For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்தது.. சரத்குமாருக்கும்!

By Chakra
Google Oneindia Tamil News

Kanimozhi
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகியுள்ள திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி, கலைஞர் டிவி நிர்வாகி சரத்குமார் ரெட்டி உள்ளிட்ட 5 பேருக்கு ஜாமீன் வழங்கி டெல்லி உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. இதையடுத்து திமுக தரப்பு பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

இவர்கள் தவிர குசேகாவ்ன் புரூட்ஸ் மற்றும் வெஜிடபிள் நிறுவனத்தின் இயக்குனர்கள் ஆசிப் பல்வா, ராஜீவ் அகர்வால், பாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளரும் சினியுக் நிறுவன அதிபருமான கரீம் மொரானி ஆகியோருக்கும் ஜாமீன் வழங்கி டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் கோரி ஆகியோரும் தங்களின் ஜாமீன் மனுக்களை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

கனிமொழி கடந்த மே மாதம் 20ம் தேதி கைது செய்யப்பட்டு 6 மாதங்களாக (சரியாக 192 நாட்கள்) திகார் சிறையில் இருந்து வந்தார். அவரது ஜாமீன் மனுக்கள் 4 முறை டெல்லி பாட்டியாலா சிபிஐ விசாரணை நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. இந்நிலையில் அவர் மீண்டும் ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை வரும் டிசம்பர் மாதம் 1ம் தேதி நடக்கும் என்று உயர் நீதிமன்றம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவுடன் கூட்டு சேர்ந்து முறைகேடாக ஸ்பெக்ட்ரம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் இயக்குனர் வினோத் கோயங்கா, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவன அதிகாரிகள் ஹரி நாயர், கௌதம் தோஷி, சுரேந்திர பிபாரா மற்றும் யூனிடெக் வயர்லெஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்திரா ஆகியோருக்கு நேற்று முன்தினம் ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அவர்களுக்கு ஜாமீன் கிடைத்த சில மணி நேரத்திலேயே தனது ஜாமீன் மனுவை விரைந்து விசாரிக்குமாறு கனிமொழி சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதேபோல, தொலைத்தொடர்புத் துறை முன்னாள் செயலர் சித்தார்த் பெகுரா, கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குநர் சரத் குமார், பாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர் கரீம் மொரானி, குசேகாவ்ன் நிறுவனத்தின் இயக்குநர்கள் ஆசிப் பல்வா, ராஜீவ் அகர்வால் ஆகியோரும் தங்களின் ஜாமீன் மனுக்களை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

இந்த மனுக்கள் முதலில் டிசம்பர் 1ம் தேதி விசாரிக்கப்படுவதாக இருந்தது. இருப்பினும் மேற்கண்டோரின் கோரிக்கையைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் இவர்களின் மனுக்கள் விசாரிக்கப்படும் என டெல்லி உயர் நீதிமன்றம் அறிவித்தது.

அதன்படி வெள்ளிக்கிழமை இவர்களின் ஜாமீன் மனுக்கள் விசாரணைக்கு வந்தன. அப்போது இவர்களது ஜாமீன் மனுக்களை சிபிஐ எதிர்க்கவில்லை.

விசாரணையின்போது கனிமொழியின் வக்கீலைப் பார்த்து நீதிபதி வி.கே.ஷாலி, ஐந்து தொலைத் தொடர்பு நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன் அளித்து விட்டது, எனவே மற்றவர்களையும் விட்டு விட வேண்டும் என்று சொல்ல வருகிறீர்களா? உயர்நீதிமன்றம் இதை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும். மற்றவற்றைப் பரிசீலிக்கக் கூடாது என்று கூற வருகிறீர்களா என்று கேட்டார்.

இதையடுத்து விசாரணையை திங்கள்கிழமை வரை நீதிபதி ஷாலி ஒத்திவைத்து உத்தரவிட்டார். இதனால் கனி்மொழி தரப்பு நம்பிக்கை இழந்த நிலையில், கடும் ஏமாற்றமடைந்தது.

