For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஐயப்ப பக்தர்களுக்கு ஆபத்து ஏற்பட்டால்.. கேரளாவுக்கு பாஜக எச்சரிக்கை!

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: சபரிமலைக்கு புனித யாத்திரையாக லட்சக்கணக்கான தமிழர்கள் தினந்தோறும் சென்று வருகிறார்கள். இந்த பக்தர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டியது கேரள அரசின் கடமை. ஐயப்ப பக்தர்களுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் தமிழக பாஜக அதை வேடிக்கை பார்க்காது என்று அக் கட்சியின் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முல்லைப் பெரியாறு அணையை அடைத்து விட்டு புதிய அணையை கட்டுகிறோம், தமிழகத்தின் 999 ஆண்டு முல்லை பெரியாறு அணையின் உரிமையை மூட்டை கட்டி வையுங்கள், நாங்கள் கட்டும் புதிய அணையில் இருந்து தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை தாராளமாக தருகிறோம் என்று கேரள அரசும், முல்லைப் பெரியாறு அணையை மூடி விட வேண்டும் என்று மூச்சுக்கு முன்னூறு முறை குரல் கொடுக்கும் கேரளத்தின் அனைத்து கட்சிகளும் முழங்குகிறார்கள்.

இருக்கின்ற அணையில் தமிழகத்திற்கு இருக்கும் உரிமையை பலம் இழக்க வைப்பதற்காக அணையே பலவீனமானது என்று உண்மைக்கு புறம்பாக குரல் கொடுக்கும் சுயநலவாதிகள் புதிதாக அணையைக் கட்டி அதில் தண்ணீர் உரிமை தருவார்களாம். அதை மக்கள் நம்ப வேண்டுமாம்.

அணை பலமாக இருக்கிறது என்று மத்திய நிபுணர் குழு கூறிவிட்டது. உச்ச நீதிமன்றம் முல்லைப் பெரியாறு அணையின் பலம் உறுதியாக உள்ளது. நீர் மட்டத்தை உயர்த்தலாம் என்று கூறிவிட்டது. அப்படி இருந்தும் நீர்மட்டத்தை உயர்த்துவதற்கு தயாராக இல்லாததோடு ஏற்கனவே குறைக்கபட்டுள்ள 136 அடியை மேலும் 120 அடிக்கு குறைக்க வலியுறுத்தி கேரள முதல்வர் உம்மன் சாண்டி முதற்கொண்டு அனைத்து அரசியல் கட்சிகளும் கேரளத்தில் பேசுகிறார்கள் என்றால் இது தண்ணீர் தருவதற்காக அல்ல, தவிக்கின்றவன் குரல்வளையை நசுக்குவதற்காகத்தான். அணையின் நீர் மட்டத்தை படிப்படியாக குறைத்து இப்போதே மூடிவிட திட்டமிடுகிறார்கள்.

நதி நீர்ப் பிரச்சனையில் கேரளம் தமிழகத்தை வஞ்சிப்பதில் தான் குறியாக உள்ளது என்பதற்கும் முல்லைப் பெரியாறு மட்டுமின்றி நெய்யாறு இடது கரை சானல், ஆழியாறு- பரம்பிக்குளம் ஆகியவற்றிலும் கேரள அரசு விதண்டாவாதம் செய்கிறது. இந்த செயல்பாடுகள் மாநிலங்களுக்கு இடையே ஒற்றுமையை குலைத்து விடும்.

எனவே தமிழக அரசு முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையை மட்டும் மனதில் கொள்ளாமல் அம்மாநிலத்தோடு தொடர்புடைய அனைத்து நதி நீர்ப் பிரச்னைகளுக்கும் தீர்வு காணும் வகையில் தான் இந்த விவகாரத்தை அணுக வேண்டும்.

ஒரு பிரச்சனைக்கு தீர்வு காண உண்மையில் விருப்பம் இருக்குமென்றால் யாரோடு அதுகுறித்து பேச வேண்டுமோ அவர்களையும் மதிக்கும் மனப்பக்குவம் இருக்க வேண்டும். மாறாக தமிழக முதல்வர் அவர்களின் உருவப் பொம்மையை எரிக்கும் அளவுக்கு செல்கிறார்கள், கேரளாவுக்கு செல்லும் தமிழக பஸ்களை தடுக்கிறார்கள் என்றால் இவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணும் மனநிலைக்கு மாறாக பூதாகரமாக்கவே திட்டமிடுகிறார்கள் என்பது தெளிவு.

