For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பதவியேற்ற நாளிலேயே துடிப்புடன் பேசி அனைவரையும் கவர்ந்த கருப்பசாமி

Google Oneindia Tamil News

சங்கரன்கோவில்: முதல்வர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இருந்த கருப்பசாமி சமீபத்தில் மரணமடைந்தார். அவரது மரணம் அதிமுகவுக்கு மிகப் பெரிய இழப்பு என்பதில் சந்தேகமில்லை.

ரத்த புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அமைச்சர் கருப்பசாமி கடந்த 22ம் தேதி சென்னையில் மரணம் அடைந்தார். அவரது உடல் நேற்று அவரது சொந்த ஊரான புளியம்பட்டியில் அடக்கம் செய்யப்பட்டது.

சங்கரன்கோவில் தாலுகாவில் உள்ள புளியம்பட்டி கிராமம் அமைச்சர் கருப்பசாமியின் சொந்த ஊராகும். இவரது தந்தை சொக்கன், தாயார் லட்சுமி. கருப்பசாமி பி.யூ.சி. வரை படித்துள்ளார். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், சீதாலட்சுமி (30) என்ற மகளும், மாரிச்சாமி (21) என்ற மகனும் உள்ளனர். சீதாலட்சுமிக்கு திருமணமாகி விட்டது. புளியம்பட்டியில் வசித்து வருகிறார். மகன் மாரிச்சாமி ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளார்.

அமைச்சர் கருப்பசாமி எம்.ஜி.ஆரின் தீவிர விசுவாசி ஆவார். முதன் முறையாக புளியம்பட்டி அதிமுக கிளை செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் 1986ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு களப்பாகுளம் பஞ்சாயத்து தலைவரானார்.

தென் மாவட்டங்களில் வென்ற ஒரே அதிமுக எம்.எல்.ஏ.

1995ம் ஆண்டு சங்கரன்கோவில் ஒன்றிய செயலாளராக பொறுப்பேற்றார். இதனைத் தொடர்ந்து 1996ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் முதல் முறையாக சங்கரன்கோவில் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் தமிழகம் முழுவதும் அதிமுகவிற்கு நான்கு எம்எல்ஏக்கள் மட்டுமே கிடைத்தனர். அதில் அமைச்சர் கருப்பசாமியும் ஒருவர்.

அப்போது தென் மாவட்டங்களில் வெற்றி பெற்ற ஒரே அதிமுக வேட்பாளர் என்ற பெருமையும் கருப்பசாமிக்கு உண்டு. இதையடுத்து நெல்லை மாவட்ட துணை செயலாளராக நியமிக்கப்பட்டார். 1997ல் நெல்லை மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டபோது நெல்லை மேற்கு மாவட்ட செயலாளராக கருப்பசாமி நியமிக்கப்பட்டார். 2001ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாம் முறையாக சங்கரன்கோவில் தொகுதி எம்எல்ஏவானார்.

அப்போது அதிமுக ஆட்சி பொறுப்பேற்றதால் தாட்கோ வாரிய தலைவராக நியமிக்கப்பட்டார். 2002ம் ஆண்டு அமைச்சரவை விரிவாக்கத்தின் போது தமிழக ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராக கருப்பசாமி பொறுப்பேற்றார். 2006ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் கருப்பசாமிக்கு மூன்றாம் முறையாக சீட் வழங்கப்பட்டு வெற்றி பெற்றார். அப்போது திமுக ஆட்சிக்கு வந்ததால் எதிர்க்கட்சி எம்எல்ஏவாக இருந்தார்.

இறுதியாக 2011ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் சங்கரன்கோவில் தொகுதியில் கருப்பசாமி நான்காம் முறையாக வெற்றி பெற்றார். தமிழக கால்நடை மற்றும் பால்வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். பின்னர் இலாகா மாற்றப்பட்டு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சரானார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் அமைச்சர் கருப்பசாமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதை தொடர்ந்து இலாகா இல்லாத அமைச்சராக இருந்தார். அதிமுகவில் கருப்பசாமி அமைப்பு செயலாளராகவும், ஆட்சிமன்றக் குழு உறுப்பினராகவும் செயல்பட்டார்.

எம்.ஜி.ஆரின் தீவிர விசுவாசி

தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் எம்.ஜி.ஆரின் பாடல்களை பாடி தொண்டர்களை வெகுவாக கவர்ந்தவர். கட்சி கூட்டம் என்றாலும் சரி, திருமணம் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகள் என்றாலும் சரி தவறாமல் எம்.ஜி.ஆர். பாடல்களைப் பாடுவார். அமைச்சர் கருப்பசாமியின் பாடல்களை முதலமைச்சர் ஜெயலலிதாவும் ரசித்தது உண்டு. அமைச்சர் கருப்பசாமி மற்ற அமைச்சர்களால் செல்லமாக "கருப்பு' என்று அழைக்கப்பட்டார்.

நடப்பு அதிமுக அமைச்சரவையில் அமைச்சராக நியமிக்கப்பட்ட கருப்பசாமி, பதவியேற்பு விழாவின்போது படு வேகமாக பதவிப்பிரமாண வாசகங்களைப் படித்து முதல்வர் ஜெயலலிதாவை குலுங்க குலுங்க சிரிக்க வைத்தார். அவரது மின்னல் வேகப் பேச்சை ஜெயலலிதா மிகவும் ரசித்துக் கேட்டார் என்பது நினைவிருக்கலாம்.

அதே மின்னல் வேகத்தில் அவர் தனது பதவிக்காலத்தை முழுமை செய்யாமல் அகால மரணமடைந்தது அதிமுகவினரை வேதனைப்பட வைத்துள்ளது.

English summary
Late minister Karuppasamy's native is Puliampatti in Sankarankovil. He has a daughter Seethalakshmi(30) and a son Marichamy(21). Karuppasamy was a great admirer of MGR and never falied to sing his song in the functions and meetings.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X