For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக் கோரி நாளை முதல் 1 வாரம் ஆர்ப்பாட்டம்: சிபிஎம்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: மத்திய அரசின் தவறான கொள்கைகளை கண்டித்தும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாளை முதல் 7ம் தேதி வரை ஒரு வாரம் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளன. இந்த விலை உயர்வுக்கு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் தவறான கொள்கைகளே காரணமாகும். பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் தொடர்ச்சியான விலை உயர்வும், விவசாய விளை பொருட்கள் மீதான ஊக வணிகத்தை தடை செய்ய மறுப்பதுமே உணவுப்பொருட்களின் விலை உயர்வுக்கு பிரதான காரணங்களாகும்.

தற்போது மத்திய அரசு சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டையும், பெரும் வர்த்தக நிறுவனங்களையும் அனுமதிக்க முயற்சிக்கிறது. உர விலை நிர்ணய உரிமையையும் மத்திய அரசு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கே வழங்கியுள்ளது. இதனால் உர விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது.

இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளதோடு, உணவுப் பொருட்களின் விலை மேலும் தொடர்ந்து கடுமையாக உயரும். பொது விநியோக முறையை பலப்படுத்துவதற்கு மாறாக, ரேஷன் கடைகளில் விநியோகிக்கும் பொருட்களை சுருக்குகிறது. கிராமப்புறங்களில் ரூ.26, நகர்ப்புறங்களில் ரூ.32க்கு மேல் சம்பாதிப்பவர்கள் வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ளவர்கள் என்று சொல்லி ரேஷன் கடைகளை பயன்படுத்தும் மக்களை குறைக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

இது ஏழை, எளிய மக்களை வஞ்சிக்கும் செயலாகும். மத்திய அரசின் இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம். தமிழகத்தில் அனைவருக்கும் ரேஷன் பொருட்கள் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும், மத்திய அரசின் தவறான அணுகுமுறையை எதிர்த்திட முன்வர வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது, உணவு உரிமையை உறுதிப்படுத்துவது, மானிய விலையில் உரம் கிடைப்பதை உறுதிப்படுத்துவது, சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை தடுத்து, சிறுவர்த்தகர்களை பாதுகாப்பது, வேலைவாய்ப்பை உருவாக்குவது, அரசு பணிகளில் காலியிடங்களை நிரப்புவது, வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 1 முதல் 7ம் தேதி வரை ஒரு வாரம் தமிழகம் முழுவதும் கிளர்ச்சி இயக்கங்கள் நடைபெறும்.

இவ்வியக்கத்தை தெருமுனை கூட்டம், ஆர்ப்பாட்டம், பிரசாரம் போன்ற வடிவங்களில் முன்னெடுத்துச் செல்ல கட்சி அணிகளை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
CPM state secretary G. Ramakrishnan has announced that the party will protest for a week starting from november 1 condemning centre and seeking action to control food inflation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X