For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இரட்டைமலை சீனிவாசனின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்: ஜெ. உத்தரவு

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: ஆதிதிராவிட மக்களின் முன்னேற்றத்திற்காக தனது வாழ்வை அர்பணித்த இரட்டைமலை சீனிவாசனின் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

இரட்டைமலை சீனிவாசனுக்கு மணிமண்டபம் மற்றும் முழு உருவச்சிலை அமைக்கப்படும் என்றும், அதற்கான நிதியையும் ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா 9-3-2005 அன்று சட்டசபையில் உத்தரவு பிறப்பித்தார்.

இரட்டை மலை சீனிவாசன் காஞ்சீபுரம் மாவட்டம், கோழியாலம் என்ற கிராமத்தில்1859-ம் ஆண்டு ஜூலை மாதம் 7-ம் தேதி பிறந்தார். பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே அவர் தீண்டாமை கொடுமைக்கு ஆளானார். கோழியாலத்திலும், தஞ்சையிலும் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கோவையில் கல்லூரி படிப்பை முடித்தார்.

அவர் இனப்போராளியாகவும், வழக்கறிஞராகவும், பத்திரிகையாளராகவும் தன்னுடைய வாழ்க்கையை துவங்கினார். தனது இனமக்கள் படும்பாட்டில் இருந்து அவர்களை காப்பாற்றுவதையே தனது வாழ்நாள் லட்சியமாகக் கொண்டு செயல்பட்டார். 1891-ம் ஆண்டு பறையர் மகாஜன சபையை ஆரம்பித்தார். பின்னர் இது ஆதிதிராவிட மகாஜன சபை என்று அழைக்கப்பட்டது. இந்த சபை மூலம் ஆதிதிராவிட மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டார்.

1893-ம் ஆண்டு பறையர் என்ற பத்திரிக்கையைத் துவங்கி ஆதிதிராவிட மக்களின் முன்னேற்றத்திற்காக இதில் பல எழுச்சியூட்டும் கட்டுரைகளை எழுதி, வெளியிட்டார். 1923-ம் ஆண்டு சென்னை மாநிலத்தின் மேல்சபை உறுப்பினரானார்.

1-1-1926 அன்று அவருக்கு ராவ்சாகிப் பட்டம் அளிக்கப்பட்டது. 1-6-1930 அன்றும் அவருக்கு ராவ்சாகிப் பட்டம் வழங்கப்பட்டது. 6-6-1930 அன்று அவருக்கு திவான்பகதூர் பட்டமும், திராவிடமணி பட்டமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மகாத்மா காந்தி மோ.க. காந்தி என்று தமிழில் கையெழுத்துப் போட காரணமாக இருந்தவரே இரட்டைமலை சீனிவாசன் தான்.

இரட்டைமலை சீனிவாசன் மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞராக இருக்கையில் நீதிமன்றத்தில் மொழி பெயர்ப்பாளராக இருந்தார்.

1930-ம் ஆண்டு லண்டனில் நடந்த வட்டமேசை மாநாட்டில் தாழ்த்தப்பட்டோர் சார்பில் தலைவர் அண்ணல் அம்பேத்கருடன் இரட்டைமலை சீனிவாசனும் கலந்துகொண்டார். அண்ணல் காந்தியடிகள் துவங்கிய தீண்டத்தகாதோர் ஊழியர் சங்கத்தில் உறுப்பினராக இருந்தார்.

1939-ம் ஆண்டு அண்ணல் அம்பேத்கருடன் சேர்ந்து சென்னை மாகாண தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பை தொடங்கினார். ஆதிதிராவிட மக்களின் முன்னேற்றத்திற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த இரட்டைமலை சீனிவாசன் 18-9-1945 அன்று தன்னுடைய 85-வது வயதில் இம்மண்ணுலகை விட்டு பிரிந்தார்.

இரட்டைமலை சீனிவாசனின் பிறந்த நாளான ஜூலை 7-ம் தேதியை (இன்று) அரசு விழாவாக அறிவித்து முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.

அந்த ஆணையின்படி 7-7-2011-ம் நாள் காலை 9.00 மணிக்கு சென்னை காந்தி மண்டப வளாகத்திலுள்ள இரட்டைமலை சீனிவாசனின் திருவுருவச்சிலைக்கு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சீர்மிகு பெருமக்கள் ஆகியோர் மலர்த்தூவி மரியாதை செலுத்துவார்கள் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

English summary
Tamil Nadu CM Jayalalitha has announced that from this year onwards dalit leader Rettamalai Srinivasan's birthday will be celebrated as a government function. Rettamalai Srinivasan's birthday falls on july 7, that is today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X