For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தில்ஷன் கொலை: வேலைக்காரி.. செல்போன் சிக்னல் மூலம் சிக்கிய ராணுவ அதிகாரி

By Siva
Google Oneindia Tamil News

Kandasamy Ramaraj
சென்னை: ராணுவ அதிகாரி கந்தசாமி ராமராஜின் வீட்டு வேலைக்காரி தற்செயலாக கூறியது தான் சிபி-சிஐடி போலீசார் அவரை கைது செய்ய பேருதவியாக இருந்ததது.

கடந்த 3-ம் தேதி தீவுத்திடல் ராணுவக் குடியிருப்புக்குள் பாதாம் பழங்கள் பறிக்கச் சென்ற 13-வயது சிறுவன் தில்ஷன் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டான். இந்த வழக்கை சிபி-சிஐடி போலீசார் விசாரித்து வந்தனர். ராணுவத்தினர் தாங்கள் சுடவேயில்லை என்று தொடர்ந்து மறுக்க செய்வதறியாது குழம்பினர்.

இந்நிலையில் ராணுவக் குடியிருப்பில் தில்ஷன் சுடப்பட்ட இடத்திற்கு அருகில் உள்ள ராணுவ அதிகாரிகள் வீடுகளில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ஓய்வு பெற்ற லெப்டினன்ட் கர்னல் கந்தசாமி ராமராஜின் வீட்டு வேலைக்காரியிடமும் விசாரணை நடத்தப்பட்டதில் தில்ஷன் சுட்டுக் கொல்லப்பட்டதில் இருந்து கந்தசாமி ராமராஜின் வீட்டில் யாருமே ஒழுங்காக சாப்பிடவே இல்லை என்பது தெரிய வந்தது.

குழம்பியிருந்த போலீசாருக்கு தெளிவான வழி கிடைத்துவிட்டது. இதை வைத்து அவர்கள் ராமராஜின் மேல் தங்கள் சந்தேகப் பார்வையை வைத்தனர்.

இது தவிர ராணுவக் குடியிருப்புக்கு அருகில் இருந்த செல்போன் டவரை வைத்து கொலை நடந்த நேரத்தில் அந்த இடத்தில் இருந்தவர்கள் யார், யார் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனாஸ், ஆயுதப் பிரிவில் பணியாற்றியதால் ராமராஜ் லாவகமாக போலீசாரை ஏமாற்றினார். சம்பவத்தன்று தனது மருமகளை ரயில்வே நிலையத்தில் இறக்கிவிட்டு வந்ததாகவும், அவர் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் மதுரைக்கு சென்றதாகவும் ராமராஜ் தெரிவித்தார். ஆனால் அவரது மருமகள் முன்பதிவு செய்து தான் பயணித்துள்ளார்.

ஒரு குடும்பமே குழப்பமாக இருப்பதும், ராமராஜ் எது கேட்டாலும் திரும்பத் திரும்ப பொய் சொன்னதும் தான் போலீசாரின் சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்தியது என்று சிபி-சிஐடி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சிறுவர்கள் ராணுவக் குடியிருப்புக்குள் பழம் பறிக்க வரும்போதெல்லாம் கல்லெறிந்துள்ளார். கற்கள் ராமராஜின் காரில் மீது விழுந்து வந்ததால் அவர் ஆத்திரத்தில் சுட்டிருக்கலாம் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

லெப்டினன்ட் கர்னலாக இருந்த ராமராஜ் ராணுவத்தில் ஆயுத இன்ஸ்பெக்டராக இருந்தததால் அவருக்கு சிறிய ரக ஆயுதங்கள் அத்துப்படி. அவர் சென்னை மட்டுமல்லாது நாட்டில் உள்ள பல பாதுகாப்பு அமைப்புகளுக்குச் சென்று ஆயுதங்களுக்கு சேவை சான்றிதழ் அளித்தவர் என்று மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ராமராஜ் ஓய்வு பெற்றவுடன் அவருக்கு சென்னையில் உள்ள ஒரு நிறுவனம் வேலை கொடுக்க முன்வந்தது. ஆனால் அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார்.

அவர் மதுரையில் போய் தனது காலத்தை கழிக்க முடிவு செய்திருந்தார். அவர் ராணுவத்தில் பணி புரிகையில் அவர் மீது எந்த ஒரு குற்றச்சாட்டும் வந்ததில்லை. ராமராஜ் தனது துப்பாகிக்கான உரிமத்தை புதுப்பிக்க விண்ணப்பித்திருந்தது தான் அவரை கண்டுபிடிக்க ஒரு வகையில் உதவியுள்ளது என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

இது குறித்து பிரிகேடியர் சஷி நாயர் கூறுகையில்,

தில்ஷன் சுட்டுக் கொல்லப்பட்ட சில மணி நேரத்திலேயே அவனை பணியில் இருக்கும் அதிகாரிகள் யாரும் சுடவி்ல்லை என்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கொலையைச் செய்த குற்றவாளி கைது செய்யப்பட்டு, அவரது துப்பாக்கியும் கண்டெடுக்கப்பட்டதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி என்றார்.

ராமராஜ் சிக்கியது எப்படி?

சிபி-சிஐடி விசாரணையை ராணுவ அதிகாரியான அஜய்சிங்கிடம் இருந்து தான் துவங்கியது. அவர் தான் சுட்டிருக்க வேண்டும் என்ற சந்தேகம் இருந்ததால் தான் அவரிடம் விசாரணை நடத்தினார்கள்.

சம்பவம் நடப்பதற்கு முன் காரில் வந்த அஜய்சிங் சிறுவர்களை திட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

தில்ஷனுடன் பழம் பறிக்க வந்த ச்ஞ்சய், பிரவீன் ஆகிய இருவரும் காரில் வந்த அதிகாரி திட்டயதாகவும், உடனே தாங்கள் வெளியே ஓடிவி்ட்டதாகவும் தெரிவித்தனர். யார் சுட்டது என்று தாங்கள் பார்க்கவில்லை என்றனர். சந்தேகத்தின் பேரில் அஜய்சிங்கிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் எந்தவித சலனமும் இன்றி பதில் அளித்துள்ளார். தான் சிறுவர்களை திட்டமட்டும் தான் செய்ததாகவும், யாரையும் சுடவில்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார். அப்போது ராமராஜையும் விசாரிக்கையில் அவர் அஜய்சிங் தான் சுட்டார் என்றும், அவரை மீண்டும் விசாரிக்குமாறும் தெரிவித்துள்ளார்.

சம்பவம் நடந்தபோது தான் தூங்கிக் கொண்டிருந்தாகவும், துப்பாக்கி சத்தம் கேட்டு எழுந்து வந்து பால்கனியில் இருந்து பார்த்ததாகவும், கீழே வரவில்லை என்றும் ராமராஜ் முதலில் தெரிவித்துள்ளார்.

மூன்றாம் சாட்சி

சம்பவ இடத்தி்ல சஞ்சய், பிரவீன் தவிர்த்து விக்னேஷ் என்ற சிறுவனும் இருந்துள்ளான். அவன் தான் சிபி-சிஐடி போலீசாரிடம் தில்ஷன் சுடப்பட்ட இடத்தில் இருந்த ரத்தக் கறையை ராமராஜ் வந்து இலையால் மூடினார் என்று கூறினான்.

இது குறித்து சிபி-சிஐடி கூடுதல் டி.ஜி.பி. சேகர் கூறியதாவது,

விக்னேஷ் சொன்னதை வைத்து தான் நாங்கள் ராமராஜை சந்தேகப்பட்டு விசாரித்தோம். ஆனால் அவரோ அஜய்சிங்கை மாட்டிவிட்டார். அவர் நாடகத்தை நாங்கள் கடந்த வியாழக்கிழமை அன்றே கண்டுபிடித்துவிட்டோம். ராமராஜோ தன்னிடம் துப்பாக்கியே இல்லை என்றார். ஆனால் அவர் மனைவியை விசாரித்தபோது அவர் துப்பாக்கி வைத்திருந்ததாக ஒப்புக் கொண்டார். அவர் துப்பாக்கி உரிமத்தை புதுப்பிக்க சென்னை புறநகர் போலீசில் விண்ணப்பித்திருக்கிறார் என்றும் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து ராமராஜ் மீது எங்களுக்கு சந்தேகம் அதிகரித்தது. மேலும், அஜய்சிங் சிறுவர்களை திட்டிவிட்டு காரில் பாரிமுனைக்கு சென்றுவிட்டார் என்பதையும் நாங்கள் கடந்த வியாழக்கிழமையே உறுதிபடுத்திவிட்டோம்.

வெள்ளிக்கிழமை முழுவதும் நாங்கள் ராமராஜை சுற்றியே விசாரித்து வந்தோம். சென்னை புறநகர் போலீசில் விசாரித்தபோது ராமராஜ் உரிமத்தை புதுப்பிக்க விண்ணப்பித்திருந்தது உறுதியாகிவிட்டது. இரவு வரை அவர் உண்மையை ஒப்புக் கொள்ளாமல் நேரத்திற்கு ஒரு பொய் சொல்லிக் கொண்டிருந்தார்.

சனிக்கிழமை காலையில் தான் அவர் தில்ஷனை சுட்டுக் கொன்றதை ஒப்புக் கொண்டார். ஆதாரங்களை திரட்டி அவரை ஒப்புக் கொள்ள வைத்தோம். சுட்டதை ஒப்புக் கொண்டாலும் அவர் துப்பாக்கி இருக்கும் இடத்தைக் கூற மறுத்துவிட்டார். அவரை மிரட்டி அன்றிரவு 8 மணிக்கு உண்மையை சொல்ல வைத்தோம். துப்பாக்கியையும், தோட்டாக்களையும் நேப்பியர் பாலம் அருகே கூவத்தில் வீசிவிட்டதாகத் தெரிவித்தார். நாங்கள் இரவோடு, இரவாக துப்பாக்கியையும், துப்பாக்கி குண்டுகள் வைக்கும் பையையும் தேடிக் கண்டுபிடித்தோம்.

துப்பாக்கி கிடைத்ததை தெரிவித்தவுடன் ராமராஜ் தன்னைக் கைது செய்யுமாறு கத்தினார்.

ராமராஜின் குடும்பம் ஒரு ராணுவக் குடும்பம்.அவரது மூத்த மகன் ஆனந்தகுமார் ராணுவத்தில் மேஜராக பணியாற்றுகிறார். இரண்டாவது மகன் பிரபு கடற்படையில் அதிகாரியாக உள்ளார். மூன்றாவது மகன் பாலாஜி ராணுவத்தில் கேப்டனாக உள்ளார். மூத்த மருமகள் புஷ்பாவும் ராணுவத்தில் பணி புரிந்துவிட்டு விலகியதாகக் கூறப்படுகின்றது. இரண்டாவது மகன் பிரபுவின் மனைவி தேன்மொழி ராணுவத்தில் நர்சிங் பிரிவில் கேப்டனாக உள்ளார்.

மூத்த மகன் மூலம் மட்டும் ராமராஜுக்கு ஒரு பேரன் உள்ளான். மூன்றாவது மகன் பாலாஜிக்கு இன்னும் திருமணமாகவில்லை.

ராணுவத்திற்கே தெரியாமல் வைத்திருந்த துப்பாக்கி

தில்ஷனை சுட பயன்படுத்தப்பட்ட ஸ்பிரிங்பீல்டு ரைபிள் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட நவீன ரக துப்பாக்கியாகும். அந்த துப்பாக்கியில் ஒரு முறை ஒரு குண்டைத்தான் சுட முடியும். அது 0.30 எம்.எம். ரைபிள் துப்பாக்கி ஆகும். அது 2.5 அடி நீளமுடையது. இதில் சுட்டால் அந்த குண்டு சுமார் 200 மீட்டர் வரை செல்லும்.

கடந்த 2004-ம் ஆண்டு மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூரியில் பணியாற்றும்போது தனது சொந்த உபயோகத்திற்காக வெறும் 500 ரூபாய்க்கு இந்த துப்பாக்கியை வாங்கி அதற்கு உரிமமும் பெற்றுள்ளார். கடந்த 2008-ம் ஆண்டே உரிமம் காலாவதியாகிவிட்டது.

ஆனால் அவர் தற்போது தான் அதுவும் ஆலந்தூரில் வசிப்பதைபோல ஒரு பொய்யான முகவரியைக் கொடுத்து சென்னை புறநகர் போலீசில் உரிமத்தை புதுப்பிக்க விண்ணப்பித்திருந்தார். இந்த துப்பாக்கி வங்கதேசத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு
ஜபல்பூர் கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ராணுவத்தில் இருப்பவர்கள் ராணுவத்திடம் முறையாக தெரிவித்துவிட்டு உரிமத்துடன் துப்பாக்கி வைத்திருக்கலாம். ஆனால் ராமராஜோ கடந்த 2 ஆண்டுகளாக சென்னையில் இருந்தும் ராணுவத்திற்கு தெரியாமலேயே துப்பாக்கி வைத்துள்ளார் கூடுதல் டி.ஜி.பி. சேகர் தெரிவித்தார்.

பேட்டியின்போது சி.பி.சி.ஐ.டி. டி.ஐ.ஜி.ஸ்ரீதர், சூப்பிரண்டுகள் சந்திரபாசு, சோனல்மிஸ்ரா, ராஜேஸ்வரி, துணை சூப்பிரண்டுகள் பிரபாகரன், பார்த்தசாரதி, பரணிகுமார், அரவிந்தன், ஜெயச்சந்திரன், ராஜா சீனிவாசன், வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் சங்கர சுப்பிரமணியம் ஆகியோர் உடன் இருந்தனர்.

சரியான தகவல் தராத போலீசார்

இந்த வழக்கின் ஆரம்பத்தில் இருந்தே சிபி-சிஐடி போலீசார் பத்திரிக்கைகளுக்கு சரியான தகவல்களைக் கொடுக்கவில்லை. அதனால் ஒவ்வொரு பத்திரிக்கையும் ஒவ்வொரு செய்தி வெளியிட்டது. ஏன், நேற்று முன்தினம் இரவு ராமராஜ் கைது செய்யப்பட்டபோது கூட சரியான தகவல் தெரிவி்க்கவில்லை.

பத்திரிக்கையாளர்களிடம் குற்றவாளியை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதாகக் கூறிவிட்டு அவரை ரகசியமாக சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்டு குடியிருப்பு வளாகத்தில் மாஜிஸ்திரேட்டு வீட்டில் ஆஜர்படுத்தினர். இருப்பினும் புகைப்படக்காரர்கள் அங்கும் சென்று புகைப்படம் எடுத்தனர். குற்றவாளியை பொதுமக்கள் தாக்காமல் இருக்க இவ்வாறு செய்ததாக போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

English summary
Rtd. Lt. Colonel Kandasamy Ramaraj's domestic help told the officials that the officer and his family hadn't eaten properly from the day Dilshan was shot. This made the police to zero in on the culprit. Police made him accept the crime after collecting all the evidences.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X