For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பொருளாதாரத்தை சீர்செய்யக்கோரி அமெரிக்காவில் போராட்டம்.-வேகமாகப் பரவுகிறது!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

US Protest
நியூயார்க்: அமெரிக்காவில் நிலவி வரும் பொருளாதார ஏற்றத்தாழ்வுக்கு எதிராக பல்வேறு நகரங்களிலும் போராட்டங்கள் பரவி வருகின்றன. பொருளாதார சரிவின்போது வங்கிகளுக்கு ஊக்கத்தொகை அளித்த அமெரிக்க அரசு வேலை இழந்தோரை தவிக்க விட்டு விட்டது என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அமெரிக்காவில் “வால் ஸ்டிரீட் ஆக்கிரமிப்பு இயக்கத்தின்" போராட்டம் மூன்றாவது வாரமாகத் தொடர்கிறது. நியூயார்க் மட்டுமல்லாமல் தற்போது நாடு முழுவதும் போராட்டம் பரவி வருகிறது.

இப்போராட்டத்திற்கு அமெரிக்கப் பேரறிஞர் நோம் சாம்ஸ்கி போன்றோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் நியூயார்க், பாஸ்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ, சிகாகோ ஆகிய நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. நேற்றும் இவை தொடர்ந்தன. இந்நிலையில் இந்த வாரத்தில் டென்னிசி மாகாணத்தின் மெம்பிஸ், மேரிலேண்ட் மாகாணத்தின் பால்டிமோர், மின்னசோட்டா மாகாணத்தின் மின்னபோலிஸ், ஹவாய் தீவின் ஹிலோ, டெக்சாஸ் மாகாணத்தின் மெக்அலன் ஆகிய நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடக்கப் போவதாக “தொடர் ஆக்கிரமிப்பு" என்ற இணையதளம் தெரிவித்துள்ளது.

ஆர்ப்பாட்டங்கள் நாடு முழுவதும் பரவ வழி செய்யும் வகையில் பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்தும்படி தொடர் ஆக்கிரமிப்பு இணையதளம் அறிவுறுத்தியுள்ளது. இதை எதிரொலிக்கும் வகையில் வால் தெரு ஆக்கிரமிப்பு இயக்கம் என்ற இணையதளத்தில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் :

1. சம்பள உயர்வு: தடையற்ற வர்த்தகத்தை முடிவுக்குக் கொண்டு வந்து உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும். ஒரு மணிநேரத்துக்கு 20 டாலர் என்ற வீதத்தில் சம்பளத்தை உயர்த்த வேண்டும்.

2. தனியார் நிறுவனங்களுக்குத் தடை: நாடு முழுவதுமான ஒரே ஒரு அரசு காப்பீட்டு நிறுவனம் மட்டுமே நிறுவப்பட வேண்டும். தனியார் நிறுவனங்கள் இதில் அடிக்கும் கொள்ளையை வால் தெருவில் உள்ள பங்குச் சந்தையில் பதுக்குவதால், அவற்றுக்கு காப்பீட்டுத் திட்டத்துக்குள் நுழையத் தடை விதிக்க வேண்டும்.

3. நிரந்தர ஊக்கத் தொகை: வேலைவாய்ப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும், குறைந்த பட்ச ஊக்கத் தொகைக்கு உறுதியளிக்க வேண்டும்.

4. இலவசக் கல்வி: கல்லூரிக் கல்வி கட்டணங்களை அறவே நீக்க வேண்டும்.

5. புதுப்பிக்கத் தக்க எரிசக்தி: நிலக்கரி போன்ற புதைபடிவ எரிபொருட்களைக் கைவிட்டு, மாற்று வழியில் எரிசக்தி உற்பத்திக்கான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிட வேண்டும்.

6. உடனடிச் செலவு: குடிநீர், சாலைகள், கழிவுநீர்ப் போக்குவரத்து, ரயில், பாலங்கள், மின்கட்டமைப்பு ஆகியவற்றுக்காக உடனடியாக ஒரு டிரில்லியன் டொலர் செலவழிக்க வேண்டும்.

7. வனப் பாதுகாப்பு: அமெரிக்காவின் அனைத்து அணு உலைகளையும் மூடுதல், காடுகள் மற்றும் சதுப்பு நிலங்களை உருவாக்குதல், ஆறுகளின் இயற்கையான போக்கை தடுக்காதிருத்தல் போன்றவற்றிற்காக மேலும் ஒரு டிரில்லியன் டொலர் செலவு செய்ய வேண்டும்.

8. சம உரிமை: இனம் மற்றும் பாலியல் சம உரிமைகளுக்கான சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும்.

9. எல்லைச் சிக்கல்: நாட்டின் அனைத்து மாகாண எல்லைகளையும் திறந்து விட வேண்டும். இதன் மூலம் யாரும் எங்கு வேண்டுமானாலும் போய் வேலை செய்து வாழ வழி செய்தல்.

10. வாக்குச் சீட்டு: அமெரிக்கத் தேர்தல்களில் சர்வதேச நடைமுறைப்படி, வாக்குச் சீட்டைக் கொண்டு வர வேண்டும். சுயேச்சை மற்றும் கட்சி கண்காணிப்பாளர்கள் மத்தியில் வாக்குச் சீட்டுகள் எண்ணப்பட வேண்டும்.

11. கடன் தள்ளுபடி: வர்த்தகம், கல்வி, வீட்டு அடமானம் உள்ளிட்ட அனைத்துக் கடன்களையும் உடனடியாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். அதேபோல், உலக வங்கி அனைத்து நாடுகளுக்கும் வழங்கிய கடன், வங்கிகள் வங்கிகளுக்கு வழங்கிய கடன், அனைத்து கடன் பத்திரங்கள் மீதான கடன் என அனைத்தையும் உலகளவில் தள்ளுபடி செய்ய வேண்டும்.

12. விலக்கம்: அனைத்து கடன் மதிப்பீட்டு குறியீட்டு நிறுவனங்களுக்கும் சட்டப் பாதுகாப்பை விலக்க வேண்டும்.

13. தொழிலாளர் அமைப்பு: தொழிலாளர் அமைப்புகளின் தலைமையைத் தேர்ந்தெடுப்பதில், அனைத்து தொழிலாளர்களும் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். போன்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

பரவி வரும் போராட்டம்

நியூயார்க்கில் நேற்று முன்தினம் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தனியார் நிறுவன தலைவர்களின் பணப் பேராசையை அடையாளப்படுத்தும் விதத்தில் பேய் போல வாயில் பணத்தைக் கவ்வியபடி வேடங்கள் அணிந்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்னொருபுறம் பெரிய நிறுவனங்களில் வேலை இழந்தவர்களும் போராட்டங்களில் குதித்துள்ளனர். இவர்களுடன் கல்லூரி மாணவர்களும், பல்வேறு தொழிற்சங்கங்களும் பங்கேற்றுள்ளனர்.

அதிபர் ஒபாமா கருத்து

போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிபர் ஒபாமா, மக்களின் கோபத்தின் மூலம் நமது நிதி அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பது தெரியவந்துள்ளது. என்று கூறியுள்ளார்.

பரவி வரும் போராட்டம்

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் அரசு பல்வேறு சிக்கன நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகிறது. அதனால் ஆயிரக்கணக்கானோர் வேலையிழந்துள்ளனர். 2008ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் பாதிப்பு இன்னும் முற்றிலுமாக நீங்காத நிலையில் மற்றொரு அறுவை சிகிச்சைக்கு அமெரிக்க மக்கள் தயாராக இல்லை. இதனை எதிர்த்து மக்கள் போராடிவருகின்றனர். நியூயார்க் நகர ஆக்கிரமிப்பு பிரிவின் ஒருங்கிணைப்பாளர்கள் இதுகுறித்துக் கூறியதாவது: தனியார் நிறுவனங்கள், சட்டவிரோதமான முறையில் எங்கள் வீடுகளைக் கைப்பற்றுகின்றனர். மக்கள் பணத்தில் வரிவிலக்கு உள்ளிட்ட சலுகைகளுடன் அவர்கள் தங்கள் நிறுவனங்களை கடனில் இருந்து மீட்டுக் கொள்கின்றனர்.

தங்கள் தலைமை அதிகாரிகளுக்கு கணக்கிட முடியாத அளவிற்கு சம்பளத்தை வாரி வழங்குகின்றனர். அதோடு தங்கள் நிறுவனங்களில் பணியாற்றும் எங்களைப் போன்றவர்களை வெளியே தள்ளிவிட்டு வெளியிடப் பணி(அவுட்சோர்சிங்) மூலம் தங்கள் வேலைகளை முடித்துக் கொள்கின்றனர். இதனால் பணியாளர்களுக்கு கிடைக்க வேண்டிய சம்பளம், காப்பீட்டுத் திட்டச் செலவு எல்லாம் அவர்களுக்கு மிச்சமாகிறது.

அமெரிக்கப் பத்திரிகைகள் இந்த ஆர்ப்பாட்டங்களைப் பற்றி தரக் குறைவான விமர்சனங்களை வாரித் தெளிக்கின்றன. ஆர்ப்பாட்டங்கள் பற்றி அடக்கி வாசிக்கின்றன. அதேநேரம் அமெரிக்கா மட்டுமின்றி உலகளாவிய சிந்தனையாளர்கள் வட்டாரத்தில் இவை பெரும் ஆதரவு பெற்று வருகின்றன.

நியூயார்க்கின் ஜூகோட்டி பூங்காவில் நூற்றுக்கணக்கான மக்கள் தங்கியுள்ளனர். இவர்கள் தங்களுக்கான அடிப்படைத் தேவைகளை தாங்களே நிறைவேற்றிக் கொள்கின்றனர். இங்கிருந்தபடியேதான் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படுகின்றன. எகிப்து புரட்சிக்கும் இப்போராட்டத்திற்கும் உள்ள ஒரே ஒரு வித்தியாசம் எகிப்து புரட்சி, நாட்டின் தலைமையை எதிர்த்து நடந்தது. இப்போதைய அமெரிக்க போராட்டம் நிதி சீர்கேட்டை எதிர்த்து நடக்கிறது.

English summary
Concerns over Wall Street practices and economic inequality that have led to sit-ins and rallies in New York and elsewhere reverberated up to the White House on Thursday, with President Barack Obama saying the protesters are expressing the frustrations of the American public.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X