For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'தப்பு செஞ்சா தூக்கம் வராதே' - ஜெ சொன்ன குட்டிக் கதை!

By Shankar
Google Oneindia Tamil News

சென்னை: வெள்ளிக்கிழமை நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா சொன்ன கதை:

"இன்னும் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு சிறு கதையை உங்களுக்குச் சொல்ல ஆசைப்படுகிறேன்.

ஒருவன் நேர்மையான அதிகாரி. தன் பணிகளில் கண்ணும் கருத்துமாக செயல்படக் கூடியவன். லஞ்ச லாவண்யங்களில் துளியும் ஈடுபடாதவன். ஒரு நாள் அவனை சிலர் அணுகி தவறான செயலுக்கு தூபமிட்டார்கள்.

ஒரே ஒரு காரியம்தான். சின்ன தவறுதான். அதை செய்தால் போதும் வாழ்நாளெல்லாம் வளமாக வாழுகிற அளவுக்கு பணம் கிடைக்கும். சிக்கிக் கொள்வதற்கு வாய்ப்பே கிடையாது... என்றெல்லாம் மூளைச் சலவை செய்து ஆசை வலை விரித்தார்கள்.

'எனக்கு ஒரு நாள் அவகாசம் கொடுங்கள் யோசித்துச் சொல்கிறேன்' என்றவன் வீட்டுக்கு வந்தான். விதிமுறைகளை மீறி அவன் இதுவரை எதையும் செய்ததில்லை.

ஒரே ஒரு முறை தானே? தவறு செய்யலாமா? கூடாதா? இரவெல்லாம் அவனுக்கு தூக்கம் இல்லை. யாரிடம் கேட்பது? தவறு செய்வதற்கு ஆலோசனையை பிறரிடம் கேட்பது அவமானம் இல்லையா? குழம்பியது அவன் மூளை.

முடிவெடுக்கவும் முடியாமல் உறக்கமும் கொள்ளாமல் அவன் யோசித்துக் கொண்டே இருக்க பொழுதும் விடிந்தது.

காபி எடுத்துக்கொண்டு அவனது தாய் அறைக்குள் வந்தார். இரவெல்லாம் தூங்காததை மகனின் கண்கள் காட்டிக் கொடுத்தன. அவள் விளக்கம் கேட்பதற்குள் அவனே முந்திக்கொண்டான்.

சரி, இதற்கான விடையை அம்மாவிடமே கேட்டுவிடுவோம் என்ற முடிவுக்கு வந்தவாறே அலுவலகத்தில் நடந்த விஷயத்தை அப்படியே விவரித்தான். 'இதை செய்வது சரியா அம்மா?' என்று கேட்டான்.

'வேண்டாமப்பா. எப்போதும் அதிகாலையில் உன்னை எழுப்பி காபி கொடுப்பதற்கு குறைந்தபட்சம் பத்து நிமிடம் ஆகும். நீ அவ்வளவு ஆழ்ந்து தூங்குவாய். ஆனால் இன்றோ இரவெல்லாம் தூங்காமல் உன் கண்கள் இரண்டும் சிவந்து முகம் சோர்வடைந்து இருக்கிறது. தவறான ஒரு காரியத்தை செய்யலாமா என நினைக்கிற போதே நமக்கு தூக்கம் போய்விடுகிறதே! அதுவே தவறை நாம் செய்துவிட்டால், ஆயுளெல்லாம் நமக்கு தூக்கம் வராதே! நான் அதிகம் படிக்காதவள். உனக்கு புரியும் என்று நினைக்கிறேன்...' என்று சொல்லிச் சென்றாள் அவனது தாய்.

அன்று முதல் அவன் முறைகேடான எந்தக் காரியத்தையும் ஏறெடுத்துப் பார்ப்பதையே தவிர்த்தான். அனைவரிடமும் நற்பெயரை ஈட்டினான். தன் வாழ்வுக்குத் தேவையான அளவுக்கு செல்வங்கள் தானாகவே அவனிடம் நேர்மையான வழியில் வந்து சேர்ந்தன.

இந்தக் கதை போலத்தான் நாம் செய்யும் தவறு நாம் செய்யும் துரோகம், அது தூக்கத்தை தொலைத்துவிடும். மனச்சாட்சி நம்மை தினம் பிடித்து உலுக்கும்.

ஆக, அத்தகைய அமைதியைக் கெடுக்கும் எந்தக் காரியங்களிலும் ஈடுபடாமல் நம் பொதுவாழ்வை அமைத்துக் கொண்டோம் என்றால், நாமும் சரி, நாம் சார்ந்திருக்கும் இயக்கமும் சரி இவ்வுலகமே உற்று நோக்கும் அதிசய பீடமாய் உயர்ந்து நிற்கும் என்பது நிச்சயம்," என்றார் ஜெயலலிதா.

இந்தக் கதையை யாருக்காக 'அம்மா' சொல்கிறார் என்பது புரியாமல் அதிமுகவினர் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டது தனிக் கதை!

English summary
Jayalalitha, the CM of Tamil Nadu told a short story of betrayal and dishonesty for her cadres in the general council meet of ADMK that held on Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X