For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தி.நகர் கடைகள் கட்டுமானத்தின் போது பதவி வகித்த 4 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட 31 அதிகாரிகளுக்கு சிக்கல்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Chennai High Court
சென்னை: சட்டவிரோத கட்டுமானங்கள் நடந்தபோது பதவியில் இருந்த நான்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 31 சென்னை பெருநகர வளர்ச்சிக் குழு அதிகாரிகளை வழக்கில் சேர்க்கவும், அவர்கள் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரைக்கக் கூடாது என்பதற்கு அவர்கள் விளக்கம் அளிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்ட, தியாகராயநகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ், தி சென்னை சில்க்ஸ் உள்ளிட்ட 25 வணிக வளாகங்கள் திங்கட்கிழமையன்று மூடி சீல் வைக்கப்பட்டது. உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இதுதொடர்பான வழக்கு விசாரணை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதல்பெஞ்ச் முன் செவ்வாய்கிழமையன்று விசாரணைக்கு வந்தது. வழக்கறிஞர்களின் வாதங்களை கேட்ட முதல்பெஞ்ச் கீழ்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளது.

முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு

சி.எம்.டி.ஏ தாக்கல் செய்த மனுவை பார்க்கும் போது, அனுமதியின்றி கட்டப்பட்ட பல கட்டடங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன. அந்த கட்டடங்களை இடிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பது தெரிகிறது. சட்டவிரோத கட்டடங்கள், ஆக்கிரமிப்புகள் மீது சி.எம்.டி.ஏ, மாநகராட்சி நடவடிக்கை எடுக்கும் போது அது குறித்த வழக்கை, சிவில் கோர்ட்டுகள் அனுமதிக்கக் கூடாது என, 2006 – ம் ஆண்டு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை சிவில் கோர்ட், கடந்த 31- ம் தேதி பிறப்பித்த தடை உத்தரவை, அட்வகேட் – ஜெனரல் தாக்கல் செய்துள்ளார். இந்த உத்தரவை பிறப்பித்த உதவி நீதிபதிக்கு, தடை உத்தரவு பிறப்பிப்பது தொடர்பான சட்ட அடிப்படை அறிவு இல்லை என்பது தெரிகிறது. சிவில் நடைமுறைச் சட்ட விதிகளுக்கு முரனாக இந்த உத்தரவு உள்ளது.

ஐகோர்ட் உத்தரவு இருந்தும் சிவில் கோர்ட்டில் வழக்கை ஏற்று, தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத கட்டுமானங்கள் நடக்கும்போது அந்த கால கட்டத்தில் இருந்த அதிகாரிகளின் விவரங்களை தாக்கல் செய்யுமாறு, அட்வகேட் ஜெனரலுக்கு, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உத்தரவிடப்பட்டது. சி.எம்.டி.ஏ உறுப்பினர் செயலர் தாக்கல் செய்த மனுவில், அதிகாரிகளின் பட்டியல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் யார்? யார்?

இதன்படி சி.எம்.டி.ஏவில் உறுப்பினர் செயலர்களாக பதவி வகித்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளான நசிமுதீன், எம்.ஆர்.மோகன், விக்ரம் கபூர், தயானந்த் கட்டாரியா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மேலும் 2006 முதல் 2010 வரை வெவ்வேறு கட்டடங்களில் பணியாற்றிய பிளானர்கள் மீதும், உதவி பிளானர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி என்.சுபாஸ் சந்திரா, ஆர். சிவசுப்ரமணியன், எஸ்.குருசாமி, பி.எஸ். ரவீந்திரன், எஸ்.ராஜசேகரபாண்டியன், பி.தங்கபிரகாசன், எஸ்.செல்வகுமார், என்.எஸ்.பெரியசாமி, பி.நாகலிங்கம், எஸ்.ஆர்.ராஜேந்திரன், என். ஜெயச்சந்திரன், ஏ. கிருஷ்ணகுமார், எஸ்.ருத்திரமூர்த்தி, கே.துளசிராமன் மற்றும் 13 உதவி பிளானர்களும் அடங்குவர்

இப்பட்டியலில் உள்ள 31 அதிகாரிகளையும், வழக்கில் சேர்க்க வேண்டும். இந்த அதிகாரிகளுக்கு, கோர்ட் உத்தரவின் நகலை சி.எம்.டிஏ வழக்கறிஞர் வழங்கவேண்டும். இது நோட்டீஸ் அனுப்பியதற்கு சமம்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

பில்டர்கள் மற்றும் நில உரிமையாளர்கள், சட்டவிரோத கட்டுமானங்களை செய்யும் போது, தாங்கள் நடவடிக்கை எடுக்காத காரணத்தை, இந்த அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும். மேலும், இவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அரசுக்கு, கோர்ட் ஏன் பரிந்துரைக்கக் கூடாது என்பதற்கும், விளக்கம் அளிக்க வேண்டும்.

கோர்ட் உத்தரவை முழுமையாக நிறைவேற்றும் விதமாக, நடவடிக்கைகளை தொடருவோம் என அட்வகேட் - ஜெனரல், சென்னை மாநகராட்சி வழக்கறிஞர் உறுதிமொழி அளித்திருப்பதால் இவ்வழக்கு நவம்பர் 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

English summary
The Madras high court on Tuesday directed the Chennai Metropolitan Development Authority (CMDA) to implead the 31 named officers, during whose period the illegal constructions were made in the city, as parties to the present batch of petitions, which sought to demolish unauthorised constructions.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X