For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மதுரை அருகே அத்வானியின் ரத யாத்திரை பாதையில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு- நக்ஸல்கள் சதி?!

By Chakra
Google Oneindia Tamil News

மதுரை: பாஜக தலைவர் அத்வானி ரத யாத்திரை மேற்கொண்டுள்ள பாதையில் ஒரு பாலத்துக்கு அடியில் பைப் வெடிகுண்டு கண்டறியப்பட்டு, உரிய நேரத்தில் அகற்றப்பட்டது.

இதையடுத்து அத்வானியின் ரத யாத்திரை செல்லும் பாதையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டது.

மதுரையிலிருந்து ராஜபாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் ஆலம்பட்டி என்ற கிராமத்தில் தரைப்பாலத்தில் இந்த குண்டு வைக்கப்பட்டிருந்தது. பாலத்தின் அடியில் பைப் வெடிகுண்டு இருந்ததை அந்த பகுதியில் ஆடு மேய்க்க சென்றவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து அவர்கள் தந்த தகவலையடுத்து போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வு செய்தனர்.

அப்போது, மதுரை- டி.கல்லுப்பட்டி இடையிலான இந்தப் பாதையில் 5 டெட்டனேட்டர்களுடன் ஆறு அடி கொண்ட 2 பைப் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை ஒயர் மூலம் பேட்டரி மற்றும் கடிகாரத்துடன் இணைக்கப்பட்டிருந்தன.

அந்த சிறிய பாலத்தின் அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 6 அடி நீள பைப் வெடிகுண்டுகளை இயக்க 25 மீட்டர் நீளமுள்ள வயர், அருகில் இருந்த பனைமரத்தின் அடியில் பேட்டரியுடன் இணைக்கப்பட்டு இருந்தது. அத்வானி இந்த இடத்தை கடக்கும்போது அதை வெடிக்கச் செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டிருந்ததாகத் தெரிகிறது.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸ் டி.எஸ்.பி. ரவீந்திரன், தாசில்தார் மோகன் உள்ளிட்டோர், உடனடியாக அத்வானியுடன் பயணம் செய்யும் தேசிய பாதுகாப்புப் படையின் கமாண்டோக்களுக்கும் தகவல் தந்தனர்.

இதையடுத்து கமாண்டோக்களும் போலீஸ் வெடிகுண்டு நிபுணர்களும் விரைந்து வந்து அந்த குண்டை அகற்றினர். இந்த குண்டு நெடுந்தூரம் கொண்டு செல்லப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டது.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி பகுதியில் பதுங்கியுள்ள நக்ஸல்கள் தான் இந்த வெடிகுண்டை வைத்திருக்க வேண்டும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து மதுரை மாவட்ட போலீசாரிடம் தமிழக டிஜிபி அறிக்கை கோரியுள்ளார்.

அறிக்கை கேட்கும் மத்திய அரசு:

அதே போல அத்வானி செல்லும் பாதையில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக, தமிழக அரசு அறிக்கை அளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் கோரியுள்ளது.

ஒருவர் கைது:

இந் நிலையில் இந்த வெடிகுண்டு விவகாரம் தொடர்பாக நேரு என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டாலும் யாத்திரை திட்டமிட்டபடி தொடர்ந்தது.

அதே நேரத்தில் அத்வானியின் ரத யாத்திரை செல்லும் பாதை மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, ஆலம்பட்டி வழியாக அவர் விருநகருக்கு செல்லாமல், திருமங்கலத்திற்கு முன் உள்ள நான்கு வழிச் சாலை வழியாக அவர் விருதுநகர் சென்றார்.

ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் பகுதிகளில் தனது வாகனத்தில் இருந்தபடியே அவர் பேசினார். வாசுதேவநல்லூர் தரணி சர்க்கரை ஆலை விருந்தினர் மாளிகைக்கு சுமார் 2 மணிக்கு வந்தடைந்த அவர் மதிய உணவு அருந்தி விட்டு சிறிது நேரம் ஓய்வெடுத்த பின்னர் 3.30 மணி அளவில் அங்கிருந்து புறப்பட்டு புளியங்குடி பேரூந்து நிலையம் முன்பும், கடையநல்லூர் தொலைபேசி நிலையம் முன்பும், தென்காசி காந்தி சிலை முன்பும் சிறப்புரை ஆற்றினார்.

பின்னர் மேலகரம், குற்றாலம் வழியாக செங்கோட்டை காவல் நிலையம், தாலுகா அலுவலகம், வீரவாஞ்சிநாதன் சிலை ஆகிய பகுதிகளில் அத்வானி பேசினார்.

தொடர்ந்து நெல்லை செல்லும் அத்வானி புளியங்குடியில் பொதுக் கூட்டத்தில் உரையாற்றவுள்ளார்.

English summary
A bomb was recovered on the Advani's yatra route near Madurai. It was placed under a bridge betwwen Madurai and T.Kallupatti
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X