For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வைகை, அமராவதி ஆறுகளில் வெள்ளம், சாலைகள் துண்டிப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மதுரை: தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொட்டிய வடகிழக்கு பருவமழையால் மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய அணைகள் நிரம்பி வழிகின்றன. அணைகளில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்படுவதால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. சாலைகள் துண்டிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுமண்டலத்தால் வியாழக்கிழமை முதல் தமிழ்நாடு முழுவதும் கனமழை தொடங்கியது. நான்கு நாட்களாக பெய்த தொடர்மழை காரணமாக முல்லைப்பெரியாறு, வைகைஅணை, ஆழியாறு அணை, அமராவதி, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, உள்ளிட்ட முக்கிய அணைகள் நிரம்பியுள்ளன. நெல்லை மாவட்டத்தில் காரையாறு, சேர்வலாறு அணைகளில், 115 அடிக்கு மேல் தண்ணீர் உயர்ந்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஏரிகள் நிரம்பி வழிகின்றன. இதனால் எரிகளில் இருந்து திறந்து விடப்படும் உபரிநீர் ஆறுகளில் கரைபுரண்டு ஓடுகிறது.

வைகை ஆற்றில் வெள்ளம்

வைகை அணையில் இருந்து உபரிநீர் திறந்து விடப்படுவதால் வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இது மதுரை நகரில் உள்ள அனைத்து தரைப்பாலங்களையும் மூழ்கடித்துள்ளது. இதனால் பொதுமக்கள் நகரின் ஒருபகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு மூன்று கிலோமீட்டர் தூரம் சுற்றிச்செல்ல வேண்டியுள்ளது. இதேபோல் திருபுவனம் அருகே வைகை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளநீரில் தரைப்பாலம் அடித்துச்செல்லப்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பரமக்குடி அருகேவைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தரைப் பாலங்கள் நீரில் மூழ்கின. இதனால் 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான பாதை முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

அமரவாதி அணை திறப்பு

உடுமலைப்பேட்டை அடுத்துள்ள அமராவதி அணையின் நீர் உயரம் திங்கள்கிழமை 88 அடியை எட்டியதையடுத்து, அணையின் உபரி நீர் முழுவதும் திறந்து விடப்பட்டுள்ளது. அமராவதி ஆற்றில் வினாடிக்கு 1907 கன அடியும், பிரதான கால்வாய் மூலம் 150 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதைத் தொடர்ந்து கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு இரண்டாம் கட்டமாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குளங்கள் நிரம்பின

குமரியில் திங்கள்கிழமையும் மழை நீடித்தது. நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையால், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாகப் பெய்த மழையால் 196 குளங்கள் நிரம்பியிருக்கின்றன.

மழையின் தீவிரம் குறைந்தது

நான்கு நாட்களாக கொட்டித்தீர்த்த மழை திங்கட்கிழமை முதல் சற்றே ஓய்ந்துள்ளது. அரபிக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து விட்டதே இதற்கு காரணம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இருப்பினும் வடக்கு கடலோட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் தெரிவித்துள்ளார்.

English summary
Heavy rain in the catchment areas for the third consecutive day on Sunday increased the inflow into the Vaigai dam to 8,400 cusecs with the officials maintaining the flood alert issued for the dam in the first week of November.The water level in the dam stood at 68.18 feet compared to total capacity of 71 feet
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X