சுனாமி வீடு கட்டியதில் பல கோடி ஊழல்: புதுவை கலெக்டர் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு

கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் தேதி சுனாமி அலைகள் தாக்கியதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டது. இதில் புதுச்சேரி, காரைக்காலில் மட்டும் 500க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.
கடலோரப் பகுதிகளில் இருந்த மீனவர்கள் வாழ்விடங்கள் முற்றிலுமாக சிதைந்தன. இவற்றை சீராக்க, சுனாமி புனரமைப்பு திட்ட அமுலாக்க முகமை என்ற அமைப்பு புதுச்சேரி அரசால் உருவாக்கப்பட்டது. இதன் திட்ட இயக்குனராக மாவட்ட கலெக்டர் ராகேஷ் சந்திரா நியமிக்கப்பட்டார்.
இந்த அமைப்பின் சார்பில் புதுச்சேரியில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் சுனாமியால் வீடுகளை இழந்த மீனவர்களுக்கு மத்திய அரசின் நிதி உதவியுடன் 2005ம் ஆண்டு 5,400 வீடுகள் கட்டும் பணிக்கு திட்டமிடப்பட்டது. இதற்கான வீடுகளை கட்டும் பணி டெண்டர் மூலம் ஹைதராபாத்தை சேர்ந்த ஐ.வி.ஆர்.சி.எல் தனியார் நிறுவனத்திடம் அளிக்கப்பட்டது. இதில் டெண்டர் அமைத்ததில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக சி.பி.ஐயிடமும் புகார்கள் அளிக்கப்பட்டிருந்தது. இந்தப் புகாரின் அடிப்படையில் தற்போது சி.பி.ஐ. விசாரணையைத் தொடங்கியுள்ளது.
கடந்த 1ம் தேதி புதுவை கலெக்டரும், சுனாமி புனரமைப்பு திட்ட அமுலாக்க முகமையின் இயக்குனருமான ராகேஷ் சந்திராவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர் .மேலும் அவரது வீட்டிலும் சோதனை நடத்தி ஆவணங்களையும் கைப்பற்றிச் சென்றனர்.
இந் நிலையில் நேற்று ஹைதராபத்தில் உள்ள ஐ.வி.ஆர்.சி.எல். கட்டுமான நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனையிலும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.
மேலும் இந்த குடியிருப்பு கட்டியதில் பயன்படுத்திய பொருட்களும் தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இந்த கட்டுமான பொருட்களின் தரத்தை ஆராய மத்திய பொதுப் பணித்துறையின் தரக் கட்டுப்பாட்டு பிரிவின் உதவியை சி.பி.ஐ. நாடியுள்ளது.
முதல் கட்ட விசாரணையில் சில ஆதாரங்கள் கிடைத்ததை தொடர்ந்து புதுவை கலெக்டர் ராகேஷ்ந்திரா, பொது பணித்துறை செயற் பொறியாளர் மற்றும் ஹைதராபாத் நிறுவனத்தின் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications