For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜவுளி மீதான 5 சதவீத வரி உயர்வு ரத்து - ஜெயலலிதா

By Shankar
Google Oneindia Tamil News

சென்னை: ஜவுளித் தொழில் சந்தித்து வரும் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு, துணி மற்றும் துணிப் பொருட்கள் மீதான 5 சதவீத வரி உயர்வு ரத்து செய்யப்படுகிறது என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கை:

முந்தைய தி.மு.க. அரசு 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேலான கடன் சுமையை எனது தலைமையிலான அரசு மீது சுமத்தி விட்டு சென்ற நிலையிலும், மக்கள் நலனுக்காக பல புதிய நலத் திட்டங்களை எனது அரசு கொண்டு வந்துள்ள நிலையிலும், ஏழை, எளிய மற்றும் சாமானிய மக்களை பாதிக்காத வகையில், தமிழக அரசால் விதிக்கப்படும் மதிப்புக்கூட்டு வரி கடந்த 12-ந் தேதி முதல் சிறிதளவு உயர்த்தப்பட்டது.

தமிழ்நாடு மதிப்புக்கூட்டு வரிச் சட்டம், 2006-ல் அட்டவணை 4, பகுதி ஏ, வரிசை எண். 3 முதல் 10 வரையில் குறிப்பிடப்பட்டுள்ள துணி மற்றும் துணிப்பொருட்கள் மீது 5 சதவீதம் மதிப்புக்கூட்டு வரி விதிக்கப்பட்டது.

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள தேவைக்குறைவு காரணமாக ஜவுளி ஏற்றுமதியில் நிலவும் மந்தமான நிலையால் துணிகள் மற்றும் இழைகள் அதிக அளவில் தேக்கமடைந்து உள்ளதாகவும், இதன் காரணமாக ஜவுளித்துறை பெரும் பிரச்சினைகளை சந்தித்து வருகிறது என்றும், இத்தருணத்தில் மதிப்புக்கூட்டு வரி விதிக்கப்பட்டுள்ளதால், தமிழ்நாட்டில் உள்ள ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்ற மாநில உற்பத்தியாளர்களுடன் போட்டியிட இயலாது என்றும், எனவே, துணி மற்றும் துணிப்பொருட்கள் மீது விதிக்கப்பட்ட 5 சதவீத மதிப்புக்கூட்டு வரியை விலக்கிக்கொள்ள வேண்டும் என்றும் ஜவுளித்தொழிலில் ஈடுபட்டு வருபவர்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன. தற்போது ஜவுளித்தொழில் சந்தித்து வரும் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு, இதுபற்றி இன்று (நேற்று) எனது தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

5 சதவீத வரி உயர்வு ரத்து

தமிழ்நாடு மதிப்புக்கூட்டு வரிச் சட்டம், 2006-ல் அட்டவணை 4, பகுதி ஏ, வரிசை எண். 3 முதல் 10 வரையில் குறிப்பிடப்பட்டுள்ள துணி மற்றும் துணிப்பொருட்கள் மீதான 5 சதவீத மதிப்புக்கூட்டு வரியை 12-ந் தேதி முதல் முன்தேதியிட்டு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்று எனது தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

தற்போது எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவால் துணி மற்றும் துணிப்பொருட்கள் வரி விதிப்பிலிருந்து விலக்கு பெற்ற இனங்களாக விளங்கும். இதன்மூலம் தமிழ்நாட்டின் ஜவுளித்தொழிலுக்கு நிவாரணம் கிடைப்பதுடன், இந்த தொழில் பெருகவும் வாய்ப்பாக அமையும் என நம்புகிறேன்.

-இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

English summary
Chief Minister Jayalalithaa cancelled VAT on textile products to give a relief to the industry which is already in crisis.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X