For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சட்டவிரோத சுரங்கத் தொழிலில் எதியூரப்பா, குமாரசாமி-லோக் ஆயுக்தா அறிக்கை சமர்ப்பிப்பு

By Siva
Google Oneindia Tamil News

Yeddyurappa and Kumaraswamy
பெங்களூர்: கர்நாடகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்ட விரோத சுரங்கத் தொழில் தொடர்பாக லோக் ஆயுக்தா இன்று தனது அறிக்கையை சமர்ப்பித்தது.

இந்த அறிக்கையில், முதல்வர் எதியூரப்பாவும், அவரது குடும்பத்தினரும் சுரங்க நிறுவனங்களிடம் லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதேபோல மதச்சார்பற்ற ஜனதாதள தலைவரும் முன்னாள் முதல்வருமான குமாரசாமிக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அறிக்கையில் கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ரெட்டி சகோதரர்கள் உள்பட நான்கு அமைச்சர்கள் மீதும் குற்றம் சாட்டபப்பட்டிருப்பதாக தெரிகிறது.

காங்கிரஸ் தரப்பில் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பெரும் தொழிலதிபரான அனில் லாட் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

முன்னதாக நேற்று சந்தோஷ் ஹெக்டே கூறுகையில்,

இந்த அறிக்கையை சமர்ப்பிப்பது எனது கடமை. ஆனால் இதன் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என நான் கருதவில்லை.

எனது குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் ஆதாரப்பூர்வமானவை. இருப்பினும் இதுகுறித்து இந்த அரசு நடவடிக்கை எடுக்கும் என நான் நம்பவில்லை.

நான் கடந்த 2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலாவது இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தேன். அதன் மீதே இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இன்றைய இறுதி அறிக்கை மீது என்ன நடவடிக்கை வரும் என்பது எனக்குத் தெரியவில்லை.

தனது அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் ஒப்படைக்கும் திட்டம் இல்லை என்று கூறியுள்ள ஹெக்டே, ஒருவேளை சுப்ரீம் கோர்ட் கேட்டுக் கொண்டால் தான் தருவேன் என்றார்.

லோக் ஆயுக்தா அமைப்பின் பதிவாளரான மூசா குன்னி நாயர் மூலே, அறிக்கையை தலைமைச் செயலாளர் ரங்கநாத்திடம் இன்று பிற்பகலில் தாக்கல் செய்தார்.

இந்த அறிக்கை குறித்த தகவல்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பே கசிந்து கர்நாடகத்தில் பெரும் புயலைக் கிளப்பி விட்டது. எதியூரப்பா உடனடியாக பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை பலமாக எழுந்துள்ளது. பாஜகவும் எதியூரப்பா விவகாரத்தை தீவிரமாக கண்காணித்து வருகிறது.

அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியானவுடன் எதியூரப்பா மீது நடவடிக்கை எடுக்க அது காத்திருப்பதாக தெரிகிறது. இது குறித்து கர்நாடக மாநில பொறுப்பாளரான அருண் ஜேட்லியும் பாஜக தலைவர் கட்காரியும் இன்று ஆலோசனை நடத்துகின்றனர். அதில் எதியூரப்பா விஷயத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படலாம்.

அதேசமயம், முதலில் பிரதமர் பதவி விலகட்டும், பிறகு நான் விலகுவது குறித்துப் பேசலாம் என எதியூரப்பா கூறி வருகிறார். மேலும், தான் 5 ஆண்டுகளுக்குப் பதவியில் நீடிப்பது உறுதி என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், லோக் ஆயுக்தா அறிக்கையை எல்லாம் வைத்துக் கொண்டு தன்னை பதவி விலகச் சொல்ல முடியாது என்றும் எதியூரப்பா தெரிவித்துள்ளார். பதவி விலகுவதும், விலகாகததும் குறித்து நான் தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவி்த்துள்ளார்.

எதியூரப்பா, தனது சமூகத்தைச் சேர்ந்த லிங்காயத்து இன எம்எல்ஏக்கள் அனைவரும் தன்னையே ஆதரித்து வருவதாக கூறி வருவதால், அவரை நீக்கினால் ஆட்சி கவிழுமோ என்ற அச்சத்திலும் பாஜக உள்ளது.

2 டிரங்க் பெட்டிகளில் கொண்டு வரப்பட்ட அறிக்கை

முன்னதாக பத்தாயிரம் பக்கங்களைக் கொண்ட லோக் ஆயுக்தாவின் அறிக்கையை இரண்டு டிரங்க் பெட்டிகளில் கொண்டு வந்தனர்.

டெல்லி விரைகிறார் எதியூரப்பா

லோக் ஆயுக்தாவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்ட நிலையில் தனது எதிர்காலம் குறித்து கட்சித் தலைமையுடன் விவாதிக்கவும், தனது நிலையையும், பதவியையும் பத்திரப்படுத்திக் கொள்ளவும் டெல்லி விரைகிறார் எதியூரப்பா. அங்கு கட்சித் தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்தவுள்ளார்.

பதவி விலகுவாரா?

இதுவரை வந்த நெருக்குதல்களையெல்லாம் திறமையாக சமாளித்து விட்ட எதியூரப்பா தற்போது வசமாக சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. லோக் ஆயுக்தாவின் அறிக்கையில் எதியூரப்பா மற்றும் அவரது குடும்பத்தினரின் சுரங்க மோசடியை புட்டுப் புட்டு வைத்து விட்டார் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே.

அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு வலுவான ஆதாரங்களையும் அவர் கொடுத்துள்ளதால் இந்த முறையும் எதியூரப்பாவால் தப்பிக்க முடியாது என்கிறார்கள்.

லோக் ஆயுக்தா அறிக்கையில் திட்டவட்டமாக எதியூரப்பா மீது புகார் கூறப்பட்டுள்ளதால் அவரை பதவி விலகுமாறு கேட்டுக் கொள்வதைத் தவிர பாஜக தலைமைக்கு வேறு வழியில்லை என்று கூறப்படுகிறது.

மேலும், எதியூரப்பாவை இனியும் விட்டு வைத்தால், காங்கிரஸ் கட்சிக்கு எதிரான ஊழல் விவகாரங்களில் தங்களால் உறுதியுடன் செயல்பட முடியாத நிலை ஏற்படும். மக்கள் மத்தியில் பெயர் கெட்டுப் போய் கேவலமாகி விடும் என்று பாஜக தலைமை கருதுவதாக தெரிகிறது.

எனவே எதியூரப்பா சார்ந்த லிங்காயத் சமுதாயத்தினரின் எதிர்ப்பு பெருமளவில் எழுந்தாலும் கூட அதைப் பொருட்படுத்தாமல் எதியூரப்பாவை நீக்கும் முடிவுக்கு பாஜக தலைமை வரலாம் என்று கூறப்படுகிறது.

அதேசமயம், இந்த சிக்கலிலிருந்தும் எதியூரப்பாவைக் காப்பது எப்படி என்ற ஆலோசனையில் ஒரு தரப்பு பாஜக தலைவர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

English summary
Lok Ayukta justice Santhosh Hegde has submitted the detailed report on illegal mining in Karnataka to the Karnataka chief secretary today. He has named Karnataka CM Yeddyurappa in his report. He has sent a copy of the report to the governor Bhardwaj.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X