திருமங்கலம் அருகே தண்டவாளத்தில் விரிசல்-நெல்லை எக்ஸ்பிரஸ் தப்பியது
மதுரை: மதுரை, திருமங்கலம் - விருதுநகர் இடையே ரயில் தண்டவாளத்தில் அடிக்கடி விரிசல் ஏற்பட்டு ரயில்கள் செல்வதில் தாமதம் ஏற்படுகின்றன. வெள்ளிக்கிழமை அதிகாலை சிவரக்கோட்டை அருகே தண்டவாள விரிசல் ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் நெல்லை ரயில் விபத்தில் இருந்து தப்பியது.
தமிழக அளவில் தண்டவாளங்களில் அடிக்கடி விரிசல் ஏற்படும் பகுதிகளில் மதுரை கோட்டம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதில், மதுரை - விருதுநகர், மதுரை - திருச்சி இடையே தினமும் விரிசல் ஏற்படுவதும், நடுவழியில் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்படுவதும், பல மணி நேரம் பயணிகள் தவிப்பதும் நாளும் நடக்கும் அவலமாக உள்ளது. இந்த விரிசல் கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் அதற்காக துறை ஊழியர்கள் வந்து சரி செய்யும் வரை நடுவழியில் ரயில்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன.
நெல்லை ரயில் தப்பியது
வெள்ளிக்கிழமை அதிகாலை திருமங்கலம் விருதுநகர் இடையே சிவரக்கோட்டை ரெயில்வே கேட் அருகே அதிகாலை தண்டவாளத்தில் விரிசல் இருப்பதை ரெயில்வே ஊழியர் கண்டு பிடித்தார். உடனடியாக இதுகுறித்து திருமங்கலம் மற்றும் கள்ளிக்குடி ரெயில் நிலையங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சென்னையில் இருந்து நெல்லை நோக்கி வந்த நெல்லை எக்ஸ்பிரஸ், திருமங்கலம் ரெயில் நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. விரிசல் ஏற்பட்ட இடத்தை தற்காலிகமாக சரிசெய்தனர். பின்னர் 15 நிமிட தாமதத்திற்கு பிறகு நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது.
நிரந்தரத் தீர்வு
கடந்த சில வருடங்களாகவே இந்த வழித்தடத்தில் ரயில் தண்டவாளங்களில் அடிக்கடி விரிசல் ஏற்பட்டு நடுவழியில் ரயில்கள் நிறுத்தப்படுகின்றன. ஒரே நாளில் நான்கைந்து இடங்களில் கூட விரிசல் ஏற்பட்டு பின்னர் கண்டறியப்பட்டு சரிசெய்யப்படுகின்றன.
இதற்கு காரணம் இந்த வழித்தடத்தில் உள்ள ரயில் தண்டவாளங்கள் காலாவதியாகிப் போனதுதான் என்கின்றனர் பயணிகள். எனவே பேராபத்து ஏற்படும் முன் ரயில்வே நிர்வாகம் விழித்துக்கொள்ள வேண்டும். தண்டவாளங்களில் ஏற்படும் விரிசலுக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.