For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அழுகிய பழத்தை நீக்குவதற்காக மரத்தையே வீழ்த்தலாமா?- பிரதீபா பாட்டீல் கேள்வி

Google Oneindia Tamil News

Prathiba Patil
டெல்லி: அன்னா ஹஸாரே தலைமையிலான ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் போராட்டங்களை மறைமுகமாகக் குறிப்பிட்டு தனது குடியரசு தின விழா உரையில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் கூறுகையில், சீர்திருத்தங்களைக் கொண்டு வரும்போது நாட்டின் அடிப்படை பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். அழுகிய பழங்களை நீக்க வேண்டும் என்பதற்காக மரத்தை உலுக்கும்போது அந்த மரமே கீழே விழுந்து விடும்படி செயல்படக் கூடாது என்றார் அவர்.

இன்று நாட்டின் 63வது குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் ஆற்றிய உரை:

63-வது குடியரசு தினத்தையொட்டி நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாம் சிக்கல் மிக்க, சவால் நிறைந்த கால கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாடுகள் ஒன்றையொன்று சார்ந்திருக்கும் நிலையை உலகமயமாக்கல் ஏற்படுத்தியுள்ளது. எந்தவொரு நாடும் தனித்து நின்று செயல்பட முடியாது.

இந்த நிலையில் நமது கண்ணோட்டமும், நமது இலக்குகளும் தெளிவாகவே உள்ளன. வளர்ச்சி பெற்ற நாடாக நாம் உருவாகிட வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டுள்ளோம். நமக்கு பொருளாதார செழிப்பு மட்டுமே இலக்கு அல்ல, சம வாய்ப்பு, சம நீதி உள்ள இந்தியாவை உருவாக்கவே விரும்புகிறோம்.

இதை எப்படி சாதிக்கப் போகிறோம்? காலத்தை வென்ற நமது வாழ்க்கை நெறிகள், நமது சுதந்திரப் போராட்டத்தின் கொள்கைகள், நமது அரசமைப்புச் சட்டம், நமது ஒற்றுமை, ஆக்கப்பூர்வ அணுகுமுறை, வளர்ச்சி பெற வேண்டும் என்ற வேட்கை ஆகியவற்றின் அடிப்படையிலேயே நமது இலக்கை அடையப் போகிறோம்.

நமது பண்பாடு கடமையையும், உரிமையையும் தெளிவாக வரையறுத்துள்ளது. நமது எண்ணங்களிலும், செயல்களிலும் மனித நேயம் மேலோங்கி இருக்க வேண்டும் என்று நமது பண்பாடு இயம்புகிறது.

நல்லிணக்கம், எல்லோரும் இன்புற்றிருக்கவேயன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே, வசுதைவ குடும்பகம் (உலகமே ஒரு குடும்பம்) ஆகியவையே நமது பண்பாட்டின் சாரமாகும். இயற்கையுடன் இணைந்து மனிதன் வாழ வேண்டும் என்பதையே நமது பண்பாடு வலியுறுத்துகிறது. பல்லாயிரம் ஆண்டு கால வரலாற்று, கலாசாரப் பின்னணி உள்ள நாம் அந்த உயர்ந்த குறிக்கோள்களின்படி வாழ வேண்டும்.

சுதந்திரப் போராட்டத்திலிருந்து நாம் ஊக்கம் பெற முடியும். தேச நிர்மாணக் குறிக்கோளை முக்கியப் பணியாக மேற்கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தால்தான் நாடு முன்னேறும்.

வறுமை, பசி, சத்துணவின்மை, நோய்கள், கல்வியறிவின்மை ஆகியவற்றை ஒழிப்பதே நமது தலையாய கடமையாக இருக்க வேண்டும். அனைத்து சமூக நலத் திட்டங்களும் சிறப்பாகச் செயல்படுத்தப்பட வேண்டும். ஒளிவுமறைவற்ற, ஊழலற்ற சூழலில் அவை செயல்படுத்தப்பட வேண்டும்.

சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் தரமான கல்வி அளிக்கப்பட வேண்டும்.

கிராமப்புறங்களுக்கும் சுகாதாரச் சேவை விரிவுபடுத்தப்பட வேண்டும். மக்களுக்கு குறைந்த செலவில் தரமுள்ள மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியம்.

மானாவாரி நிலச் சாகுபடியில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியம். ஏனெனில், ஏழை விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களில் பெரும்பாலானோரும் மானாவாரி நிலச் சாகுபடியையே நம்பியுள்ளனர்.

கருவிலேயே பெண் சிசுக்களை அழிப்பது, குழந்தைத் திருமணம், வரதட்சிணை போன்ற பெண்களுக்கு எதிரான கொடுமைகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். இவற்றையெல்லாம் அடைவதற்கு நாம் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது.

நிதானம், தியாகத்தின் அடிப்படையில்தான் நாடுகள் நிர்மாணிக்கப்படுகின்றன. இந்தியா போன்ற பெரியதொரு நாட்டில், ஒருமித்த கருத்து மட்டுமே நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லும். எனவே, அனைத்துப் பிரச்னைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணப்பட வேண்டும். ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமே இருக்க முடியாது.

பல்வேறு நலத் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அருமையான பல சட்டங்களை நாடாளுமன்றம் இயற்றியுள்ளது. நீதித்துறை மதிப்புமிக்கதாக உள்ளது. எனினும், நமது அரசுசார் அமைப்புகள் குறையில்லாதவையாக உள்ளன எனக் கூறமுடியாது. அதற்காக சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும் எனக் கோரி அடிப்படையையே தகர்த்துவிடக் கூடாது.

குறுகிய காலப் பிரச்னைகளுக்காக நீண்ட கால இலக்குகளை மறந்துவிடக்கூடாது. நமது உறுதியான நெறிமுறைகளின் அடிப்படையில் வலுவான, வளமான இந்தியாவை நாம் ஒன்றுபட்டு உருவாக்குவோம் என்றார் பிரதிபா பாட்டீல்.

English summary
In an apparent reference to the civil society movement for a strong Lokpal, President Pratibha Patil today said one has to be cautious in bringing about reforms so that the tree of democratic institutions does not come down. "While bringing about reforms and improving institutions, we have to be cautious that while shaking the tree to remove the bad fruit, we do not bring down the tree itself", she said in her address to the nation on the eve of 63rd Republic Day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X