For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேர்தலில் ரூ. 5000 கோடியை திமுக வாரியிறைத்தும் மக்கள் மசியவில்லை, ஏமாறவில்லை-ஜெயலலிதா

Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபைத் தேர்தலில் ரூ. 5000 கோடியை புழக்கத்தில் விட்டிருந்தது திமுக. ஆனால் அந்த 5000 கோடியைக் காட்டியும் மக்கள் மசியவில்லை. அவர்களுடைய பணபலத்திற்கு இடம் கொடுக்காமல் உறுதியாக இருந்து நல்ல முடிவை எடுத்து அதிமுகவிடம் ஆட்சியை ஒப்படைத்தனர். அப்படி மாற்றத்தைத் தந்த மக்கள் ஏற்றம் பெறும் வகையில் இந்த அரசு உழைக்கும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அதிமுக ஆட்சி 100 நாட்களைக் கடந்துள்ளதையடுத்து நேற்று சட்டசபையில் அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் வாழ்த்திப் பேசினர். இதற்குப் பதிலளித்து நன்றி கூறி முதல்வர் ஜெசயலலிதா பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

தமிழக மக்களின் மகத்தான ஆதரவோடு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அமைய பெற்ற அதிமுக தலைமையிலான அரசு தன் பணியில் 100 நாட்களை இன்றுடன் நிறைவு செய்கிறது. இதையொட்டி சட்டமன்ற கட்சி தலைவர்களும், உறுப்பினர்களும் பாராட்டு தெரிவித்தார்கள்.

இங்கே பேசியவர்கள் பாராட்டு தெரிவித்தபோது அது வெறும் சம்பிரதாய பாராட்டு போல எனக்கு தோன்றவில்லை. ஒவ்வொருவர் உள்ளத்தின் அடித்தளத்தில் இருந்து வந்த உணர்வுகளை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது. இந்த பாராட்டுக்களை கேட்கும் போது எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டதை விட ஒருவித லேசான அச்ச உணர்வுதான் தோன்றியது.

100 நாட்கள் முடிந்த பின்னணியில் பேசிய ஒவ்வொருவரும் குறை ஏதும் சொல்லாமல் முழுமனதோடு பாராட்டி இருக்கிறார்கள். இது தொடர்ந்து நீடித்திருக்க வேண்டுமே என்கிற அச்ச உணர்வும் இன்னும் வருகிற, பலப்பல 100 நாட்களுக்கும் ஓராண்டு, இரண்டாண்டு என ஐந்து ஆண்டுகள் நிறைவு பெறும் வகையிலும் இந்த 100 நாட்கள் பணிகளை மிஞ்சுகின்ற அளவுக்கு எங்கள் அரசின் பணிகள் இருக்க வேண்டுமே என்ற உணர்வுதான் எழுகிறது.

தொடர்ந்து உறுப்பினர்கள் பாராட்டக் கூடிய அளவுக்கு நம்முடைய செயல்பாடுகள் அமைய வேண்டுமே, அதுவொரு மிகப் பெரிய சவாலாக அமையுமே என்கிற உணர்வுதான் எனக்குள் எழுகிறது. ஆனாலும் உங்கள் அனைவரின் நல்வாழ்த்துக்களுடனும், ஆதரவுடனும் இதை சாதிக்க முடியும் என்று நம்புகிறேன். நாங்கள் எதை செய்தாலும் உள்ளத் சுத்தியோடு செய்வோம். மக்களை ஏமாற்றுகிற எண்ணம் எங்களிடம் கிஞ்சிற்றும் இல்லை.

கடந்த திமுக ஆட்சி காலத்தில் எங்களுக்கு கேஸ் அடுப்பு வழங்கினார்கள். ஒரு சிலருக்கு வழங்கி விட்டு அதற்கான சிலிண்டர் தரவில்லை. விவசாயிகளுக்கு மின் இணைப்பு தந்தார்கள். ஆனால் மின்சாரம் தரவில்லை. அப்படி நாங்கள் மக்களை ஏமாற்றுகிற எதையும் செய்ய மாட்டோம். அத்தகைய எண்ணம் எங்களிடம் இல்øலை.உள்ள சுத்தியோடும், கர்ம சிரத்தையோடும் செய்வதுதான் எங்கள் ஆட்சியின் நிலை. இந்த நேரத்தில் தமிழக மக்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்பொழுது ஒரு உண்மையை நான் உங்களுக்கு சொல்ல இருக்கிறேன். கடந்த திமுக ஆட்சியினர் முழுக்க முழுக்க மலை போல நம்பியது பண பலத்தைதான். ஆள் அதிகார பலத்தை விட அவர்கள் பணத்தைத்தான் நம்பினார்கள். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அவர்கள் புழக்கத்தில் விட்ட பணம் ரூ. 5,000 கோடி ஆகும்.

தேர்தல் பிரச்சாரம் நடந்த போது தலைமை தேர்தல் ஆணையம் மிக கடுமையான நடவடிக்கை எடுத்ததன் காரணமாக திமுகவினரிடமிருந்து ரூ.50 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. அப்போது முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மிக நெருக்கமான ஒருவர் நடைப்பயிற்சி சென்று கொண்டிருந்தபோது எனக்கு வேண்டிய ஒருவரும் அங்கே இருந்திருக்கிறார்.

