For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நான் இருக்கும் வரை, எனக்குப் பின்னரும் கூட திமுகவை யாராலும் அழிக்க முடியாது-கருணாநிதி

Google Oneindia Tamil News

Karunanidhi
திருவாரூர்: நான் எவ்வளவு நாள் இருப்பேனோ தெரியாது. நான் இருக்கும் வரை, எனக்குப் பின்னரும் கூட திமுகவை யாராலும் அழிக்க முடியாது என்று திமுக தலைவர் கருணாநிதி பேசியுள்ளார்.

திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் கைது செய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து திருவாரூரில் நேற்று திமுக கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்டு கருணாநிதி பேசினார்.

அவரது பேச்சு:

ஜெயலலிதாடுத்த பொய் வழக்குகளை கண்டித்து இந்த கூட்டம் நடைபெறுகிறது. பொய் வழக்குகளை வேக வேகமாக தொடுத்து அதில் திமுகவினரை சல்லடையாக துளைத்துவிடலாம் என்ற ஆட்சியாளர்களின் அராஜகத்துக்கு மக்கள் பதிலடி கொடுக்க நீண்டகாலம் காத்திருக்க அவசியமிருக்காது.

இப்போது நடப்பவற்றை கடந்த திமுக ஆட்சியோடு ஒப்பிட்டு பாருங்கள். இது பொய் வழக்கு மட்டுமல்ல, அராஜக வழக்காகவும் தொடரப்பட்டுள்ளது. பூண்டி கலைவாணன் மு.க.ஸ்டாலினோடு சென்றார் என்பதற்காக முதல் வழக்கு தொடரப்பட்டது. பொறுப்பின்மையால் ஒரு மாணவன் இறந்து விட்டான் என்று கற்பனையில் 2வது வழக்கு ஜோடிக்கப்பட்டுள்ளது.

சமச்சீர் கல்வி வேண்டும் என்று போராட்டம் நடக்கிறது. அப்படி நடந்த ஒரு ஆர்ப்பாட்டத்தில் கம்யூனிஸ்ட் தோழரின் பையன் கலந்து கொண்டு குரல் எழுப்பிய நேரத்தில் அங்கே விபத்து ஏற்பட்டு இறந்து போனான். அதற்கு கலைவாணன் காரணம் என்று வழக்கு ஜோடிக்கப்பட்டுள்ளது.

அழுத்தம் திருத்தமாக ஆப்பு அடிக்க வேண்டும் என்று கலைவாணன் மீது குண்டர் சட்டத்தை ஏவியுள்ளனர். அவருக்கு நான்தான் கலைவாணன் என்று பெயர் சூட்டினேன். நான் பெயர் வைத்த பாவம் குண்டர் சட்டத்தில் போடப்பட்டிருக்கிறார் போலும்.

அதிமுக என்ன சொல்லி ஆட்சிக்கு வந்தது? திமுக அரசு ரூ. 1 லட்சம் கோடி கடன் வைத்துள்ளது என்று ஊர் ஊராக கூட்டம் போட்டும் சொன்னார்கள். அரசு செலவினங்களுக்காக, திட்டங்களுக்காக, மக்கள் பிரச்னைகளை அணுகுவதற்காக கடன் வாங்குவது அரசின் கடமை. 2006ல் அதிமுக ஆட்சி முடியும்போது தமிழக அரசின் கடன் சுமை ரூ. 57 ஆயிரத்து 457 கோடி. 2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியில் ரூ. 43 ஆயிரத்து 892 கோடி கடன்தான் பெறப்பட்டது. ஆனால் ஆட்சிக்கு வந்த மூன்றே மாதத்தில் அதிமுக ரூ. 1 லட்சத்து 18 ஆயிரத்து 802 கோடி கடன் என்கிறது. அதாவது பொறுப்பேற்ற 3 மாதத்தில் ரூ 17 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் வாங்கியுள்ளது.

பட்ஜெட் என்றால் நல்ல நோக்கில் திட்டங்களை தயாரிக்க வேண்டும். திமுக ஆட்சியில் போட்ட திட்டங்கள் அனைத்தும் எதிர்க்கட்சிகளுடன் கலந்து பேசி எண்ணங்களை பரிமாறி அதற்கேற்ப வடித்தெடுத்த திட்டங்கள். எடுத்துக் காட்டு இலவச வண்ண தொலை காட்சி வழங்கும் திட்டம். நானோ என்னுடன் இருப்பவர்களோ அமர்ந்து பேசி யாருக்கு தரலாம் என்று முடிவு செய்யவில்லை.

ஒவ்வொரு முறை டெண்டர் விடும் போதும் நாமக்கல் மாளிகை சென்று - அதுவும் நான் கட்டியதுதான்; ஜெயலலிதா அங்கெல்லாம் போகிறார், கூட்டம் நடத்துகிறார் - அந்த மாளிகைக்கு சென்று அனைத்துக் கட்சி தலைவர்களுடனும் கலந்து பேசி டெண்டர் விடுவது நடைபெறும்.

இன்று என்ன நடக்கிறது என்பதை பார்க்கிறீர்கள். எப்படியோ வந்து விட்டார்கள். வந்தவர்களுக்கு வாழ்த்து கூறுவோம். நான் இங்கே நன்றி கூற வந்தபோதுகூட யாரையும் புண்படுத்தி பேசவில்லை. பண்படுத்தி பேச வேண்டும் என்பதுதான் அண்ணா கற்றுத் தந்த பாடம்.

கலைவாணன் என்ன தவறு செய்தார். கலைவாணர் மீது ஒரு காலத்தில் கொலை வழக்கு போடப்பட்டது. பெரியார் அண்ணா, நாங்கள் எல்லாம் கூட்டம் போட்டு பொய் வழக்கை வாபஸ் பெற கேட்டு புரட்சி செய்தோம். இங்கிலாந்து வரை சென்று வழக்காடி, வெற்றி பெற்று பாகவதரையும் கலைவாணரையும் மீட்டோம்.

இன்று இந்த கலைவாணனை மீட்டு கொடுக்குமாறு உங்களை கேட்டுக் கொள்ள வந்துள்ளேன். கலைவாணன் செய்த குற்றம் என்ன? ஸ்டாலினுடன் ஒரே வேனில் சென்றாராம். பெரிய குற்றம், செல்லலாமா? ஒரு கட்சியின் பொருளாளர் வரும்போது, மாவட்டச் செயலாளர் போகலாமா? அதற்கு ஒரு வழக்கு.

அதை தடுத்த ஸ்டாலின் கைது. பிறகு, கலைவாணன் மீது இன்னொரு வழக்கு சமச்சீர் கல்விக்காக. சிறுவன் பலியில் குற்றத்தை கலைவாணன் மீது சுமத்தி பாளையங்கோட்டை சிறைக்கு அனுப்பினார்கள்.

பாளையங்கோட்டை சிறையை நாங்கள் பார்க்காதவர்களா? பாளை சிறை என்றால் பயந்து விடுவோமா? ஒரு கலைவாணனை அடக்கினால், அவன் ஒரு துளி ரத்தம் சிந்தினால், அதில் ஆயிரக்கணக்கான கலைவாணன்கள் முளைப்பார்கள்.

கலைவாணன் கைதான அதே நாளில் சென்னையில் தென்சென்னை மாவட்ட திமுக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜெ.அன்பழகன் கைது செய்யப்பட்டார். யாரோ புகார் கொடுத்ததாக வீட்டில் தூங்கி கொண்டிருந்தவரை அவசரமாக போலீசார் கைது செய்து 8 பிரிவுகளின் கீழ் வழக்கு போட்டப்பட்டுள்ளது.

புகார் கொடுத்தவரின் லட்சணம் தெரியுமா? 2009ல் நலிவடைந்த ஆலையை போலி ஆவணம் தயாரித்து விற்று மோசடி செய்து கைது செய்யப்பட்டார். வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. அவர் கொடுத்த புகார் உண்மையா என்பதை போலீசார் அறியாமல் ஒரு சட்டமன்ற உறுப்பினரை அவசரமாக கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன?

இதுபோல சேலத்து சிங்கம் வீரபாண்டி ஆறுமுகம் மீது யாரோ ஒருவர் புகார் கொடுத்தார். கையெழுத்து போட வந்தவரை கைது செய்தனர். முதலில் கைது, அப்புறம் சிறை, பின்னர் ஜாமீன், இப்போது மீண்டும் கைது.

இது நாடா? அல்லது கடும் புலிகள் வாழும் காடா? இரவில் படுத்தால் காலையில் யார் முகத்தில் விழிப்போம் என்பது தெரியவில்லை. போலீஸ் முகத்திலா? ஐஜி, டிஐபி முகத்திலா? மக்கள் சுதந்திரமாக வாழ்கிறோம் என்று எண்ண முடியுமா? சுதந்திரம் பறிபோகும் ஆட்சி இன்று நடக்கிறது.

திமுக ஆட்சியில் அம்மையாரை சிறையில் அடைத்தது நானல்ல. நீதிமன்றம் ஏன் இன்னும் கைது செய்யவில்லை என்று கேள்வி எழுப்பியது. அதனால் கைது செய்யப்பட்டார். ஆனால் பெண்ணுக்குரிய உரிமை சிறிதளவும் குறையாமல் பார்த்துக்கொண்டோம். இப்போது அவருக்கு அதிக கோபம் வர காரணம் பெங்களூர் வழக்கு. இதுவரை 130 முறை வாய்தா வாங்கி இருக்கிறார். சுப்பனோ குப்பனோ 2 தடவை வாய்தா தவணை கேட்டால் இந்த போலீஸ் ராஜ்யத்தில் சும்மா விடுவார்களா?

திமுகவை அழித்து விடலாம் என நினைக்கிறார்கள். இது ஏழைகளுக்காக பாடுபடும் கட்சி. தொழிலாளர்களுக்கு பாடுபடும் கட்சி. குடிசைகளில் வாழும் மக்களுக்கான கட்சி என்பதற்காக அல்ல. திராவிட உணர்வை தமிழகத்தில் தட்டி எழுப்பும் கட்சி என்பதற்காகத்தான். திராவிட உணர்வு திமுக தவிர வேறு எந்த கட்சி தட்டி எழுப்புகிறது.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இனம் இந்த திராவிட இனம். இந்த திராவிட உணர்வை தாங்கி கொண்டிருக்கிற கட்சி திமுகதான்.

நான் எவ்வளவு நாளைக்கு இருப்பேனோ என்று தெரியாது. நான் இருக்கும் வரைக்கும் சரி, எனக்குப்பின்னும் யாராலும் திமுகவை அழிக்க முடியாது. இந்த கழகத்தை எவராலும் அழிக்க முடியாது. யாராலும் அழிக்கமுடியாது. திராவிட யாராலும் பட்டுப் போக செய்யமுடியாது என்றார் கருணாநிதி.

English summary
Nobdoy can demolish DMK till my last breath, said DMK chief Karunanidhi. He attened a meeting in Thriuvarur to condemn the arrest of District secretary Poondi Kalaivanan. He said, ADMK govt is trying to demolish the party. But it cannot succeed in its attempt. ADMK govt is foisting fake cases against DMK leaders and cadres, he charged.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X