For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முதுமலை சரணாலயத்தில் 14ம் தேதி யானைகள் முகாம் துவக்கம்

Google Oneindia Tamil News

Elephants Camp
சென்னை: தமிழகத்தில் உள்ள கோவில்கள், தனியார் பராமரிப்பில் உள்ள 45 யானைகளுக்கு முதுமலை வனவிலங்கு சரணாலயத்தில் வரும் 14ம் தேதி முதல் யானைகள் நலவாழ்வு முகாம் நடத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவி்ட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

இயற்கையின் படைப்பில் உருவாக்கப்பட்ட எல்லா உயிரினங்களும் அன்பு காட்டி பாதுகாக்கப்பட வேண்டியவை என்பது மனித நேயமிக்க சமூக ஆர்வலர்களின் சிந்தனை. மனிதர்களுக்கு பல வகையில் உதவும் விலங்குகளிடம் அன்பும் கருணையும் காட்ட வேண்டும். விலங்குகளுக்கு கொடுமைகளை இழைக்காமல், முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்பது முதல்வர் ஜெயலலிதாவின் விருப்பம்.

யானைகளை முறையாக பராமரிக்காமல், சீரற்ற கடினமான தரையில் நிற்க வைப்பதாகவும், தகுந்த ஓய்வு அளிப்பது இல்லை எனவும், அவைகள் கொடுமைப்படுத்தப்படுவதாகவும், முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதாகவும் முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்துக்கு கடந்த 2003ம் ஆண்டில் தகவல் கொண்டு வரப்பட்டது.

இவ்வாறு முறையாகப் பராமரிக்கப்படாத காரணத்தால் யானைகள் சில இடங்களில் அமைதி இழந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய நிகழ்வுகளும் நடைபெற்றன. இதனையடுத்து கோவில்களில் உள்ள யானைகளை தொடர்ந்து பணியில் ஈடுபடுத்தாமல் தகுந்த ஓய்வு தரவும் சத்தான உணவளித்து பராமரிக்கவும், அவற்றின் உடல்நலத்தைப் பேணவும், தேவையான சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவுறுத்தி உள்ளார்.

மேலும் அறநிலையத்துறை, தமிழக வனத்துறையின் ஒத்துழைப்போடு தமிழகத்தில் உள்ள கோவில் யானைகள், தனியாருக்கு சொந்தமான யானைகளை நீர்வசதி கொண்ட, ஏற்ற சுற்றுச்சூழல் அமைந்த முதுமலை (தெப்பக்காடு) வனவிலங்குச் சரணாலயத்தில் யானைகள் நலவாழ்வு முகாம் நடத்திட ஆணையிட்டார்.

கடந்த 2003ம் ஆண்டில் 55 யானைகளுக்கு 30 நாட்களும், 2004ம் ஆண்டில் 65 யானைகளுக்கு 48 நாட்களும், 2005ம் ஆண்டில் 63 யானைகளுக்கு 48 நாட்களும் முதுமலை வனவிலங்கு சரணாலயத்தில் யானைகள் நலவாழ்வு முகாம்கள் சிறப்புடன் நடத்தப்பட்டன.

இந்த முகாமில் யானைகளின் உடல்நலம் பேணப்பட்டு புத்துணர்ச்சி அளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. யானைகளுக்கு இளமை அளிக்கும் சிறப்பு உணவும், மருத்துவ வசதியும் வழங்கப்பட்டது. அவற்றின் உடல்நலமும், மனநலமும் பேணப்பட்டு நலவாழ்வு முகாம் முடிந்து திருக்கோவிலுக்கு அவைகள் திரும்பிச் சென்று புத்துணர்ச்சியோடு தங்கள் பணிகளை மேற்கொண்டன.

அத்துடன் யானைகளை அன்புடன் பராமரிக்கும் அவசியத்தை உணர்த்தும் வகையில் யானைப் பாகர்களுக்கும் சிறப்பு பயிற்சியும் அளிக்கப்பட்டது. இந்த திட்டம் அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டது.

இந்த நலவாழ்வு முகாம் கடந்த 5 ஆண்டுகளாக நடத்தப்படவி்ல்லை. இதனால் பெரும்பாலான யானைகள் உடல் நலமும், மனநலமும் குன்றி சோர்வுடன் உள்ளன. மீண்டும் நலவாழ்வு முகாம் இதனை உணர்ந்த முதல்வர் ஜெயலலிதா, யானைகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில், இந்த ஆண்டு கோவில்களுக்கும் திருமடங்களுக்கும் சொந்தமான 45 யானைகளுக்கு 48 நாட்களுக்கு முதுமலை வனவிலங்கு சரணாலயத்தில் (தெப்பக்காடு) யானைகள் நலவாழ்வு முகாம் நடத்த உத்தரவிட்டுள்ளார்.

இந்த யானைகள் நலவாழ்வு முகாம் வரும் 14ம் தேதி முதல் துவங்கும். இந்த யானைகள் நலவாழ்வு முகாம் நடத்தப்படுவதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2 பொதுநல வழக்குகளும் நேற்று அனுமதி நிலையிலேயே தள்ளுபடி செய்யப்பட்டன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Tamil Nadu CM Jayalalitha has ordered to conduct a special health camp in Mudumalai sanctary for 45 elephants. The camp will be started from December 14th and continue for 48 days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X