அப்போது தேர்தல் கமிஷன் 50 கோடி ரூபாயை கைப்பற்றியிருக்கிறதே என்று அந்த நபரிடம் ஒருவர் கேட்க, அதற்கு கருணாநிதி குடும்பத்துக்கு நெருக்கமான அவர் 50 கோடி ரூபாய் என்பது ஒரு பானை தண்ணீரை கொண்டு செல்லும் போது சிதறி விழுமே அந்த துளிதான் எங்களுக்கு அது ஒன்றும் பொருட்டு அல்ல. எங்கள் அண்ணன் (அஞ்சா நெஞ்சனாக இருந்து இன்று காணாமல் போனாரே அந்த அண்ணன்) ரூ. 5000 கோடியை தேர்தலுக்காக அள்ளி இறைத்திருக்கிறார் என்று கூறியுள்ளார்.

இந்த 5000 கோடி ரூபாயை புழக்கத்தில் விட்டு ஆசை காட்டியும் மக்கள் மசியவில்லை. அவர்களுடைய பணபலத்திற்கு இடம் கொடுக்காமல் உறுதியாக இருந்து நல்ல முடிவை எடுத்துள்ளனர்.

பணம் மட்டுமல்ல தங்கம், சேலை என எதை கொடுத்தாலும் அதை புறக்கணித்து விட்டு அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிப்போம் என்று உறுதியுடன் இருந்து சாதித்திருக்கிறார்கள். அதனால்தான் மாற்றம் தந்த மக்களுக்கு ஏற்றம் தரும் ஒரு ஆட்சியை திட்டங்களை தந்திருப்பதாக விளம்பரம் செய்துள்ளோம்.

அந்த மாற்றத்தை தந்த மக்களுக்கு அதிமுக சார்பாக என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இங்கே பேசிய சட்டமன்ற உறுப்பினர்களும், எதிர்க்கட்சித் துணைத் தலைவர்களும் இந்த அரசுக்கு செய்ய வேண்டும் என்கிற மனம் உள்ளது. ஆனால் நிதி பற்றாக்குறைதான் அதற்கு தடையாக உள்ளது என்று கூறினார்கள். அது நூற்றுக்கு நூறு உண்மையாகும்.

இப்போதுள்ள என் நிலைமையை ஒரு உதாரணத்தின் மூலம் விளக்குகிறேன். ஒரு தாய்க்கு 10 பிள்ளைகள் உள்ளனர். அவர்கள் அனைவரும் பசியுடன் இருக்கிறார்கள். ஆனால் அந்த தாயாரிடம் அந்த வீட்டில் இருப்பது ஒரே தோசைதான். அது ஒரு குழந்தையின் பசியை போக்கக் கூட போதாது. அதனால் ஒரு குழந்தைக்கு ஒரு தோசையை கொடுத்து விட்டு ஒன்பது குழந்தைகளையும் பட்டினி போடலாமா என்று கருதிய தாய் அதனை துண்டு துண்டாக்கி 10 குழந்தைகளுக்கும் பகிர்ந்து தருவாள். அவள்தான் நல்ல தாய்.

பசியை முழுமையாக போக்க முடியாவிட்டாலும் இருப்பதை பகிர்ந்து தர வேண்டும் என்கிற தாயின் நிலைமையில்தான் நான் இருக்கிறேன். தமிழக மக்களுக்கு எவ்வளவோ செய்ய வேண்டும் என்கிற ஆசை எனக்கும், இந்த அரசுக்கும் உள்ளது. பழைய திமுக ஆட்சியினர் மக்களை கடனாளியாக்கி விட்டு சென்றுள்ளனர். மத்திய அரசு எந்த உதவியும் செய்யாமல் பாராமுகமாக உள்ளது. அத்தனையையும் மீறி நாங்கள் சாதிப்போம் என்கிற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

இந்த நேரத்தில் தமிழக மக்களை பார்த்து நான் சொல்ல விரும்புவது, "வருந்தாதே, ஏழை மனமே வருந்தாதே வருங்காலம் நல்ல காலம் அந்த நம்பிக்கையுடன் இருங்கள்'.விலையில்லாத அரிசி, ஏழைகளுக்கு மிக்சி, கிரைண்டர், பேன், ஆடுமாடுகள் வழங்குவதை பாராட்டி இங்கே பேசினார்கள்.

என்னை பொறுத்தவரை எனக்குள்ள ஆசை என்பது எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும். இங்கு இல்லாமை இல்லாத நிலை வர வேண்டும் என்பதுதான். இனிமேல் தமிழக மக்களுக்கு இலவசம் தர வேண்டிய அவசியமில்லை. அவர்கள் இனி எப்போதும் யாரிடமும் கைநீட்டி எதையும் பெறுகின்ற நிலை இருக்கக் கூடாது என்கிற நிலையை என் வாழ்நாளில் நான் காண வேண்டும் என்பதே என் ஆசை. அதுதான் என் லட்சியம்.உங்கள் அனைவரின் ஒத்துழைப்புடனும், உறுதுணையுடனும், மக்களின் ஆதரவோடும் என் லட்சியம் நிச்சயம் நிறைவேறும் என்றார் ஜெயலலிதா.

English summary
DMK allotted Rs. 5000 crore to bribe the voters in favour of them. But People were with ADMK, rejected DMK's money power and voted us back to the power, said CM Jayalalitha in the assembly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X