For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கைக்கு உதவாவிட்டால் சீனா நுழைந்து விடுமே?-வைகோவிடம் பிரதமர் கவலை!

Google Oneindia Tamil News

டெல்லி: இலங்கைக்கு நாம் உதவியே ஆக வேண்டும். இல்லாவிட்டால் அங்கு சீனா கால் பதித்து விடும் என்று பிரதமர் மன்மோகன் சிங், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிடம் கூறியுள்ளார். இலங்கையின் கொடூர முகத்தைப் பார்த்த பின்னாவது அந்த நாட்டுக்கு உதவுவதை நிறுத்துமாறு கோரி பிரதமரிடம் வைகோ நேரில் மனு கொடுத்துப் பேசியபோது இப்படிப் பதிலளித்துள்ளார் பிரதமர்.

இலங்கையில் போரின் இறுதிக் கட்டத்தில் நடந்த கொடூரக் கொலைகள், கற்பழிப்புகள், சித்திரவதைகள் உள்ளிட்டவற்றை உலக நாடுகள் அம்பலப்படுத்தியுள்ள நிலையில் அந்த நாட்டின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வைகோ கோரியபோது, அதுகுறித்து நேரடியாக பதிலளிக்காமல், சீனா வந்து விடுமே என்ற கவலையை பிரதமர் வெளியிட்டது தமிழர்களை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

மதிமுக எம்.பி. கணேச மூர்த்தியுடன் வைகோ நேற்று டெல்லி சென்று பிரதமரை நேரில் சந்தித்தார். அப்போது தமிழகம் கேரளா இடையிலான முல்லைப் பெரியாறு பிரச்சினை, இலங்கைத் தமிழர்களுக்கு விடிவு காலம் பிறக்காதது உள்ளிட்டவை குறித்து மனு ஒன்றைக் கொடுத்தார் வைகோ.

கால் மணி நேரம் நடந்த இந்த சந்திப்புக்குப் பின்னர் வைகோ கூறுகையில்,

இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து பிரதமரிடம் பேசினேன். கடந்த காலங்களில் பல முறை தாழ்மையுடன் இந்திய அரசு இலங்கைக்கு எந்த உதவியையும் அளிக்க கூடாது என்று தெரிவித்தபோதும் அதைக் கேட்காமல் தொடர்ந்து இந்திய அரசு இலங்கைக்கு அனைத்து உதவிகளையும் அளித்து வந்துள்ளது. இலங்கையில் நடைபெற்றுள்ள இனப் படுகொலைக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுதான் காரணம் ஆகும் என ஏற்கெனவே பலமுறை கடிதங்கள் மூலமாக தெரிவித்திருந்தேன்.

இனிமேலாவது லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்த இலங்கை அரசோடு செய்து கொண்டு உள்ள அனைத்துப் பொருளாதார ஒப்பந்தங்களையும் இந்தியா ரத்து செய்ய வேண்டும் என அவரிடம் கோரினேன்.தெரிவித்தேன்.

எனது வாதத்தைப் பொறுமையுடன் கேட்டுக் கொண்டார் பிரதமர். பின்னர் அவர் பதிலளிக்கையில், இந்தியா இலங்கைக்கு உதவ முன் வராவிட்டால், சீனா உதவி புரியத் தயாராக இருக்கிறது. எனவேதான் சீனா இலங்கைக்குள் நுழையாதவாறு பார்த்துக் கொள்ளும் வகையில் இந்திய அரசு நடந்து கொண்டுள்ளது என்றார்.

அப்போது நான் குறுக்கிட்டு ஏற்கனவே இலங்கைக் கடற்படையினருடன் சீன வீரர்களும் ஊடுறுவி விட்டனர். தமிழக மீனவர்கள் மீதான இலங்கைப் படையினரின் தாக்குதலின்போது அவர்களும் இருந்துள்ளனர்.

இலங்கை எப்போதுமே நமக்கு நட்பாக இருக்காது. அது சீனாவுடனும், பாகிஸ்தானுடனும்தான் ஆதரவாக இருக்கும், நட்பாக இருக்கும். எனவே ஒருபோதும் இலங்கையை இந்தியா நம்பக் கூடாது, உதவக் கூடாது என்றேன்.

தமிழகத்தின் தென்கோடியில்தான் இந்தியாவின் அணு உலைகள் உள்ளன. சீனாவுடன் நட்பாக இருக்கும் இலங்கைக்கு உதவினால், அது தமிழகத்திற்கு மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். தமிழகத்திற்கு ஏதாவது ஒரு ஆபத்து என்றால் அது இந்தியா முழுவதையும் பாதிப்புக்கு உள்ளாக்கிவிடும் என்று விளக்கினேன்.

முல்லைப் பெரியாறு பிரச்சினை

கேரள மக்களுக்குத் தேவையான பால், காய்கறிகள் அன்றாடம் தமிழகத்தில் இருந்து அனுப்பபடுகின்றன. இரு மாநில மக்களும் சகோதர - சகோதரிகள் போல் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு அவசரப்பட்டு முல்லைப் பெரியாறு விவகாரத்தில் எந்த முடிவையும் மேற்கொள்ள வேண்டாம்.

கேரள அரசு புதிய அணை கட்டத் திட்டமிட்டு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. மேலும் புதிய அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கும் பட்சத்தில், புதிய அணையில் இருந்து ஒரு சொட்டுத் தண்ணீர் கூடத் தமிழகத்துக்குக் கொடுக்க மாட்டார்கள்.

தமிழகத்தின் ஐந்து மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும். இரண்டு மாநிலங்களுக்கும் இது நல்லது அல்ல. மேலும், இது இந்தியாவின் ஒற்றுமைக்கு எதிராகவே போகும். எனவே முல்லைப் பெரியாறு பிரச்னைக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்றேன்.

அதற்குப் பிரதமர் முல்லைப் பெரியாறு அணை பலமாக இருப்பதாக கூறுகிறார்களே என்றார். அதற்கு நான், முல்லைப் பெரியாறு அணை அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு பலமாக இருக்கும் என்றும், அந்த அணை பலமாக இல்லை என்று யாராவது கூறினால் இந்தியாவின் மற்ற எந்த அணையும் பலமாக இருக்க முடியாது என்று விளக்கினேன் என்றார் வைகோ.

வைகோ மேலும் கூறுகையில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரரறிவாளனுக்கு விதிக்கப்பட்டு உள்ள தூக்குத் தண்டனையை ரத்துச் செய்ய வேண்டும். இரண்டு பேட்டரி செல்களை வாங்கிக் கொடுத்தார் என்பதுதான் அவர் மீதான குற்றச்சாட்டு. ஏற்கனவே நளினிக்கு மரண தண்டனையை ரத்துச் செய்து உள்ளீர்கள். அதுபோல, பேரறிவாளனுக்கு விதிக்கப்பட்டு உள்ள மரண தண்டனையையும் ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார்.

ப.சிதம்பரத்தையும் சந்தித்த வைகோ

பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த வைகோ பின்னர் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தையும் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.

இதுகுறித்து ம.தி.மு.க., தலைமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ, நேற்று (ஆக.2) மாலை 4 மணியளவில், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை , டெல்லியில் உள்ள நார்த் பிளாக்கில் உள்ள அமைச்சரக அலுவலகத்தில் சந்தித்தார். அப்போது அவர் அமைச்சரிடம் மனு ஒன்றை அளித்தார்.

அதில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, இருபது ஆண்டுகளாகச் சிறையில் அடைபட்டு கிடக்கும் பேரறிவாளனின் தூக்குத் தண்டனையை ரத்துச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளார். இந்தச் சந்திப்பின்போது, அ.கணேசமூர்த்தி எம்.பி.,யும் உடன் இருந்தார்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

English summary
'China will intrude into Sri Lanka if we stop helping them', this was the reply from the Prime Minister Manmohan Singh to MDMK chief Vaiko. Vaiko met the PM yesterday and eloborated the issues of Sri Lankan Tamils, Mullai Periyar dam issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X