிலான அரசு அதிகாரிகளைக் கொண்ட குழு நடத்திய சோதனையில் தங்கம், வெள்ளி நகைகள், ரூபாய் ஒரு கோடிக்கு மேல் உள்ளது. சாய்பாபா அறை, அவரது உதவியாளர் சத்யஜித்தின் அறை, சிறப்பு அலுவலக அறை, உணவு அருந்தும் அறை ஆகியவைகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன!

சாய்பாபா அறக்கட்டளையின் உண்மை சொத்துகளின் மதிப்பு பற்றி அதன் நிர்வாகிகள் உண்மையான தகவல்களை வெளியிட வேண்டும் என்று உலகம் முழுவதும் உள்ள சாய்பாபா பக்தர்களே கேட்கும் அளவுக்கு நிலைமை அங்கு மோசமாகியுள்ளது எனத் தெரிய வருகிறது!

பத்மநாபசாமி கோயிலில் ஒரு லட்சம் கோடி ரூபாய் சொத்துகள்...

திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசாமி கோயில் அறைகள் திறக்கப்பட்டு நகைகள் எண்ணப்பட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பக்தர் ஒருவர் போட்ட வழக்கில், இரண்டு கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் அய்வர் ஆக எழுவர் கொண்ட குழுவினரின் முன்னிலையில் அது திறக்கப்பட்டு எண்ணப்பட வேண்டும் என்று இடைக்கால ஆணை வழங்கப்பட்டதையொட்டி, கடந்த சில நாள்களாக அங்கே ஆறு பாதாள அறைகள் திறக்கப்பட்டதில், இது வரை கண்டு எடுக்கப்பட்ட நகைகளின் மதிப்பு ரூபாய் ஒரு லட்சம் கோடியைத் தாண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது!

திருப்பதி கோயிலையும் மிஞ்சும் சொத்து இதற்கு இருக்கும் போல் உள்ளது!

கேரள மாநில பட்ஜெட்டையும் தாண்டும் சொத்து இந்த ஒரு கோயிலிலேயே முடக்கப்பட்ட மூலதனமாக கிடக்கிறது! இவைகளில் 'கோயில் பெருச்சாளிகள்' கொண்டு சென்றவை எவ்வளவோ? யாருக்குத் தெரியும்?

குருவாயூர் கிருஷ்ணன் கோயில் வருமானம், சபரிமலை அய்யப்பன் கோயில் வருமானம் இப்படி பலவகை வருமானங்கள் மூலம் கிடைக்கும் தொகை மக்கள் நலத் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட்டால், எவ்வளவு அரசு கல்லூரிகள், தொழிற்சாலைகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகளை எழுப்பலாம்! நமது மத்திய அரசு, லாபம் தரும் பொதுத் துறை நிறுவன பங்குகளை விற்பதை நிறுத்திவிட்டு இந்த மூலதனங்களை எடுத்துப் பயன்படுத்தலாமே! கோயில் பூஜை, புனளிகாரம் என்பவைகளால் வழக்கம்போல் நடைபெறுவதற்குப் பதிலாக இம்மாதிரி அரசு எடுத்து மக்கள் நலத் திட்டங்களுக்கு செலவழிப்பது எவ்வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாதே!

அரசியல் சட்டத்தின் 25,26 என்ற பிரிவுகளைக் காட்டி சிலர் சட்டப் பூச்சாண்டி காட்டலாம். அதுபற்றிக் கவலைப்படாமல் துணிந்து முடிவு எடுத்தால் அப்பிரிவுகளிலேயே அதற்கு தாராளமாக இடம் உள்ளது. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு! மக்கள் கொடுத்த பணம் மக்களுக்கே திருப்பித் தரப்படுவதில் தவறு ஏதும் இல்லையே! மத்திய மாநில அரசுகள் கவனம் செலுத்துமாக!

இவ்வாறு கி.வீரமணி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

English summary
Assets and money of Temples and Puttaparthi Saibaba should be spent on People and for Nation's development. There is nothing wrong in giving the money back to people who have given to Temples and Ashrams, sais Dravidar Kazhagam leader Ki.Veeramani
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X