தயா பொறியியல் கல்லூரி விவகாரம்: கலெக்டர் முன் ஆஜராகி அழகிரி வக்கீல் விளக்கம்
மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் கால்வாயை ஆக்கிரமித்து தயா பொறியியல் கல்லூரி கட்டப்பட்ட விவகாரத்தில் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் வழக்கறிஞர் கலெக்டர் சகாயம் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார்.
மதுரை அருகே மத்திய அமைச்சர் மு.க. அழகிரி குடும்பத்திற்கு சொந்தமாக தயா பொறியியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி பாசனக்குளம் கால்வாய் பகுதிகளை ஆக்கிரமித்து மதகுகளை சேதப்படுத்தியதாக விவசாயி ராமலிங்கம் என்பவர் மதுரை கலெக்டரிடம் புகார் கொடுத்தார்.
இந்த புகார் குறித்து மு.க. அழகிரி, அவரது மனைவி காந்தி அழகிரி, மகன் துரை தயாநிதி ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு மதுரை கலெக்டர் சகாயம் நோட்டீஸ் அனுப்பினார். இதை எதிர்த்து அழகிரி தரப்பில் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நோட்டீசில் உள்ள சில வாசகங்களை நீக்கிவிட்டு மீண்டும் அனுப்புமாறு உத்தரவிட்டது. அதன்படி புதிய நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த விவகாரம் குறித்து இன்று தன் முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சகாயம் அந்த நோட்டீசில் தெரிவித்திருந்தார்.
ஆனால் இன்று அழகிரிக்கு பதில் அவருடைய வழக்கறிஞர் ஜானகி ராமலு சகாயம் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார்.
அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
பாசனக் கால்வாயை ஆக்கிரமித்து தயா பொறியியல் கல்லூரியை கட்டவில்லை என்று கலெக்டரிடம் விளக்கினோம். கல்லூரியை மாவட்ட வருவாய் அதிகாரி ஆய்வு செய்தார். அந்த ஆய்வறிக்கையை கொடுக்குமாறு கேட்டுள்ளோம். அறிக்கை கிடைத்த பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications