For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

6 மணி நேரம் பவர்கட்டா? 50 ரூபாய் நிவாரணம் தர வேண்டும்- மின்சார ஒழுங்குமுறை ஆணையம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: மணிக்கணக்கில் கரண்ட் கட் ஆகிறதா கவலை வேண்டாம் இனி பவர் கட் பற்றி புகார் தந்தால் அதற்கான நிவாரணம் உடனடியாக கிடைக்கும். மின்சாரம் தடை படும் ஒவ்வொரு ஆறு மணி நேரத்திற்கும் 50 ரூபாய் வீதம் நுகர்வோருக்கு மின்சார வாரியம் நிவாரணம் தரவேண்டும் என்று தமிழ்நாடு மின்சார ஓழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மின் நுகர்வோருக்கான உரிமைகள் மற்றும் நுகர்வோரின் குறை தீர்ப்புக்கான காலக்கெடு குறித்த, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது :

உடனடியாக புகார் தரலாம்

மின் நுகர்வோர், தங்களது குறைகள் தொடர்பான அனைத்து முறையீடுகளையும், மின் பகிர்மான கழகத்தின் பிரிவு அலுவலகங்களில் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ தரலாம். இணைப்பை இடமாற்றுதல், மின்சார தடை, பெயர் மாற்றம், கட்டணப் பிரிவு மாற்றம், கட்டணப் பிரச்னை, தற்காலிக இணைப்பு, வோல்டேஜ் பிரச்னை, வைப்பு நிதி திரும்பப் பெறுதல் மற்றும் அனைத்து வகை மின் நுகர்வு பிரச்னைகளுக்கு மனுக்கள் தரலாம்.

பிரிவு அலுவலர்கள் அல்லது அவர்களால் அதிகாரம் அளிக்கப்பட்ட நபர்கள், மனுக்களை பெற்று, எழுத்து மூலம் ஒப்புகை தர வேண்டும். இதற்காக, பிரிவு அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களிலும், பதிவேடு பராமரிக்க வேண்டும்.

மின்வாரியம் தரவேண்டிய நிவாரணம்

அறிவிக்கப்படாத மின்வெட்டு மின்தடை பிரச்சினைகளை தீர்க்க மணிக்கணக்கில் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் அறிவிக்கப்படாத மின் வெட்டு குறித்து புகார் அளிக்கப்பட்டால் நுகர்வோருக்கு குறைந்த பட்சம் 50 ரூபாய் முதல் அதிகபட்சம் 2000 ரூபாய் வரை நிவாரணம் அளிக்க வேண்டும். மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் ஒரு நாளுக்கு 25 ரூபாயில் இருந்து 250 ரூபாய் வரை நிவாரணம் தரவேண்டும்.

நிவர்த்தி செய்ய காலக்கெடு

மீட்டர் அல்லது இணைப்பு இடமாற்றம்: 25 நாட்கள்; மின்தடம் மாற்றுதல்: 60 நாட்கள்; டிரான்ஸ்பார்மர் இடமாற்றம்: 90 நாட்கள்; மீட்டர் புதுப்பித்தல்: 30 நாட்கள்; கட்டண வகை மாற்றம்: 7 நாட்கள்; பெயர் மாற்றம்: 7 நாட்கள்; கட்டண கணக்கு பிழை திருத்தம்: பணம் செலுத்தும் இறுதி நாட்களுக்குள், குறைகளை தீர்க்க வேண்டும். இவ்வாறு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

திருப்தி இல்லை என்றால் புகார்

பிரிவு அலுவலகங்கள், குறைகளை தீர்க்க தவறும்போதும், நிவாரணத்திலும் திருப்தி அடையாத நுகர்வோர், அந்தந்த பகுதி மின் வாரிய கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் உள்ள குறைதீர்ப்பு மையத்தில் முறையிடலாம். இந்த மையங்கள் குறித்து அலுவலக முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் (இ-மெயில்) உள்ளிட்ட விவரங்களை, மின்வாரிய இணையதளத்தில் வெளியிட வேண்டும். குறை தீர்ப்பகத்தின் உத்தரவை மேல்முறையீடு செய்ய விரும்புவோர், சென்னை எழும்பூரில் உள்ள, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் குறை தீர்ப்பாயத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

English summary
Tamil Nadu electricity regulatory commission has recommended for a penaly for consumers if power goes of for 6 hrs or more.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X