For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதுரை மாநகராட்சியில் கோடிக்கணக்கில் ஊழல்: லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை; அதிகாரிகளிடம் விசாரணை

By Chakra
Google Oneindia Tamil News

Madurai Corporation Office
மதுரை: மதுரை மாநகராட்சியில் நடந்துள்ள கோடிக்கணக்கான ஊழல் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் விடிய விடிய சோதனை நடத்தி, அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர்.

மதுரை மாநகராட்சி மேயராக திமுகவை சேர்ந்த தேன்மொழியும், துணை மேயராக பி.எம்.மன்னனும் உள்ளனர். மண்டலத் தலைவர்களாகவும் திமுகவை சேர்ந்தவர்களே இருந்து வருகின்றனர்.

திமுக ஆட்சியில் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றித் தரும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்காக பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

முதல் கட்டமாக மதுரை திடீர் நகரில் கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டு அவற்றை மத்திய அமைச்சர் மு.க.அழகிரி திறந்து வைத்தார்.

ஆனால், குடிசைகளே இல்லாத பகுதிகளில் குடிசைகள் இருப்பதாகக் காட்டி, அந்த இடங்களில் கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டதாகவும், இதற்காக போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டதாகவும், இதன்மூலம் பல கோடி மோசடி நடந்துள்ளதாகவும் ஆட்சி மாற்றத்துக்குப் பின் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்கள் வந்தன.

இந் நிலையில் மதுரை லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி. இசக்கி ஆனந்தன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மாநகராட்சியில் அதிரடி சோதனை நடத்தினர். நேற்று பகலில் தொடங்கிய சோதனை நள்ளிரவு 1.30 மணி வரை நீடித்தது.

மதுரை மாநகராட்சிக்கு மத்திய நகர்புற மேம்பாட்டு அமைச்சகத்தால் ரூ.2,496 கோடி திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த நிதியைக் கொண்டு கடந்த 2007ம் ஆண்டு 2வது வைகை குடிநீர் திட்டம், தடுப்பணைகள் கட்டுதல் மற்றும் பல்வேறு பணிகள் மதுரை மாநகராட்சியால் தொடங்கப்பட்டன.

இந்தப் பணிகளிலும் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், பல கோடி ரூபாய் ஊழல் செய்து இருப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

காணாமல் போன நிறுவனம்- காணமல் போன ரூ.23.60 கோடி கம்பிகள்:

பெங்களூர் தீபிகா எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்திடம் கிருதுமால் நதியில் சுவர் அமைக்க முன்பணமாக ரூ.50 கோடி கொடுக்கப்பட்டது. ஆனால், அந்த நிறுவனம் பணியைத் தொடங்கவில்லை. மேலும் அந்த நிறுவனமே சில காலமாக இயங்கவில்லை. கிட்டத்தட்ட தலைமறைவு நிலையில் உள்ளது அந்த நிறுவனம்.

இந்தப் பணிகளுக்காக 800 டன் இரும்பு கம்பிகள் வாங்கப்பட்டன. இதில் 70 டன் இரும்பு கம்பிகள் மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது. மீதம் 20 டன் கம்பிகள் மட்டுமே இருப்பில் உள்ளது. மீதம் 710 டன் இரும்பு கம்பிகள் விற்கப்பட்டுவிட்டதாகவும் புகார் உள்ளது.இதன் மதிப்பு ரூ.23.60 கோடியாகும்.

இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் விஜயகுமார், ராஜேந்திரன், உதவி நிர்வாக பொறியாளர் ஜெயசீலன் ஆகியோரிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தினர்.

இந் நிலையில் இன்றும் விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது. அதிகாரிகள் தரும் தகவல்களின் அடிப்படையில் மேயர், துணை மேயரிடம் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

English summary
The anti-corruption police wing conducted raided scandal hit Madurai Corporation and conducted enquiry with officials
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X