For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆந்திராவில் கைதாகியுள்ள ஈழத் தமிழ் அகதிகளை காப்பாற்ற ஜெ.வுக்கு சீ்மான் கோரிக்கை

Google Oneindia Tamil News

மதுரை: வத்தலகுண்டு முகாமில் இருந்து கனடா நாட்டுக்குச் செல்ல முயன்ற போது ஆந்திர மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகளை காப்பாற்ற வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் விடுத்துள்ள அறிக்கை:

தமிழ்நாட்டின் வத்தலகுண்டு அகதிகள் முகாமில் இருந்து 50 க்கும் மேற்பட்ட பெண்களும், 20 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் உட்பட 180 ஈழத் தமிழ் அகதிகள், தங்கள் எதிர்கால நலன் கருதி கனடா செல்ல முயற்சி செய்த போது ஆந்திரா காவல் துறையினரால் துனி என்ற இடத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை ஆந்திர காவல் துறையினர் தமிழக காவல் துறைக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து, அவர்களை விசாரிக்கச் சென்ற தமிழக காவல் துறையின் சிறப்புப் பிரிவு புலனாய்வு அதிகாரிகள் (சிபிசிஐடி) அவர்களை அடித்தும், உதைத்தும், தகாத வார்த்தைகளால் திட்டியும் துன்புறுத்தி வருவதாக தகவல் வந்துள்ளது.

ஈழத் தமிழ் அகதிகள், தமிழ்நாட்டில் மட்டுமின்றி, இலங்கையில் இருந்தும், தங்களுடைய பாதுகாப்பு, தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் கருதி, கனடா, ஆஸ்ட்ரேலியா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்ல முயற்சி செய்து வருகின்றனர்.

அப்படிச் சென்று சேர்ந்தவர்கள்தான் பல இலட்சக்கணக்கான புலம் பெயர்ந்த தமிழர்களாக அந்நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.

ஆனால், இப்படி சட்டப்படியான வழிகளில் செல்ல முடியாதவர்கள், ஏதாவது ஒரு கடற்கலனைப் பிடித்து தப்பி செல்ல முயற்சிக்கின்றனர். சர்வதேச கடற்பரப்பிலோ அல்லது இப்படி அந்த நாட்டிற்குள்ளேயோ பிடிபடுகின்றனர். ஆனால், அவர்கள் அவ்வாறு தப்பிச் செல்ல முற்பட்டதற்காக எதற்காக துன்புறுத்த வேண்டும்? பாதுகாப்பான வாழ்வையும், உறுதியான எதிர்காலத்தையும் நாடுவது மனித இயல்பு.

அவர்கள் எந்த நாட்டிற்கு அகதிகளாகச் செல்ல விரும்புகின்றனரோ, அதனை அந்த நாடே கூட மறுக்கக் கூடாது என்று ஐ.நா.வின் அகதிகள் பிரகடனம் கூறுகிறது. அவர்களின் வாழ்வுரிமையை, அகதிகளாகச் சென்று மற்றொரு நாட்டில் வாழும் உரிமையை ஐ.நா.வின் பன்னாட்டு மனித உரிமைப் பிரகடனம் உறுதி செய்துள்ளது.

ஆனால், உலகம் மதிக்கும் இந்தப் பிரகடனங்களை இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் எதுவும் மதிப்பதில்லை என்பதே வருத்தத்திற்குரிய நிலையாகும்.

கால் நூற்றாண்டிற்கும் மேலாக தமிழ்நாட்டின் முகாம்களில் இருந்து வரும் ஈழத் தமிழ் அகதிகளின் வாழ்வு மனிதப் பேரவலம் என்று கூறுகின்ற அளவிற்குத்தான் இருந்து வந்துள்ளது.

தமிழகத்தின் முதல்வராக மூன்றாவது முறையாக பொறுப்பேற்றுள்ள முதல்வர் அகதிகள் வாழ்வையும், முகாம்களின் சூழலையும் மேம்படுத்த ஜூன் மாதம் 7 ம் தேதி தமிழக அரசின் மறுவாழ்வுத்துறையின் வாயிலாக விரிவானதொரு உத்தரவைப் பிறப்பித்துள்ள நிலையில்,

தங்களுடைய பிள்ளைகளுக்கு வளமான, பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்ய அவர்களுக்கு புலப்படும் வழியில் வேறு ஒரு நாட்டிற்கு சென்றிட முயற்சி செய்கின்றனர்.

ஆனால் இதனை ஒரு பெரும் குற்றச்செயலாக இந்நாட்டில் பாவிக்கப்படுவது ஏன் என்று புரியவில்லை. உலகின் வேறெந்த ஒரு நாட்டிலும் அகதிகளை இப்படிக் கேவலமாக நடத்துவதும் இல்லை, துன்புறுத்துவதும் இல்லை.

எனவே, இப் பிரச்சனையில் தமிழக முதல்வர் உடனடியாகத் தலையிட்டு, அவர்களை விடுவித்து மனித நேய முறையில் தமிழகத்திற்கு அழைத்து வர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

English summary
Naam Tamilar president Seeman has urged CM Jayalalitha to rescue the arrested Lankan Tamil refugees from Andhra Pradesh. Nearly 180 refugees were arrested in Andhra while they were trying to go to Canada.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X