இதையெல்லாம் சாதாரண மக்கள் செய்ய மாட்டார்கள். இதற்கு பின்னால் சில குழுக்களோ, இயக்கங்களோ, நிச்சயம் இருக்கும்.

தமிழர் உணர்வுகளை சீர்குலைக்கும் எந்த ஒரு செயலையும் பாஜக கட்சி ஏற்காது. முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையை வைத்து தமிழகத்தில் இருந்து கேரளத்திற்கு செல்கின்ற வாகனங்கள் தாக்கப்படுவதும் தடுக்கப்படுவதும் உடனடியாக நிறுத்த வேண்டும்.

இதை தண்ணீர் பிரச்சனையாக மட்டும் பார்க்காமல் இரு மாநில பிரச்சனை என்பதை உணர வேண்டும். இரு மாநிலங்களுக்கு இடையே பல கொடுக்கல் வாங்கல்கள் உள்ளன என்பதை கேரள அரசு புரிந்து கொள்ள வேண்டும். சுப்ரீம் கோர்ட், மத்திய அரசு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு பணியாத, தேச ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிப்போருக்கு துணைபோகும் கேரள அரசை பதவி நீக்கம் செய்ய மத்திய அரசு தயாராக வேண்டும்.

தற்போது தமிழ்நாட்டில் இருந்து லட்சக்கணக்கான ஐயப்ப பக்ர்கள் சபரிமலைக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். இந்த பக்தர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டியது கேரள அரசின்
கடமை. ஐயப்ப பக்தர்களுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் தமிழக பாஜக அதை வேடிக்கை பார்க்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மத்திய அரசு இப்பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த விரும்பினால் வாஜ்பாய் அவர்கள் பிரதமராக இருந்த போது கொண்டு வந்த நதி நீர் இணைப்பு திட்டத்தை உருவாக்குவதற்கு உறுதியாக அனைத்து நதிகளையும் தேசியமயமாக்கி எந்த மாநிலத்திற்கும் பாதகமில்லாத வகையில், நதிநீர் பங்கீடு செய்ய வேண்டும்.

மேலும் கேரள மாநிலத்தில் நடைபெற உள்ள பிரவம் இடைத்தேர்தலில் வெற்றிபெற்று தன் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்கின்ற சுயநல அரசியல் சிந்தனையும் நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டத்தில் தான் சார்ந்த காங்கிரஸ் கட்சியின் மத்திய அரசை உலுக்க இருக்கும் லோக்பால் மசோதா மற்றும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சம்பந்தப்பட்ட மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பதவி இறக்கப்பட்டு மன்மோகன் சிங் அரசே கவிழ்ந்திடும் ஆபத்தான அரசியல் புயலில் இருந்து திசை திருப்பவும்,

தான் செய்த பாமாயில் ஊழல் போன்ற புகார்களிலிருந்து தப்பிக்கவும் கேரள முதல்வர் உம்மன் சாண்டி எடுத்துள்ள அரசியல் வியூகம் தான் இது என்பது அரசியல் தெரிந்தவர்கள் நன்கு அறிவார்.

அதே போல் 5 ஆண்டுகள் கேரளத்தில் முதல்வராக இருந்த முல்லைப் பெரியாறு பிரச்சனைக்கு ஒரு தீர்வும் காண இயலாத கேரள கம்யூனிஸ்ட் தலைவருள் ஒருவரும் முன்னாள் முதல்வருமான அச்சுதானந்தன் பிரவம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று உம்மன் சாண்டி அரசை வீழ்த்தி பதவியை தட்டிப் பறிக்கும் ஒரே நோக்கில் செயல்படுகிறார் என்பதை அனைவரும் உணர்ந்துள்ளார்கள்.

இவர்களின் இந்த சூழ்ச்சிகளுக்கு கேரள மக்கள் துணை போகக்கூடாது என்பதோடு தமிழக மக்களும் இதனை நன்கு புரிந்து கொண்டு அரசியல் சதுரங்க விளையாட்டிற்கு இரையாகி, நாட்டின் ஒற்றுமையை குலைக்க முயல்வோருக்கு துணை போய்விடக் கூடாது என்றும் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் பொன்.ராதாகிருஷ்ணன்.

English summary
TN BJP has warned Kerala over attacks in Ayyappa devotees in Sabarimala
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X