For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'பீஃப் உண்பவரா அம்மா?'- பொன்னையன் கொதிப்பு... நக்கீரன் மீது வழக்கு!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: உண்மைக்கு மாறாக செய்தி வெளியிட்ட நக்கீரன் மீதும் அதன் உரிமையாளர், வெளியீட்டாளர் மற்றும் ஆசிரியர் குழு பொறுப்பாளர்கள் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் அறிவித்துள்ளார்.

மாட்டுக்கறி சாப்பிடும் மாமி நான் என்ற தலைப்பில் முதல்வர் ஜெயலலிதா பற்றி நக்கீரன் இதழ் வெளியிட்ட கட்டுரையைக் கண்டித்து இன்று முழுவதும் அதிமுகவினர் தமிழகம் முழுக்க நக்கீரன் இதழ்களை எரித்தனர். சென்னையில் அந்த பத்திரிகை அலுவலகமும் தாக்குதலுக்குள்ளானது.

இந்த நிலையில், இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:

முதல்வர் ஜெயலலிதாவின் புகழுக்கும், எம்.ஜி.ஆர். அவர்களுடைய புகழுக்கும் களங்கம் உருவாக்க வேண்டும் எனும் தீய எண்ணத்துடன், இன்று வெளியான நக்கீரன் ஏட்டிலும், கடைகளில் தொங்கவிடப்பட்ட நக்கீரன் வால்போஸ்டர்களிலும், ஜெயலலிதாவின் புகழைக் கெடுக்கும் வண்ணம், 'அம்மா பீஃப் உண்பவர்' என்று முற்றிலும் உண்மைக்கு மாறான, ஒருகாலும் நடைபெறாத செய்தியை திட்டமிட்டு கெட்ட நோக்குடன் வெளியிட்டு உள்ளார்கள்.

ஜெயலலிதாவை, எம்.ஜி.ஆர். கொள்கை பரப்புச் செயலாளராக நியமிப்பதற்கு எடுத்த முடிவிற்கு கே.ஏ.கே., எஸ்.டி.எஸ். மற்றும் நானும் எதிர்ப்பு தெரிவித்தோம் என்று முற்றிலும் உண்மைக்கு மாறான செய்தியினையும், எங்கள் முன்னிலையில் 'அம்மா பீஃப் உண்பவர்' என்று எம்.ஜி.ஆர். கூறினார் என்ற பொய்ச் செய்தியினையும் அவதூறாக வெளியிட்டுள்ளார்கள்.

கே.ஏ.கே., எஸ்.டி.எஸ்., நான் உள்ளிட்டோர், ஜெயலலிதாவை கொள்கை பரப்புச் செயலாளராக நியமிப்பதற்கு எந்தவித எதிர்ப்பையும் எக்காலத்திலும் எம்.ஜி.ஆர். அவர்களிடம் தெரிவித்ததே இல்லை.

எம்ஜிஆரும், ஜெயலலிதா பீஃப் உண்பவர் என்று ஒரு காலத்திலும் கூறியதுமில்லை.

கே.ஏ.கே., எஸ்.டி.எஸ்., நான் மற்றும் எம்.ஜி.ஆர். ஆகியோர் கலந்து கொண்டதாக அவதூறாகவும், பொய்யாகவும் நக்கீரன் ஏட்டில் கூறப்பட்டுள்ள அப்படிப்பட்ட நிகழ்வு ஒரு போதும் நடந்ததே இல்லை.

எம்ஜிஆர் ஒருபோதும் பீஃப் உண்ணமாட்டார். ஜெயலலிதாவும் ஒரு போதும் பீஃப் உண்ணமாட்டார். முதல்வர் ஜெயலலிதா சமையலில் ஈடுபடுவதே இல்லை என்பதுதான் உண்மை. அப்படி இருக்க, ஜெயலலிதா சமைத்துப் போட்டார் என்ற செய்தி வெளியீடு விஷத்தன்மையும், அவதூறும் நிறைந்தது. ஜெயலலிதா, அவரது வீட்டிலேயே கொள்கை ரீதியாக ஒருகாலத்திலும் இதை அனுமதிப்பதே இல்லை. இவைதான் உண்மை நிலை.

இப்படிப்பட்ட நிலையில், தீய நோக்கத்தோடு முற்றிலும் உண்மைக்கு மாறான செய்தியினை திட்டமிட்டே அவதூறு பரப்ப வேண்டும் என்ற உணர்வுடன் வெளியிட்ட நக்கீரன் ஏட்டின் மீதும், அதன் உரிமையாளர், பப்ளிஷர்ஸ் மற்றும் எடிட்டோரியல் பொறுப்பாளர்கள் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்."

இவ்வாறு பொன்னையன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

English summary
AIADMK organising secretary Ponnaiyyan announced a legal action against Nakkheeran and ites Editorial chiefs for publishing a defamatory article on Jayalalitha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X