• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மாஜி அமைச்சருடன் தான் இருந்த சிடியைக் காட்டி மிரட்டியதால் ராஜஸ்தான் நர்ஸ் கொலை?

By Mayura Akilan
|

Bhanwari Devi
ஜோத்பூர்: ஜோத்பூரில் நர்ஸ் காணாமல் போன சம்பவம் தொடர்பாக ராஜஸ்தான் மாநில முன்னாள் அமைச்சரிடம் வியாழக்கிழமை சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். சம்பந்தப்பட்ட நர்ஸ், தான் மாஜிஅமைச்சருடன் உல்லாசமாக இருந்த வீடியோ சிடியைக் காட்டி மிரட்டியிருக்கலாம் என்றும் அதனால் அந்த நர்ஸ் கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என்றும் சிபிஐ நம்புகிறது.

இதையடுத்து அந்த சிடியைக் கைப்பற்றும் முயற்சிகளை சிபிஐ முடுக்கி விட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் நர்ஸாக பணி புரிந்தவர் பன்வாரி தேவி. கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் இவரைக் காணவில்லை. ஜோத்பூர் மாவட்ட தலைநகரிலிருந்து ஜாலிவாடா கிராமத்தில் உள்ள சுகாதார மையத்துக்கு பணிப்பெண்ணாக இவர் சென்றதிலிருந்து வீடு திரும்பவில்லை என்று ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் அவரது கணவர் அமர்சந்த், ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

தனது மனைவியை நீர்வளத்துறை அமைச்சர் மஹிபால் மதெர்னாவின் ஆள்கள் கடத்தியிருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் அவர் அந்த மனுவில் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அக்டோபர் 16-ம் தேதி அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கினார் முதல்வர் அசோக் கெலோட்.

சிபிஐ விசாரனை

கடத்தப்பட்ட பன்வாரி தேவி கொலை செய்யப்பட்டு அவரது சடலம் எரிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. எனவே இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு சிபிஐக்கு மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து வழக்கின் விசாரணை சூடுபிடிக்கத் தொடங்கியது.

இம்மாத தொடக்கத்தில் பன்வாரி தேவி இருப்பிடம் தொடர்பான தகவல் அளிப்போருக்கு ரூ. 5 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என அறிவித்த சிபிஐ இது தொடர்பாக கடந்த 7-ம் தேதி லூனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மல்கான் சிங் பிஷ்னோயின் சகோதரி இந்திரா பிஷ்னோயிடம் விசாரணை நடத்தியது.

சிக்கிய ஆதாரங்கள்

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஷோகன்லால் மற்றும் பன்வாரி தேவிக்கும் இடையே நடந்த செல்போன் உரையாடல் பதிவுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. மஹிபாலிடம் சமரசம் செய்து பிரச்னையைத் தீர்க்குமாறு பாலி தொகுதி எம்.பி. பத்ரி ராம் ஜாக்கரை பன்வாரி தேவி அணுகியதாகத் தெரிகிறது.

இந்த வழக்கு தொடர்பாக சமீபத்தில் காம்கோர்டர் மற்றும் கம்ப்யூட்டரை சிபிஐ கைப்பற்றியுள்ளது. இவையிரண்டில் இந்த வழக்குக்குத் தேவையான ஆதாரங்கள் இருப்பதாக சிபிஐ நம்புகிறது. ஆனால் காம்கோர்டர் பதிவுகளில் ஒன்று அழிக்கப்பட்டுள்ளது. கேமரா மற்றும் கம்ப்யூட்டரில் பன்வாரி தேவி காணாமல் போனது தொடர்பாக முக்கிய படங்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது.

இதற்கிடையே, பன்வாரி தேவி, தான் முன்னாள் அமைச்சருடன் நெருக்கமாக இருந்த காட்சிகளை வீடியோவில் பதிவு செய்து வைத்திருந்ததாகவும், அதை காட்டி முன்னாள் அமைச்சரை மிரட்டியிருக்கலாம் என்றும், இதனால்அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் சிபிஐ நம்புகிறது.

இதை உறுதிப்படுத்துவது போல தனக்கும் பன்வாரி தேவிக்கும் இடையே நெருக்கமான உறவு இருந்ததாக மாஜி அமைச்சர் சிபிஐயிடம் ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இருப்பினும் சம்பந்தப்பட்ட சிடி இதுவரை சிக்கவில்லை. அது அழிக்கப்பட்டிருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் அதைத் தேடும் முயற்சிகளை சிபிஐ முடுக்கி விட்டுள்ளது.

முன்னாள் அமைச்சரிடம் விசாரணை

இந்நிலையில் வியாழக்கிழமை காலை 11.15 மணிக்கு சிபிஐ அலுவலகத்துக்கு வந்த மஹிபாலிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இவருடன் சாஹிராம் பிஷ்னோயிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

பன்வாரி தேவியுடன் செல்போனில் மஹிபால் பேசிய விவரம் குறித்த தகவல்களை சிபிஐ அதிகாரிகள் விசாரித்துள்ளர். இந்த வழக்கு தொடர்பாக தனது அறிக்கையை உயர் நீதி மன்றத்தில் வெள்ளிக்கிழமை சிபிஐ தாக்கல் செய்யும் என்று தெரிகிறது.

 
 
 
English summary
The Central Bureau of Investigation (CBI) on Thursday grilled former Rajasthan water resources minister Mahipal Maderna in the missinng Auxiliary Nurse and Midwife (ANM) Bhanwari Devi case in Jodhpur. However, trouble compounded for Maderna as the alleged video CD showing him in a compromising position with Bhanwari Devi was flashed on the local TV channels for the first time on Thursday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X