For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'துக்ளக் தர்பார்' நடத்துகிறார் ஜெயலலிதா: வைகோ

By Chakra
Google Oneindia Tamil News

Vaiko
சென்னை: சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற அண்ணா நூற்றாண்டு நூலகத்தை, குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றப் போவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

மதுரையில் நிருபர்களிடம் பேசிய அவர், முன்பு இருந்த கலைஞர் ஆட்சியில் அமைக்கப்பட்டிருந்தது என்ற ஒரு காரணத்திற்காக இந்த நூலகத்தை அங்கே இருந்து அகற்ற முடிவு செய்திருப்பது தான்தோன்றித்தனமான முடிவாகும். 'துக்ளக் தர்பார்' என்பதற்கு வேறு எந்த உதாரணமும் இருக்க முடியாது.

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பார்வையிட்டு, அங்கே உரையாற்றுகிறபொழுது ஆசியா கண்டத்திலேயே மிகச் சிறந்த நூலமாக இது அமைந்திருக்கிறது பாராட்டிச் சொன்னார்.

முந்தைய திமுக அரசின் அனைத்து திட்டங்களையும் எதிர்க்க வேண்டும் என்ற நோக்கில், அதிமுக அரசு நடந்து கொள்கிறது. நூலகத்திற்காக அமைக்கப்பட்ட உள்கட்டமைப்பை எவ்வாறு மருத்துவமனையாக பயன்படுத்துவார்கள் என்று தெரியவில்லை என்றார்.

கி.வீரமணியும் கண்டனம்:

இதுகுறித்து திக தலைவர் வீரமணி வெளியி்ட்டுள்ள அறிக்கையில், சென்னை கோட்டூர்புரத்தில் திமுக அரசால் உருவாக்கப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகத்தை குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றப் போவதாகவும், இந்த நூலகம் நுங்கம்பாக்கம் டிபிஐ கல்வி வளாகத்திற்கு மாற்றப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருப்பது கண்டனத்துக்குரியது.

172 கோடி ரூபாய் செலவில் இந்த நூலகம் முதல்வராக இருந்த கருணாநிதியின் ஆட்சியில் கட்டப்பட்டது; உலகத்தரம் வாய்ந்த-ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகம் என்ற அளவில், ஒரே நேரத்தில் 5000 பேர்கள் அமர்ந்து படிக்கவும் வசதிகளைக் கொண்ட- நூலகத்திற்கென்றே திட்டமிட்டு, அதற்கேற்ப நவீன கணினி தொழில் நுட்பங்களைக் கையாண்டும், மாற்றுத் திறனாளிகள் கூட வசதியாக அமர்ந்து படிக்கும் வண்ணமும், தனித்தனிப் பகுதிகளைக் கொண்ட நூலகம் என்ற தனிச்சிறப்புடையது.

5.5 லட்சம் புத்தகங்களைக் கொண்டதோடு பழைய ஓலைச்சுவடிகளை கூட ஆய்வுக்காக சிறப்பாகப் பாதுகாத்துப் பயன்படுத்தும் வசதிகளை உள்ளடக்கி, சிறப்பாக செயல்படுகின்ற நூலகம் இது. உணவகம், மிகச்சிறந்த அரங்குகள் ஆகியவைகளை உள்ளடக்கியது. இதனை மாற்ற வேண்டிய அவசியம் என்னவென்றே புரியவில்லை.

குழந்தைகள் நல மருத்துவமனை கட்ட சென்னையில் இடங்களா அரசுக்கு இல்லை? நூலகத்திற்கென வடிவமைக்கப்பட்டதை மருத்துவமனையாக மாற்றுவதற்கு மக்கள் வரிப்பணம் பல கோடி ரூபாய் செலவாகத்தானே செய்யும்? அது எவ்வகையில் ஏற்கக்கூடிய ஒன்று?

இதனை தமிழக அரசும் முதல்வரும் மறுபரிசீலனை செய்ய வேண்டும். அண்ணா நூலகம் அதே கட்டடத்தில் தொடரும் வண்ணம் முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் வீரமணி.

அதே போல இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்ற எதிர்ப்பு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
MDMK founder Vaiko today slammed the AIADMK government's decision to convert the Anna Centenary Library into a children's hospital, saying the Jayalalithaa government should not "act out of animosity" towards the previous DMK government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X