For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக கொந்தளிப்பால் இடுக்கி உள்ளிட்ட கேரள மாவட்டங்களில் காய்கறி விலை பல மடங்கு உயர்வு

Google Oneindia Tamil News

தேனி: முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரளாவின் போக்கைக் கண்டித்து தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் நடந்து வரும் மக்கள் போராட்டம், அதிகாரப்பூர்வமற்ற பொருளாதாரத் தடை காரணமாக, இடுக்கி உள்ளிட்ட எல்லையோர மாவட்டங்களில் காய்கறி விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளதாம். காய்கறி வரத்து அடியோடு குறைந்ததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கேரள மக்கள் பயன்படுத்தும் காய்கறிகள், பால், பூ உள்ளிட்டவை பெரும்பாலும் அண்டை மாநிலமான தமிழகத்திலிருந்துதான் பெருமளவில் போகிறது. குறிப்பாக தேனி, நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர்,மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்துதான் போகின்றன. மேலும் தென் மாவட்டங்களை நம்பித்தான் கேரள மக்களில் முக்கால்வாசிப் பேர் உள்ளனர்.

தற்போது முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கிட்டத்தட்ட தமிழகம் முழுவதுமே கடும் கொந்தளிப்பு நிலவுகிறது. பல தரப்பிலும் கேரளாவுக்கு அனுப்பப்பட்டு வரும் பொருட்களை ஆங்காங்கு மக்கள் தடுத்து நிறுத்தி வருகின்றனர்.

குறிப்பாக தேனி மாவட்டத்திலிருந்து எந்த ஒரு பொருளுமே கேரளாவுக்குப் போகவில்லை. காய்கறிகள், பால், பூ என எதுவும போகவில்லை. கடந்த ஒரு வாரமாக குமுளி வழியாக கேரளாவுக்கான போக்குவரத்து முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் இடுக்கி, கோட்டயம், எர்ணாகுளம் உள்ளிட்ட தமிழக எல்லையையொட்டியுள்ள கேரள மாவட்டங்களில் பெரும் காய்கறித் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. கேரள மாநிலத்தின் பிற பகுதிகள் வழியாக தமிழகத்திலிருந்து இவர்களுக்கு காய்கறிகள் வருகின்றன. ஆனால் அவை பல நூறு கிலோமீட்டர் சுற்றிக் கொண்டு வருவதால் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாம்.

இடுக்கி உள்ளிட்ட எல்லையோர மாவட்டங்களுக்கு வழக்கமாக தேனி மாவட்ட எல்லை வழியாக தினசரி 20 முதல் 25 லாரி லோடுகளில் காய்கறிகள் வருமாம். ஆனால் தற்போது ஒரு லாரி கூட போகவில்லை. ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தையிலிருந்து மட்டும் தினசரி 1000 டன் காய்கறி, பழம் போன்றவை கேரளாவுக்குள் போகும். அவையும் தற்போது முடக்கப்பட்டு விட்டது.

இதையடுத்து நிலைமையை சமாளிக்க கர்நாடகா, ஆந்திராவிலிருந்து பல்வேறு பொருட்களை வாங்கும் முயற்சியில் கேரள வியாபாரிகள் இறங்கியுள்ளனர். ஆனால் கேரளாவின் இக்கட்டான நிலையைப் பயன்படுத்தி அந்த மாநில வியாபாரிகள் விலையை ஏற்றி விட்டதாக கூறப்படுகிறது.

இருப்பினும் நெல்லை, கன்னியாகுமரி, கோவை மாவட்ட எல்லைகள் வழியாக கேரளாவுக்குள் பொருட்கள் போவதில் சிக்கல் இல்லை என்பதால் கேரளாவில் நிலைமை இன்னும் மோசமடையவில்லை.

சங்கரன்கோவிலிலிருந்து தினசரி 50க்கும் மேற்பட்ட வாகனங்களில் பூக்கள் செல்வது வழக்கம். தற்போது இங்கிருந்து தொடர்ந்து பூக்கள் சென்றாலும் கூட வாகனங்களின் அளவு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. பிற பகுதிகளிலும் இதே நிலைதான் காணப்படுவதாக தெரிகிறது.

சபரிமலை ஐயப்ப சீசன் முடிவடைந்ததும், இந்த வழிகளிலும் பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கலாம் என்ற பேச்சு அப்பகுதிகளில் நிலவுகிறது. இதனால் கேரள அரசும், அரசியல் கட்சிகளும் தமிழகத்திற்கு எதிரான நிலையைக் கைவிடாவிட்டால் வரும் நாட்களில் போராட்டம் பெருமளவில் வெடிக்கும் என்றும், கேரளாவை பொருளாதார ரீதியாக முடக்கும் வகையில் பல்வேறு தரப்பும் வியூகம் வகுக்கலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது.

English summary
Aagitations in Tamil Nadu have its impact in Kerala in the form of price rice of veggies and other things which are coming from TN.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X