இந் நிலையில் இன்று இந்த மனுக்கள் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது கனிமொழி, சரத்குமார், ஆசிப் பல்வா, ராஜீவ் அகர்வால், கரீம் மொரானி ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இவர்கள் யாரும் நாட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என்றும் நீதிபதி நிபந்தனை விதித்தார்.

அதே நேரத்தில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறைச் செயலாளர் சித்தார்த் பெகுராவுக்கு ஜாமீன் வழங்க சிபிஐ எதிர்ப்புத் தெரிவித்ததால், அவரது மனு மீதான விசாரணை நாளையும் தொடர உள்ளது.

இதில், கனிமொழி மீது சிபிஐ நம்பிக்கை துரோகம் செய்யும் வகையில் கிரிமினல் சதித் திட்டம் தீட்டுவது, கிரிமினல் சதி, ஏமாற்றுதல், மோசடி, ஊழல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜாமீன் வழங்கப்பட்டுவிட்ட நிலையில், டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவு, டெல்லி பாட்டியாலா சிபிஐ விசாரணை நீதிமன்றத்துக்கு அனுப்பப்படும். அங்கு பார்மலிட்டீஸ் எல்லாம் முடிந்த பின்னர், திகார் சிறைக்கு உத்தரவு அனுப்பப்படும்.

இதன் பின்னரே கனிமொழி உள்ளிட்டோர் இன்று இரவு அல்லது நாளை காலை தான் விடுதலை செய்யப்படுவர் என்று தெரிகிறது.

இந்த 2ஜி வழக்கில் இவர்களையும் சேர்த்து மொத்தம் 10 பேருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் தவிர முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா, பெகுரா உள்பட மேலும் 4 பேர் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட யாருக்கும் கடந்த 7 மாதம் ஜாமீன் தரப்படவில்லை என்பதும், சிபிஐ நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட பின்னர் ஜாமீன் கோரலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியும், கனிமொழிக்கு ஜாமின் கிடைக்கவில்லை. இதை மூத்த வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி எதிர்த்திருந்தார். கனிமொழிக்கு ஜாமீன் மறுப்பது சட்ட விரோதம் என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் யுனிடெக் வயர்லெஸ் நிறுவன முன்னாள் இயக்குனர் சஞ்சய் சந்திரார், ஸ்வான் டெலிகாமின் வினோத் கோயங்கா, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டெலிகாம் அதிகாரிகள் கெளதம் தோஷி, ஹரி நாயர், மற்றும் சுரேந்திர பிபாரா ஆகியோருக்கு கடந்த 23ம் தேதி உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இதன் மூலமே இப்போது கனிமொழி உள்ளிட்டோருக்கும் ஜாமீன் கிடைத்துள்ளது.

கனிமொழி கைதானது ஏன்?:

ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு 2ஜி உரிமம் வழங்குவதற்காக அந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஷஹித் உஸ்மான் பல்வாவுக்குச் சொந்தமான டி.பி. ரியால்டி நிறுவனத்திடம் இருந்து ரூ.200 கோடி கலைஞர் டி.வி.க்கு முறைகேடாக வழங்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்தப் பணம் குசேகாவ்ன் புரூட்ஸ் மற்றும் வெஜிடபிள், சினியுக் ஆகிய நிறுவனங்கள் வழியாக கலைஞர் டி.வி.க்கு கைமாறியதாகவும் சிபிஐ குற்றம் சாட்டியது. இந்தப் புகாரின் அடிப்படையில் தான் கலைஞர் டி.வி.யின் பங்குதாரர்களான கனிமொழி, அதன் நிர்வாகியான சரத்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

English summary
DMK MP Kanimozhi and four others have been granted bail in the 2G spectrum allocation scam case. The Delhi High Court granted bail on Monday to five accused while directing them to furnish two bonds of Rs 5 lakh each and ordering them that they cannot leave the country. Apart from Kanimozhi the other accused who have been granted bail include Cineyug founder Karim Morani, Kalaignar TV's MD Sharath Kumar, Kusegaon directors Asif Balwa and Rajeev Agarwal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X